உலக அளவில் ஒவ்வொரு நாட்டின் தூதரங்களும் அந்தந்த நாடுகளில் உளவு வேலைகளில் ஈடுபட்டுத் தொகுத்த தகவல்களை தங்கள் நாடுகளுக்கு அனுப்பி வைத்த இரகசிய விவரங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டதில் வேறு எந்த ஒரு நாட்டையும் விட மிகவும் ஆடிப்போயுள்ளது அமெரிக்காதான். சுறுக்கமான வாசகங்களாக அன்றாடம் அனுப்பப்பட்ட இரகசியத் தகவல்களை மிகுந்த சாமர்த்தியத்துடன் திரட்டி, அவைகளை பொது மக்களின் பார்வைக்கு கொண்டுவந்த விக்கிலீக்ஸ் இணையத்தளமும், அதன் நிறுவனர் ஜூலியன் அசாங்காவும் பாராட்டிற்குறியவர்கள் என்பதில் ஐயமேதுமில்லை.தங்களை ஆளும் அரசுகள் ‘தேசப் பாதுகாப்பு’ என்ற பெயரில் அயல் நாடுகளில் எப்படிப்பட்ட ‘சாகசங்களில்’ ஈடுபடுகின்றன, அவைகளின் நோக்கம் நாட்டிற்கும், உலகிற்கும் பயனளிக்கக்கூடியதா? அல்லது தங்கள் நாட்டின் நலனையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய அடுத்த நாட்டில் குழப்பம் விளைவிப்பதா என்பதை உலக மக்கள் புரிந்துகொள்ள விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இரகசிய தகவல்கள் போதுமானவையே.
பல இலட்சக்கணக்கில் திரட்டி வைத்துள்ள இராஜதநிர பரிமாற்றத் தகவல்களில் ஒரு துளியை, அதில் 240ஐ மட்டும் கடந்த திங்கட்கிழமை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. அதற்கே கோவம் கொண்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், விக்கிலீக்ஸ் இணையத் தளத்தை அந்நிய பயங்கரவாத அமைப்பாக (Foreign Terrorist Organization - FTO) அறிவித்து அதனை தடை செய்ய வேண்டும் என்றும், அதன் நிறுவனர் ஜூலியன் அசாங்காவை கைது செய்ய வேண்டும் என்றும் உரத்து குரல் கொடுத்துள்ளனர். ஆக இவர்கள் வசதிக்கு ஆடவில்லை என்றால் பயங்கரவாத அமைப்பு என்று முத்திரையிட்டு தடை செய்வார்கள் என்பது இந்தக் கூக்குரல்கள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.அது மட்டுமல்ல, விக்கிலீக்ஸ் மீது விவரங்களைத் திருடியதாக வழக்கு தொடரவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக செய்தி! என்ன வினோதம்! உலகம் முழுவதும் தங்களது ‘அபார’ திறன் கொண்ட உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வைக் கொண்டு ஒரு பெரிய வலையமைப்பை உருவாக்கி, அந்நாடுகளின் பாதுகாப்பு இரகசியங்கள் மட்டுமின்றி, அந்நாட்டு்த் தலைவர்களின் பலவீனங்களைக் கூட ஆதாரப்பூர்வமாக திரட்டி வைத்துக்கொண்டு, அவைகளையும் சமயத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தி, பல நாடுகளில் “அரசியல் புரட்சி’களையும், ‘ஆட்சி மாற்ற’ங்களையும் ஏற்படுத்திய அமெரிக்கா, அதே வேலையை உலக மக்களின் அறிதலிற்காக ஒரு அமைப்பு செய்யும்போது அதனை திருடு என்கிறது! எந்தவித ஆதாரமும் இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்த நிலையிலும், ‘ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் உள்ளது’ என்று கூறிக்கொண்டு 2003ஆம் ஆண்டில் அந்நாட்டிற்குள் படையெடுத்து, அந்நாட்டைச் சூறையாடி, அங்கு ஒரு புடலங்காயும் இல்லை என்பது உலகத்திற்கு தெரியவந்ததும், ‘நாங்கள் படையெடுத்தது ஈராக்கில் ஜனநாயக அரசை ஏற்படுத்தவே’ என்று பூசி மெழுகிய அமெரிக்கா. அந்த நாட்டின் அதிபர் சதாம் உசேன் மட்டுமின்றி, 11 இலட்சம் ஈராக்கியர்களைக் கொன்றுவிட்டு, அதைப்போல் மேலும் இரண்டு மடங்கு பிள்ளைகளை அனாதைகளாக்கிவிட்டு, அங்குள்ள எண்ணெய் வளத்தை கைப்பற்றி தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர முடியாம ஏமாற்றத்துடன், இன்றைக்கு வெளியேறுகிறோம் என்று பேசிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டிற்கு, அதன் இரகசியங்கள் வெளியாவதில் சங்கடங்கள் இருக்கத்தானே செய்யும்? தங்களிடமுள்ள இரகசிய விவரங்களை வெளியிடப்போகிறோம் என்று முன்னறிவிப்பு செய்த பின்னரே விக்கிலீக்ஸ் கடந்த திங்கட்கிழமை இராஜதந்திர ரீதியில் பரிமாறிக் கொள்ளப்பட்ட 240 தகவல்களை வெளியிட்டது. அதற்கு முன்னரே அலறத் தொடங்கியது அமெரிக்கா. விக்கிலீக்ஸ் வெளியிடப்போகும் விவரங்கள் இந்தியாவுடனான உறவைப் பாதிக்கும் என்று கூறியது. அதனை இந்திய அரசிற்கும் வெளிப்படையாகத் தெரிவித்தது. இங்கு வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐ.நா.பாதுகாப்புப் பேரவையின் நிரந்தர உறுப்பினராக இந்தியா ஆவதற்கு (வீட்டோ அதிகாரமற்ற நிரந்தர உறுப்பினராக) ஆதரவு அளிப்போம் என்று பேசியபோது அனைவரும் ஐந்து நிமிடத்திற்கு கைகளைத் தட்டினர். ஆனால், விக்கிலீக்ஸ் வெளியிட்ட பரிமாற்ற விவரங்களில், “ஐ.நா.பாதுகாப்புப் பேரவை உறுப்பினராவதில் தனக்கே முதல் தகுதி இருப்பதாக இந்தியா நினைத்துக்கொண்டிருக்கிறது” என்று ஏகடியம் செய்துள்ள விவரம் வெளியாகியுள்ளது. இந்த ஏகடியம் வெளியான 24 மணி நேரத்தில், உலக விவகாரங்களில் இந்தியாவிற்கு தலைமைப் பொறுப்பு இருப்பதாக பீற்றுகிறது அமெரிக்கா. இங்குள்ள அரசு, இதெல்லாம் ஒரு பெரிய விடயமா? என்பதுபோல் ‘நாங்கள் கருத்து எதையும் சொல்ல மாட்டோம்’ என்கிறது, வெட்கக்கேடு! அந்நிய நாட்டுத் தலைவர்களின் கிரெடிட் கார்ட்டில் இருந்து அவர்களின் பயண விவரங்கள் வரை அனைத்தையும் உளவறிந்து கூறுமாறு தனது தூதரக அதிகாரிகளை அமெரிக்கா பணித்துள்ளது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது தாக்குதல் நடத்துவதற்கு பாலஸ்தீன அரசின் தலைவர் மெஹம்மது அப்பாஸ், எகிப்து அரசு ஆகியவற்றின் ஒப்புதலை பெற்றதையும், காசா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் போராளிக் குழுவை ஒழித்துக்கட்டியப் பிறகு அப்பகுதியை பாலஸ்தீன அரசின் கட்டுப்பாட்டிற்கு விட்டுவிடுவதாக இஸ்ரேல் அரசு ‘டீல்’ பேசிய அபார விவரங்களையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
ஒரு பக்கத்தில் ஈரான் உருவாக்கி வைத்திருக்கும் அணு ஆயுத தொழில் நுட்பம் மிகச் சாதாரணமானது என்கிற விவரத்தை அமெரிக்க அரசு அறிந்திருப்பதையும், அப்படிப்பட்ட நிலையிலும், ஈராக்கின் அணு மையங்களின் மீது தாக்குதல் நடத்துமாறு செளதி அரேபியா அமெரிக்காவை வற்புறுத்தியதையும் வெளியிட்டு அசத்தியுள்ளது விக்கிலீக்ஸ்.
பாகிஸ்தான் அதன் பாதுகாப்புத் தேவைக்கும் அதிகமான எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை உருவாக்கி வருகிறது என்பதையும், அணு ஆயுதங்களை தயாரிக்க அது உருவாக்கும் யுரேனிய வெடிப் பொருள் அங்குள்ள இஸ்லாமிய தீவிரவாத (பயங்கரவாதிகள் என்ற சொல்லை இங்கு பயன்படுத்தவில்லை என்பதை கவனிக்க வேண்டும்) குழுக்களின் கைகளுக்கு சென்றுவிடும் அபாயம் உள்ளதாகவும், அதைக் கைப்பற்ற அமெரிக்கா மேற்கொண்ட இரகசிய முயற்சி தோற்றதையும் வெளியிட்டு, அமெரிக்காவின் கையாலாகாத்தனத்தை புரிந்துகொள்ள உதவியுள்ளது விக்கிலீக்ஸ்.பாகிஸ்தானின் அணு ஆயுத ஏவுகணை தயாரிப்புத் திட்டத்தில் 1,20,000 முதல் 1,30,000 பேர் வரை பணியாற்றி வருவதாகவும், அவர்கள் அனைவரும் தங்கள் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே பணியாற்றுபவர்கள் என்று 100 விழுக்காடு உறுதியளிக்க முடியாது என்ற விவரத்தை ரஷ்யாவின் அயலுறவு அமைச்சகத்தின் யூரி கோரோலீவ் கூறியதை வெளிக்கொணர்ந்துள்ளது விக்கிலீக்ஸ். இதற்காக இந்தியா பாராட்ட வேண்டாமா? ஏமன் நாட்டில் அல் கய்டா அமைப்பிற்கு எதிராக அந்நாட்டுப் படைகள் நடத்திய தாக்குதல் என்று அந்நாட்டு அதிபர் அலி அப்துல்லா சலே கூறியது பொய் என்பதையும், அது அமெரிக்கப் படைகள் நேரடியாக நடத்திய தாக்குதலே என்பதையும் (ஆனால் போட்ட குண்டுகள் நம்முடையது என்றார் அலி அப்துல்லா) விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.பயங்கரவாதம் அல்ல அணு ஆயுத குவிப்பே உலகிற்கு முதன்மையான பெரும் அச்சுறுத்தல் என்று அமெரிக்க, இங்கிலாந்து இராஜதந்திரிகள் அச்சம் தெரிவித்து அனுப்பிய தகவல்களை உலகின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது விக்கிலீக்ஸ்.தங்கள் ஆட்சி நிர்வாக தோல்வியை மறைக்கவும், வீழ்ச்சியை நோக்கி சரிந்துக்கொண்டிருக்கும் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த வேறொரு நாட்டிலுள்ள வளங்களைக் கைப்பற்றவே, பயங்கரவாதம், தீவிரவாதம், பேரழிவு ஆயுதங்கள் என்று சொற்றொடர்களைப் பயன்படுத்தி உள்நாட்டில் அச்சுறுத்தல் கதைகளைக் கட்டி மக்களை நம்பச் செய்து, அவர்களின் ஆதரவைப் பெற்று போர் தொடுக்க, இவர்கள் கையாண்ட வழிமுறைகள் எப்படிப்பட்டவை என்பதை விக்கிலீக்ஸ் வெளியிடப்போகும் அடுத்த கட்ட தகவல்கள் உலகிற்கு உணர்த்துவதைத் தடுக்கவே அந்த இணையத் தளத்தின் மீது வழக்கும், அதன் நிறுவனர் ஜூலியன் அசாங்கா மீது ‘இரண்டு பெண்களை கற்பழித்தார்’ என்று குற்ற வழக்கை போட்டு உள்ளே தள்ளவும் அமெரிக்கா சதி செய்து வருகிறது.உலகின் சக்தி வாய்ந்த ஜனநாயக நாடு என்று தன்னைக் காட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு, அதன் மற்றொரு முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் உள்ளதல்லவா?