சென்னையில் இருந்து நேற்றிரவு பொள்ளாச்சி சென்ற தனியாருக்கு சொந்தமான குளிர், படுக்கை வசதிகள் கொண்ட கே.பி.என். பேருந்து ஒன்று வேலூர் மாவட்டம் காவேரிபாக்கம் அடுத்த அவலூரில் லாரியை முந்தி செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் தீப்பிடித்து எரிந்ததில் பேருந்தில் இருந்த 22 பயணிகள் உடல் அடையாளம் காண முடியாத அளவி்ற்குக் கருகி உயிரிந்துள்ள நிகழ்வு தமிழகத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய விபத்து இதுதான்.
தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் விபத்தில் 22 பேர் இறந்ததற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதோடு, உயிரிழந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் சின்னையா விபத்து நடந்த இடத்தை நேரில் பார்த்து அதிகாரிகளிடம் விவரத்தை கேட்டறிந்து முதலமைச்சரிடம் தகவல் தெரிவிப்பதோடு நின்று விடாமல், இதுபோன்ற விபத்து இனியும் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை முதலமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்ய வேண்டும்.
தனியார் பேருந்துகளை பொறுத்தவரை, அவைகளுக்கு இடையே தொழில் போட்டிகள் அதிகமாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகளில் குறைந்த கட்டணமே இருந்தது. தற்போது பல மடங்கு அதிகரித்து விட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் இரயில் பயணத்துக்கு மாறி விட்டனர்.
அப்படியிருந்தும் தமிழகத்தில் தனியார் பேருந்துகள் பெருகிவிட்டன. தொழில் போட்டிக்காக தனியார் நிறுவனங்கள் தங்களது பேருந்துகளில் தூங்கும் வசதி, குளிர்சாதன வசதிகள் ஏற்படுத்தி கொடுத்து பயணிகளை கவர்ந்து வருகின்றன. தற்போது விபத்துக்குள்ளான பேருந்தும் படுக்கையுடன் குளிர்சாதன வசதிகள் கொண்டவைதான்.
விபத்தில் சிக்கிய தனியார் பேருந்து குளுகுளு வசதி செய்யப்பட்டு இருந்ததால் ஜன்னல்கள் அனைத்தும் கண்ணாடியால் மூடப்பட்டு இருந்துள்ளது. இந்த கண்ணாடியை பயணிகளால் திறக்க முடியவில்லை. முன் பக்கத்தில் இருக்கும் கதவு வழியாக மட்டுமே பயணிகள் வந்து செல்ல முடியும். இதன் காரணமாக பயணிகள் யாரும் வெளியேற முடியாமல் பேருந்தின் உள்ளேயே மாட்டிக் கொண்டனர். இதுதான் பல பயணிகள் உயிரிழக்க முக்கிய காரணம்.
சொகுசுப் பேருந்துகள் விபத்தில் சிக்கிக் கொள்ளும் ஆபத்தான நேரங்களில் பயணிகள் வெளியே தப்பிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு குறைபாட்டுடன் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டு இருப்பதே இது போன்ற அதிகமான உயரிழப்புகள் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
பயணிகளைக் கவருவதற்கு வசதிகளை செய்வதாக கூறி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்து நிறுவனங்கள் அவர்களின் உயிரைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்துவதில்லை என்பதுதான் உண்மை.
பெரும்பாலான தனியார் பேருந்துகளில் அவசர காலத்தில் தப்பிக்க கதவுகள் இருப்பதில்லை. அமருவதற்கும், தூங்குவதற்கும் இருக்கைகளை அமைத்து ஜன்னல்களின் அளவைக் குறைத்துவிட்டதால் விபத்து நடந்தாலும் வெளிய தப்பி வரமுடியாத நிலை இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்ட பேருந்துகளில் இப்படிப்பட்ட அவசர வெளியேற்ற வசதிகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தயாரிக்கப்படும் இந்த சொகுசு பேருந்துகளில் அப்படிப்பட்ட வசதி இல்லாத நிலையில் அவைகளுக்கு இயக்க உரிமை அளித்தது போக்குவரத்துத் துறையின் குற்றமல்லவா? இதை அரசு விசாரிக்க வேண்டும்.
தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் வண்ணம் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு தனியார் பேருந்துகளின் வேகத்தைக் குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுப்பதன் மூலமே இனி வரும் காலங்களில் இதுபோன்ற கோர விபத்துக்களைத் தடுக்க முடியும்.
கடந்த 23ஆம் தேதி திருச்சி அருகே தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் உயிரிழந்ததும் அதீத வேகம் காரணமாகவே என்பதை கருத்தில் கொண்டு பார்த்தால், வேகக் கட்டுப்பாடு அவசியம் என்பது புரிகிறது. அரசு உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.