Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெ.வை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்ப 'ரா' முயற்சி?

ஜெ.வை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்ப 'ரா' முயற்சி?
, செவ்வாய், 24 மே 2011 (16:24 IST)
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையை இந்திய உளவுத் துறையான 'ரா' மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதுநாள் வரை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை பயன்படுத்திக் கொண்டு விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் பணியை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியும், அதன் (மத்திய ) அரசும், ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்றதும், அவர் மூலமாக சிக்கல் ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரையும் வளைக்கும் முயற்சியை தொடங்கியது.

இதன் முதல்கட்ட நடவடிக்கையாகத்தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததோடு, தேனீர் விருந்துக்கு டெல்லி வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.

ஏற்கனவே விடுதலைப் புலிகளுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் எதிரான உணர்வுகளை கொண்டிருந்த ஜெயலலிதா,2009 போரில் சிங்கள் இராணுவத்தினரின் கொடூர செயல்கள் குறித்த தகவல்கள் மற்றும் அது குறித்த செய்திகளை அறிந்த பின்னர்தான் ஓரளவுக்கு தனது நிலையை மாற்றிக் கொண்டார்.

குறிப்பாக இலங்கையில் ஈழத்தமிழர்கள் முகாம்களில் படும் அவதிகளை நேரில் கண்டறிந்து வந்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், இது தொடர்பாக எடுத்துக் கூறிய உண்மைகள்தான் அவரை ஓரளவுக்கு மாற்றியது.

அத்துடன் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்பினர்கள் வாயிலாகவும் அவருக்கு இலங்கை நிலவரம் குறித்து எடுத்து சொல்லப்பட்டது.

அதன் பின்னரே இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கினார் ஜெயலலிதா.

இந்நிலையில் அவரது இந்த மாற்றம் வெறும் ஓட்டுக்களை பெறுவதற்காகத்தானோ அல்லது அவர் மாறவே இல்லையோ என்ற எண்ணம், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அவர் "ஜெயா" தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது தோன்றியது.

அதாவது ஈழத் தமிழர் பிரச்சனை ஒரு சர்வேதேச பிரச்சனை என்றும், மத்திய அரசு சம்பந்தப்பட்ட விடயம் என்றும், இதில் மாநில அரசு ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் கூறியதை பார்த்தபோது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்பினர்களின் மனதில,"ஐயோ... இவரும் கருணாநிதி கூறியதைப் போன்றே கை கழுவும் பாணியில் பேசுகிறாரே...!" என்ற ஐயம் ஏற்பட்டது.

இந்நிலையில் போர்க் குற்றச்சாற்ற்றுச்சாட்டிலிருந்து இலங்கையையும், அதன் அதிபர் ராஜபக்சவையும் முட்டுக்கொடுத்து காப்பாற்ற தீவிர முயற்சியில் இறங்கியுள்ள மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு, முதல்கட்டமாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், அதிபர் ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றும் கருத்து கூறிய ஜெயலலிதாவிடமிருந்தும், தமிழகத்திலிருந்தும் குரல் எழும்பாத வகையில் முடக்கி போட திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

இதன் முதல்கட்டமாக ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையை இந்திய உளவுத் துறையான 'ரா' மூலம் மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதன் ஒரு அங்கமாக, இலங்கையில் இராணுவத்தின் பிடியில் இருக்கும் கே.பி. என்கிற பத்மநாதனை இந்திய தொலைகாட்சி ஒன்றின் மூலம் பேட்டி எடுத்து வெளியிட வைத்துள்ளது.

இந்தியத் தொலைக்காட்சிக்காக அந்த பேட்டி எடுக்கப்பட்டது எனக் கூறப்பட்டாலும், அந்த நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகளும் அதற்கு கே.பி கூறும் பதில்களும்,கே.பி. யை ஒரு பகடைக்காயாக பயன்படுத்தி ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திசை திருப்ப 'ரா' முயற்சிப்பது தெள்ளத் தெளிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளே ராஜீவ் காந்தியைக் கொன்றதாகக் குறிப்பிடும் கே.பி., அதற்காக மன்னிப்புக் கோருகிறார். பின்னர் அவர் குறிப்பிடுகையில் ஜெயலலிதா மீது புலிகள் ஆத்திரம் அடைந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு அதன் காரணமகவே "இசட்" ரக பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டதாகவும், சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் புலிகள் ஜெயலிதாவையும் சுட்டுக்கொண்றிருபார்கள் என்றும் கே.பி. அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வலது கரம் தான் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரபாகரன் தன்னை ஒரு அரசன் போலக் கருதியதாகவும், அதற்கு தமிழ் நாட்டு அரசியல்வாதிகளே காரணம் எனவும் கூறியுள்ளார்.

இதுதவிர இனி இலங்கையில் ஈழ போராட்டம் எழாது என்றும் கே.பி. வாயிலாகவே சொல்ல வைத்துள்ளது 'ரா'.

தான் உயிருடன் உள்ளவரை இலங்கையில் இனியொரு கிளர்ச்சியை புலம்பெயர் தமிழர்களால் ஏற்படுத்த முடியாது என்றும் கூறியுள்ள கே.பி., இலங்கை மீதான போர்க் குற்றச்சாற்றையும் நீர்த்துப் போகும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

"இலங்கைப் படையினர் மீது போர்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் ஐ.நா. அறிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?" என்ற கேள்வியை போட்டு வாங்கி, இலங்கைக்கு ஆதரவாக கருத்துக்களை அவரிடமிருந்து பெற்றுள்ளது 'ரா'.

"நாம் புதிய சகாப்தம் ஒன்றின் ஆரம்பத்தில் இருக்கிறோம். நடந்ததெல்லாம் நடந்ததுதான். ஐ.நா. அறிக்கையின்படி இரு தரப்புகளுமே தவறிழைத்துள்ளன. இந்த அறிக்கை எந்தவொரு நல்லிணக்கத்துக்கும் உதவப்போவதில்லை.இது ஒரு இடைஞ்சல்தான். யாருக்கும் இந்த அறிக்கையால் பயனில்லை.அது ஒரு தகவல் அறியும் நடவடிக்கை; ஒரு அறிக்கை, அவ்வளவுதான்.

இந்த அறிக்கையுடன் வன்னிக்குப் போனால் ஆயிரம் அல்லது லட்சம் மக்கள் இதனால் பயனடைவார்களாக இருந்தால்... அப்போது அது வேறு கதையாக இருக்கும். ஆனால் இந்த அறிக்கையால் எவருமே நன்மையடையப் போவதில்லை என்பதுதான் உண்மை. முழு நாடும் இந்த அறிக்கைக்கு எதிராக இருக்கிறது. கள யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். முடிந்தது முடிந்ததுதான்.ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?" என்று கூறியுள்ளார் கே.பி.

ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருப்பதால், அவருக்கும் மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசின் தயவு தேவையாக உள்ளது.

இதை பயன்படுத்தி, இலங்கை விடயத்தில் ஈழத் தமிழர்களையும், அதற்காக போராடிய அமைப்புகளையும் தங்களது கைப்பாவையாக ஆட்டுவிக்க நினைத்த காங்கிரஸ் கட்சியும், 'ரா'வும் இன்னும் எத்தகைய "ஈரக் குலையை அறுக்கும்" திட்டத்தை வைத்துள்ளனவோ...?!

Share this Story:

Follow Webdunia tamil