''ஜல்லிக்கட்டு ஒவ்வொரு இடத்திலும் நடத்துவதற்கு ரூ. 2 லட்சத்துக்கு குறையாமல் டெபாசிட் செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துவோர் பிராணிகள் நல வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் சுமார் 2 மாதங்களுக்கு முன்னரே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற வேண்டும். தமிழக அரசு தேர்வு செய்யும் 129 இடங்களில் மட்டுமே போட்டி நடத்த வேண்டும்'' என்ற நிபந்தனைகளை விதித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.வி. ரவிச்சந்திரன், டத்து ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 25ஆம் தேதி தீர்ப்பளித்தது.
தமிழரின் இலக்கியத்தில் ‘கொல்லேறு தழுவல்’ என்று என்று குறிப்பிடப்பட்டு, சித்து சமவெளி நாகரிக காலத்தில் இருந்து தமிழரின் பாரம்பரிய விளையாட்டாக இருந்துவருவது ஜல்லிக்கட்டு. ஆண்டு தோறும் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு என்றாலே அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகள்தான் நம் நினைவுக்கு வரும். ஜல்லிக்கட்டு என்றாலே கிராமப்புறங்களில் வீரத்துடன் கூடிய ரசனை பொங்கும். ஜல்லிக்கட்டைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து விடுவர்.
இதற்காக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, திண்டுக்கல், தேனி, அவனியாபுரம் என 25க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து சீறிபாயும் காளைகள் கலந்து கொள்ளும். காளைகளை அடக்க இளம் காளையர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்வார்கள். அதுமட்டுமின்றி தங்கள் காளைகளை யாரும் அடக்கி விடக்கூடாது என்பதற்காக அதன் உரிமையாளர்கள் தங்களது காளைகளின் கொம்புகளை சீறிவிட்டு பளபளப்புடன் வைத்துக் கொள்வார்கள்.
என்னதான் கொம்புகளை சீவி விட்டு தங்கள் காளைகளை வைத்திருந்தாலும் போட்டிப்போட்டுக் கொண்டு வாலிபர்கள் காளைகளை அடக்க பாயும் காட்சி மெய் சிலிர்க்க வைக்கும். இதில் பல இளைஞர்கள் தங்கள் உயிர்களை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வீர விளையாட்டுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்தியாவின் உச்ச நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்து போட்டியை நடத்த அனுமதி அளித்து வருகிறது.
தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்குள்ள குல தெய்வங்களின் கோயில் விழாவோடு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இப்போது உச்ச நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனையால் ஜல்லிக்கட்டு மட்டுமின்றி அந்தக் கோயில் திருவிழாக்களும் நடத்தப்படுமா என்பதும் சந்தேகம்தான்.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உச்ச நீதிமன்றம் விதித்துள்ள கடுமையாக நிபந்தனைகள்தமிழ்நாடு வீரவிளையாட்டு பாதுகாப்பு சங்கத்தினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
''கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டின்போது உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் முழுவதுமாக பின்பற்றப்பட்டுள்ளன. அதையும் மீறி காளைகள் துன்புறுத்தப்பட்டதாக பிராணிகள் நலவாரியம் கூறுவதை ஏற்க இயலாது'' என்று அந்த சங்கம் கூறியுள்ளது.
2 லட்ச ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையால் பல்வேறு கிராமங்கள் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தவில்லை. 129 இடங்களுக்கு மேல் தமிழகத்தில் போட்டிகளை நடத்தக் கூடாது என்ற புதிய நிபந்தனையால் எதிர்காலத்தில் ஜல்லிக்கட்டே இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அச்சங்கத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு தமிழரின் பண்பாட்டோடு இணைந்து ஒரு வீர விளையாட்டு. இதில் ஈடுபடுத்தப்படும் காளைகள் துன்புறுத்தப்படுவதாக பிராணிகள் நல வாரியம் கூறுவதும், ஜல்லிக்கட்டு விளையாட்டின் நுணுக்கங்களைப் புரியாமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிராணிகள் நல வாரியம் கூறுவதை ஏற்றுக்கொண்டு நிபந்தனை விதிப்பதும், தமிழரின் பண்பாட்டில் நீதிமன்றத்தின் அத்துமீறிய தலையீடாகவே தமிழக மக்கள் கருதுகின்றனர்.
கோயில்களில் பிராணிகள் உயிர் பலி கொடுப்பது பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது, அது இந்திய மக்களில் பல்வேறு வகுப்பினரின் உணர்வு ரீதியிலான விடயம், அதில் தலையிட முடியாது என்று கூறிய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஜல்லிக்கட்டு பற்றி விவாதம் வந்தபோது மட்டும், அது 21வது நூற்றாண்டிற்கு ஒவ்வாத விளையாட்டு என்று கூறினார். அப்போதே தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், இது எங்களுடைய வீர பண்பாட்டின் வெளிப்பாடு, இதுவும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வோடு தொடர்புடைய ஒரு பாரம்பரியம்தான். எனவே இதில் மத்திய அரசு தலையிடுதை ஏற்க முடியாது என்று கூறியிருந்தால், அப்போதே மத்திய அமைச்சர் பின்வாங்கியிருப்பார். ஆனால் தமிழ்நாட்டின் மீனவர்களை சிங்கள கடற்படையினர் சுட்டுக்கொல்வதை தடுத்து நிறுத்த முடியாத தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நமது பண்பாட்டைக் காக்கவா போராடுவார்கள்?
இந்த நிலையை தமிழர்கள் ஒன்று சேர்ந்து தடுத்த நிறுத்த முற்பட வேண்டும். இல்லையெனில் தமிழரின் வீர விளையாட்டு இல்லாமல் போய்விடும்.