Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீனவர் பிரச்சனையும், பகை மூட்டும் சதியும்

மீனவர் பிரச்சனையும், பகை மூட்டும் சதியும்
, திங்கள், 21 பிப்ரவரி 2011 (20:26 IST)
இலங்கையின் கடற்பகுதியில் வெகு தூரம் சென்று, யாழ்ப்பாண கடற்பகுதியில் மீன் பிடிக்க முயன்ற தமிழக மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சுற்று வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதும், அதற்குப் பிறகு புதுக்கோட்டை மீனவர்கள் மேலும் 24 பேர் கைது செய்யப்பட்டு, பிறகு இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருப்பதும் தமிழக மீனவர்கள் பிரச்சனையில் ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது.

ஒரு வாரத்திற்கு முன் நிகழ்ந்த இவ்விரு நிகழ்வுகளும் மிக ஆழமாக பரிசீலிக்கப்பட வேண்டிய முக்கிய நிகழ்வுகளாகும். இலங்கையின் வட பகுதியிலுள்ள (தமிழீழப் பகுதி) பருத்தித் துறை கடற்பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 18 இழுவைப் படகுகளை (Trawlers) ஈழத்து மீனவர்கள் சுற்றி வளைத்து, அவர்கள் தங்கள் படகுகளில் இறக்கிக் கொண்டு வந்து சிறிலங்க காவல் துறையினரிடம் ஒப்படைத்ததாக ஈழத்துச் செய்திகள் கூறின. அததோடு, கைப்பற்றப்பட்ட இழுவைப் படகுகளின் படங்களும், அதிலிருந்த மீனவர்களின் படங்களும் வெளியாகி இருந்தது. நமக்கும் அந்த விவரங்கள் முழுமையாக மின்னஞ்சலில் வந்தது.
FILE

18 இழுவைப் படகுகளில் இருந்த 106 மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்ற செய்தி தமிழ்நாட்டை எட்டிய சில நிமிடங்களில், அதனைக் கண்டித்து மறுநாள் ஆளும் தி.மு.க. சார்பில் சென்னையில் உள்ள துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது!

தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லைப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தாலே அங்கு சிறிலங்க கடற்படைக் கப்பல்கள் வந்து மீது தாக்குதல் நடத்தும், அப்படிப்பட்டத் தாக்குதல்கள் 1979 முதல் நடைபெற்றும் வந்துள்ளது. 500க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும் உள்ளனர். நேற்று கூட கச்சத் தீவிற்கு அருகே - அதாவது இந்தியாவின் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் - 700 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, 4 வேகப் படகுகளில் வந்த சிறிலங்க கடற்படையினர் விரட்டியடித்தனர் என்று செய்தி இன்று மிக விரிவாக வெளியானது. “இதற்கு மேலும் இங்கு வந்த மீன் பிடித்தால் சுடுவோம்” என்று சிறிலங்க கடற்படையினர் மிரட்டியதாகவும் சில செய்திகள் கூறுகின்றன.

இந்தச் செய்தியை, அப்படியே கடந்த ஒரு வாரத்திற்கு முன்னால் வந்த செய்தியுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்...

இந்திய - இலங்கை கடல் எல்லைக்கு அருகில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை தாக்குகிறது, விரட்டியடிக்கிறது சிறிலங்க கடற்படை. ஆனால், இந்த எல்லைக் கோட்டைத் தாண்டி பல கடல் மைல்கள் தாண்டிச் சென்று யாழ்ப்பாணத்தின் பருத்தித் துறை அருகே சாதாரண நாட்டுப் படகில் அல்ல, இழுவைப் படகில் (Fishing Trawlers) மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை வந்து தடுக்கவும் இல்லை, தாக்குதலும் நடத்தவில்லை. மாறாக, ஈழத்து மீனவர்கள்தான் இழுவைப் படகுகளை சுற்றி வளைத்து தமிழக மீனவர்களை சிறைப்பிடித்துள்ளனர்!

தங்களுடைய எல்லைக்கு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை - அதுவும் சாதாரண நாட்டுப் படகில் அல்லது ஃபைபர் படகில் மீன் பிடிக்கும் மீனவர்கள் சுட்டுக் கொல்லும் சிறிலங்க கடற்படை, பெருமளவிற்கு மீன்களை அள்ளிச் செல்லும் திறன் கொண்ட இழுவைப படகில் வந்து யாழ்ப்பாணத்திற்கு அருகேயே மீன் பிடிக்கும் படகுகளை கண்டு கொள்ளாமல் விட்டதேன்?
webdunia
FILE

இதில்தான் சிறிலங்க அரசின் சதி இருக்கிறது என்கின்றனர் இரு பகுதி மீனவர்களும். இராமேஸ்வரம் மீனவர்கள் 106 பேரை சிறை பிடித்தப் பிறகு, ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஈழத்து மீனவர் கூட்டுறவு அமைப்பின் தலைவர் தவரத்தினம் ஒரு செய்தியைக் கூறியுள்ளார், அது மிகவும் கவனிக்கத்தக்கது.

“தமிழ்நாட்டு மீனவர்கள் எங்கள் கடல் பகுதியில் வந்து மீன் பிடிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. காரணம் இரு பகுதி மீனவர்களும் இந்த கடற்பகுதியை தங்களுக்குப் பொதுவானதாகவே கருதி மீன் பிடித்து வந்துள்ளனர். யாழ்ப்பாணத்து மீனவர்களாகிய நாங்கள், தமிழ்நாட்டில் இருந்து இழுவைப் படகில் வந்த, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதையே எதிர்த்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

அது மட்டுமல்ல, “இப்படி இழுவைப் படகில் வந்து பெரும் வலைகள் வீசி, அடியோடு மீன் வளத்தை வாரிச் செல்வதால் எங்கள் வாழ்வு எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறது என்பதை நாங்கள் ஏற்கனவே எடுத்துக் கூறியுள்ளோம். கடல் மீன் வளத்தை அழிக்கும் இப்படிப்பட்ட (Trawler Fishing) இழுவைப் படகு மீன் பிடித்தலை நாங்கள் எப்போதோ நிறுத்திக் கொண்டுவிட்டோம். எனவே இப்பிரச்சனை பெரிதாவதற்கு முன்னர் தீர்வு காண வேண்டும்” என்று தமிழக மீனவர்களுக்கு அவர் கோரிக்கையும் விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஈழத்து மீனவ அமைப்புகள் சில இங்கு வந்து, இங்குள்ள மீனவர்கள் அமைப்புகள் சிலவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் இது குறித்து பேசப்பட்டது. ஆயினும் இழுவை படகு மீன் பிடித்தல் தொடர்கிறது என்றே ஈழத்து மீனவர்கள் குற்றம் சாற்றுகின்றனர்.

இந்தப் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசும் முன்வரவில்லை. இது தமிழக மீனவர்களிடையேயும் உள்ளது. இழுவைப் படகு மீனவர்களுக்கும், நாட்டுப் படகு மீனவர்களுக்கும் அடிக்கடி மோதல்கள் நிகழ்கின்றன. ஆனால் தமிழக அரசு கண்டுகொள்ளவதில்லை.

இப்படிப்பட்ட இழுவை படகு மீன் பிடித்தலை சிறிலங்க கடற்படை கண்டுகொள்ளாததன் இரகசியம் என்ன?

இதுதான் ஈழத்து மீனவர்கள் எழுப்பும் வினா. தமிழ்நாட்டிலிருந்து மட்டுமின்றி, ஆந்திர பகுதியில் இருந்தும் இப்படிப்பட்ட இழுவைப் படகுகளில் வந்து தங்கள் கடற்பகுதியில் நன்றாக உள்ளே வந்த மீன் பிடிக்கும்போதும் சிறிலங்க கடற்படை அவைகளை கண்டுகொள்வதில்லை என்று ஈழத்து மீனவர்கள் கூறுகின்றனர். மாறாக, இந்த ஆண்டில் மட்டும் இரண்டு, மூன்று தடவை இப்படிப்பட்ட இழுவைப் படகுகள் யாழ்ப்பாணம் பகுதிக்கு நெருக்கமாக வந்து வலை வீசி இழுத்துச் சென்றதில், ஈழத்து மீனவர்கள் விரித்திருந்த பல வலைகளை அறுத்துச் சென்று விட்டன. அது குறித்து புகாரும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிறிலங்க கடற்படை கண்டுகொள்வதில்லை.
webdunia
FILE

இதன் சூட்சமம் யாதெனில், ஒரு பக்கம் தமிழக மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்கும் பகைமையை உண்டாக்குவது. இரண்டாவது அதையே காரணம் காட்டி, தமிழகத்து மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடிப்பது. உண்மையில் இழுவைப் படகுகளிலும், அதை விட பெரிய மீன் பிடி படகுகளிலும் வந்து மீன் பிடிக்கும் கலங்களைத்தான் சிறிலங்க கடற்படை விரட்டியடித்திருக்க வேண்டும். மாறாக, எல்லைக்கருகே மீன் பிடிக்கும் நாட்டு படகு மீனவர்களை விரட்டுகிறது, தாக்குகிறது, கொல்கிறது.

இப்படி தொழில் ரீதியான பிரச்சனை மீனவர்களுக்கு இடையில் இருப்பதை பயன்படுத்தி, எல்லைப் பிரச்சனையை திசை திருப்பப் பார்க்கிறது சிறிலங்க அரசு. அதாவது இழுவைப் படகு மீன் பிடித்தலை அனுமதிப்பதன் மூலம் இரு பகுதி மீனவர்களிடையேயும் பகைமையை உருவாக்கி, அதன் மூலம் பன்னாட்டுச் சட்டத்திற்குப் புறம்பாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்துவது.

இது மட்டுமின்றி, இழுவைப் படகுகளையும், தடை செய்யப்பட்ட வலைகளையும் பயன்படுத்தி மீன் பிடித்தலை அனுமதிப்பதன் மூலம், ஈழத்து மீனவனின் வாழ்வாதரத்தை முற்றிலுமாக அழிப்பதற்கு தமிழகத்து (இழுவைப் படகு மீனவர்களைக் கொண்டே) சதித் திட்டம் தீட்டுகிறது. இது புரியாமல், அந்தக் கடற்பகுதிக்கு சென்று இராமேஸ்வரம் இழுவைப் படகு மீனவர்கள் மீன் பிடித்து, பகையை உருவாக்குகின்றனர்.

இது மீனவர்களை வைத்தே மீனவர்களை அழிக்கும் சதியாகும். மீனவர்கள் மத்தியில் வலைகளை பயன்படுத்துதல் தொடர்பாக இருந்துவரு்ம தொழில் ரீதியான மோதலை, இரு பகுதி மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையை மறுக்க பயன்படுத்தப் பார்க்கிறது சிறிலங்க அரசு. இதனை தமிழக அரசும், டெல்லி அரசும் மெளனமாக வேடிக்கை பார்க்கின்றன.

தமிழ்நாட்டின் மீனவர் அமைப்புகள் இதனை சரியாக புரிந்துகொண்டு, ஈழத்து மீனவர்களுடன் நேரடியாக பேசி, பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். ஈழ்த்திற்கும், தமிழகத்திற்கு இடைப்பட்ட கடற்பகுதி இரு பகுதி தமிழருக்கும் சொந்தமானது. அங்கு தடையின்றி மீன் பிடிக்கும் உரிமையையும் நிலை நாட்ட வேண்டும். தனித்து அல்ல, ஒன்றிணைந்து.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil