கடந்த ஜூன் மாதம் பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது. அதிலிருந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. அப்படி நிர்ணயிக்கத் தொடங்கியதில் இருந்து இதுவரை 5 தடவை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு விட்டது. இந்நிலையில், நேற்றிரவு 6வது தடவையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு விட்டது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் 96 காசுகள் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு, தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு அமலுக்கு வந்தது.
மற்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவையும் இதே அளவுக்கு பெட்ரோல் விலையை உயர்த்துகின்றன. இவற்றின் விலை உயர்வு அறிவிப்பு இன்று நள்ளிரவு அமலுக்கு வருகிறது. இத்துடன், இந்த ஆண்டில் மட்டும் 8வது தடவையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.61.05 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
பத்திரிகை, தொலைக்காட்சி செய்திகளை படிக்காத, பார்க்காத வாகனஓட்டிகளுக்கு இன்று காலையில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. முன்பு 100 ரூபாய் கொடுத்து பெட்ரோல் போட சொன்னால் 1.74 லிட்டர் அளவு இருக்கும். இன்று 100 ரூபாய் கொடுத்து பெட்ரோல் போட்டால் 1.64 லிட்டர் அளவே இருந்துள்ளது. அதிர்ச்சி கலந்த ஆத்திரத்துடன் பெட்ரோல் போடுபவரிடம் சண்டைபோடும் வாகன ஓட்டியிடம், நேற்று நள்ளிரவு முதல் விலை உயர்ந்து விட்டதாக கூறியதும் ஆட்சியாளர்களை சபித்துக் கொண்டு சென்றுவிட்டார்.
ஆசைப்பட்டு வாகனம் வாங்குபவர்களுக்கு தற்போது பெட்ரோல் போடுவது பெரும் தலைவலியாக ஆகிவிட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசுக்கு வெளியில் இருந்து இடதுசாரிகள் ஆதரவு அளித்தனர். அப்போது இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளால் பெட்ரோல்- டீசல் விலை கட்டுக்குள் இருந்தது. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகள் ஆதரவை விளக்கியதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு பெட்ரோல் விலையை உயர்த்த நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது.
பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம் என்றைக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதோ அன்று முதல் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு தலையில் இடி விழுந்த மாதிரி ஆகிவிட்டது.
ஒரு பக்கம் ஒரு ரூபாய் கொடுத்து விட்டு நீங்கள் விரும்பும் வாகனங்களை எடுத்து செல்லலாம் என்று கார், இருசக்கர நிறுவனங்கள் விளம்பரம் செய்து வருகின்றன. ஆனால் தற்போது பெட்ரோல் விலையை உயர்வை பார்த்து வாகனங்கள் வாங்கும் எண்ணத்தையே மக்கள் மறந்துவிட வேண்டியதுதான்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் தி.மு.க.வும் இதை கண்டு கொள்வது கிடையாது. பெயரளவுக்கு பெட்ரோல் விலை உயர்வால் நகர வாழ் நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். எனவே இதன் விலையை உடனடியாக மத்திய விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறி நழுவிக் கொள்வார் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி.
இப்படி தராறுமாறாக பெட்ரோல் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசுக்கு தேர்தல் நேரத்தில் தான் மக்கள் சரியான பாடம் கற்பிக்க முடியும். தேர்தலில் அதையும் செய்யத் தவறினால் மக்களின் நிலைமை கேள்விக்குறிதான்?