மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கு 1.76 இலட்சம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக மத்திய அரசின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளரால் குற்றம்சாற்றப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டிலிருந்து, இந்தியா காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) வீட்டுக் கடனுக்கு இலஞ்சம் என்ற ஊழல் வரை நாட்டு மக்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது ஊழல் வெள்ளம்.இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளிவரத் தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டு ஊழலும், தலைமை தணிக்கையாளர் அறிக்கையின் வாயிலாகவே வெளியானது. காமன்வெல்த் போட்டிகளுக்காகக் கருவிகளை வாங்கியதிலும், கட்டங்களும், இதர கட்டமைப்புகளும் ஏற்படுத்தியதிலும் நடந்த ஊழல்கள் அந்த அறிக்கையின் வாயிலாகவே நாட்டு மக்களுக்குத் தெரியவந்தது. ஒரு குளிர்பதனப் பெட்டியின் (Refrigerator) விலையை விட கூடுதலாக தொகைக்கு அது வாடைக்கு எடுக்கப்பட்டிருந்த அதிசயம் வெளிவந்தது. காமன்வெல்த் போட்டிகளுக்காக, விளையாட்டு ஏற்பாடுகளுக்கு மட்டுமல்ல, உள்கட்டுமான வசதிகளையும் மேம்படுத்த செலவிடப்பட்ட மொத்தத் தொகை ரூ.71,000 கோடி! அதில் எந்த அளவிற்கு ஊழல் நடந்துள்ளது என்பது குறித்து ஒரு தெளிவான விவரம் இதுவரை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விளையாட்டு ஊழலால் நிலைகுலைந்த நாட்டின் பெருமையை, நமது விளையாட்டு வீரர்கள் முதன் முதலாக 101 பதக்கங்களை வென்று தூக்கி நிறுத்தினர். கார்கில் போரில் எல்லையைக் காக்க தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த இந்திய இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்க மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்புகளை, தியாகத்தோடு சம்மந்தம் இல்லாதவர்கள் பலருக்கு ஒதுக்கப்பட்ட ஊழல், மராட்டிய அரசியலை புரட்டி போட்டது. முதல்வராக இருந்த அசோக் சவாண் பதவி இழந்ததோடு அந்த ஊழல் நின்றுவிடவில்லை, 31 அடுக்குகளைக் கொண்ட ஆதர்ஷ் குடியிருப்புக் கட்டடம் இடித்துத் தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் (Coastal Regulation Zone II) பகுதி இரண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டடம், மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் ஒப்புதலைப் பெறாமல் கட்டப்பட்டுள்ளது என்றும், அது பல விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதால் டிச.3ஆம் தேதிக்குப் பிறகு இடித்துத் தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எத்தனை நூறுக் கோடி ரூபாய் இழப்பு? இத்தனை நாள் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறைக்கு இது தெரியாதா?
“இந்திய நாட்டு வரலாற்றில் இதுவரை நடந்த ஊழல்கள் அனைத்தையும் வெட்கப்பட வைத்த ஊழல்” என்று இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 2ஜி அலைக்கற்றை ஊழலை வர்ணித்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ.இராசா, தனது புத்தி சாதுரியத்தை பயன்படுத்தி, தொலைத் தொடர்பு கொள்கைகளைக் காட்டி, செல்பேசி சேவை நடத்த அளித்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ரூ.1.76 இலட்சம் கோடி வருவாய் இழப்பை மட்டுமல்ல, நாட்டிற்கு மான இழப்பை ஏற்படுத்தியுள்ளது. 2001ஆம் ஆண்டின் கொள்கை முடிவுகளை மாற்றாமல், அதனையே வசதியாகப் பயன்படுத்தி பல பெரும் நிறுவனங்கள் மறைமுகமாக பயன்பெரும் வகையில் செய்யப்பட்ட முறைகேடான அந்த ஒதுக்கீட்டால் பயன் பெற்ற நிறுவனங்கள் எவை? எந்த அளவிற்கு என்பது தெரியவரும்போது, நமக்கெல்லாம் தலை சுற்றப் போகிறது. இந்த பெரும் ஊழலிற்காகவே மத்திய தொலைத் தொடர்புத் துறையின் பொறுப்பில் ஆ.இராசாவை அமர்த்த பெரும் முயற்சி செய்யப்பட்டுள்ளது என்பதையே, அரசிற்கும், பெரு நிறுவனங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையே தொடர்பாளராக செயல்பட்ட நீரா ராடியாவின் உரையாடல் காட்டுகிறது. இந்த நாட்டில் யார், எந்த அமைச்சகப் பொறுப்பில் அமர வைக்கப்பட வேண்டும் என்பதை இந்நாட்டின் பெரு நிறுவனங்களே, அவைகளின் லாபியே முடிவு செய்கிறது என்பதை இராசா நியமனம் நன்றாகவே காட்டியுள்ளது.
நல்ல வேளையாக உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை கொண்டுந்துள்ள பொது நல வழக்கு மையம் எனும் பொதுத் தொண்டு அமைப்பு. அதன் சார்பாக வாதிட்டுவரும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், தலைமை தணிக்கையாளர் அறிக்கையிலிருந்து பல விவரங்களை எடுத்து வைத்து வாதிட்டுள்ளார். அப்படித்தான் பல விவரங்கள் வெளிவந்துள்ளன.
மத்திய அரசின் துணை தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியமும், மத்திய புலனாய்வுக் கழக்கத்திற்காக வாதிட்டுவரும் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலனும், தலைமை தணிக்கையாளரின் அறிக்கையை, “அது அரசுத் துறையின் செயல்பாடு தொடர்பான ஒரு திறனாய்வு அறிக்கை மட்டுமே” என்றும், “தலைமைத் தணிக்கையாளரின் அறிக்கை இறுதியானதல்ல” என்றும் திரும்பத் திரும்ப கூறியுள்ளனர்.
ஆனால் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் இவர்களின் கருத்துக்களை ஏற்கவில்லை. “தலைமை தணிக்கையாளர் பொறுப்பு இந்திய அரசமைப்பு அடிப்படையிலானது. அதற்கு மிகுந்த மதிப்பும் முக்கியத்துவமும் இருக்கிறது” என்று ஆணித்தரமாக கூறியுள்ளனர். அமைச்சர் பொறுப்பிலிருந்து ஆ.இராசா விலகியதையடுத்து, இந்த ஊழலை அத்தோடு புதைத்துவிடுவார்களோ என்கிற அச்சத்திற்கும் உச்ச நீதிமன்றம் ஆப்பு வைத்துள்ளது. முறைகேடான அலைக்கற்றை ஒதுக்கீட்டால் பயன் பெற்ற நிறுவனங்கள் எவை? எவ்வளவு் என்பதை எந்த அளவிற்கு கண்டுபிடித்துள்ளீர்கள்? என்று ம.பு.க. வழக்கறிஞரை கேட்டுள்ளது.2
ஜி அலைக்கற்றை ஊழலை ம.பு.க.புலனாய்வு செய்வதை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்பதே பொது நல வழக்கு மையத்தின் நோக்கமாகும். எனவே இந்த வழக்கில், போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு போல, உண்மையை புதைத்துவிடும் முயற்சி எடுபடாது என்றே தெரிகிறது.காமன்வெல்த், ஆதர்ஷ் குடியிருப்பு, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு என்று ஒன்றன் பின் ஒன்றாக ஊழல்கள் நர்த்தனமாடிய நிலையில், புதிதாக ஒரு ஊழல் தலை தூக்கியுள்ளது. அது இந்திய காப்பீட்டுக் கழகத்தின் (எல்.ஐ.சி.) வீட்டுக் கடன் ஊழல்!
இந்திய காப்பீட்டுக் கழகத்தின் வீட்டுக் கடன் நிறுவனம், இலஞ்சம் கொடுத்தால் வீட்டுக் கடன் கொடுக்கிறது என்று வந்த புகாரையடுத்து புலனாய்வு செய்த ம.பு.க., அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் இராமந்திர நாயரை கைது செய்து விசாரித்து வருகிறது. ஆண்டிற்கு 2 பில்லியன் டாலர் (ரூ.9000 கோடி) அளவிற்கு வீட்டுக் கடன் வழங்க ஒப்புதல் பெற்றுள்ளது எல்ஐசி வீட்டுக் கடன் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊழலில் இருந்து பிறந்த மற்றொரு ஊழலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது தனது நிதியை எந்தெந்த நிறுவனங்களின் பங்குகளில் இந்திய காப்பீட்டுக் கழகம் முதலீடு செய்யப்போகிறது என்கிற விவரத்தை அந்நிறுவனத்தின் பொறுப்பில் உள்ளவர்களிடமிருந்தே தெரிந்து கொண்டு, முதலீடு செய்யப்படவுள்ள நிறுவனங்களின் பங்குகளை முன்னரே வாங்கி, அது நல்ல விலைக்குச் சென்றவுடன் பங்குகளை விற்று பெரும் இலாபம் பார்க்கும் ஊழலாகும்.இந்த உள்-வணிகத்தில் (இன்சைடர் டிரேடிங்) ஈடுபட்ட எல்ஐசியின் முதலீட்டுப் பிரிவு செயலர் நரேஷ் சோப்ராவை கைது செய்துள்ள மத்திய புலனாய்வுக் கழகம், இந்த உள்-வணிகரைப் பயன்படுத்தி, எந்தெந்த நிறுவனங்கள் பயன்பெற்றுள்ளன என்பதை கண்டறியுமாறு கொடுத்த அழுத்தத்தையடுத்து, பங்குச் சந்தை வணிகத்தை முறைபடுத்தும் செபி இப்போது விசாரணை நடத்தி வருகிறது. எல்ஐசி மட்டுமின்றி, இன்னும் பல நிறுவனங்களின் முதலீடுகள் குறித்து முன் தகவல் அறிந்து அதனடிப்படையில் பங்குகளில் செய்யப்பட்ட முதலீடுகள் பற்றி ஆராய்ந்து வருகிறது செபி.
எல்ஐசி-யின் வீட்டுக் கடன் நிறுவனம் மட்டுமல்ல, இப்படிப்பட்ட வீட்டுக் கடன் வழங்கும் பல வங்கிகளின் உயர் பொறுப்பில் இருந்த அலுவலர்கள் ஊழல் செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை துணை மேலாளர் வென்கோபா குஜ்ரால், செண்டரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் இயக்குனர் மணிந்தர் சிங் ஜோஹார், பாரத அரசு வங்கியின் பொது மேலாளர் ஆர்.என்.தயாள் ஆகியோரும்;
இவர்களோடு கைகோர்த்துக்கொண்டு பங்குச் சந்தை வணிகத்தில் பணம் பார்த்த முதலீட்டு முகவர் நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மணி மேட்டர்ஸ் எனும் தனியார் நிதிச் சேவை நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ராஜேஷ் ஷர்மா, அவருடைய சகா சஞ்சை ஷர்மா ஆகியோர் ம.பு.க.வால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுஸ்லான் எனர்ஜி (காற்றாலை உற்பத்தி நிறுவனம்), டிபி ரியால்டி (நிலத் தரகு), ரெலிகேர் எண்டர்பிரைசஸ் (நிதிச் சேவை), ஓபராய் ரியால்டி (நிலத் தரகு), ஜே.எஸ்.டபுள்யூ பவர் (உள்கட்டமைப்பு மற்றும் எஃக்குத் தொழில்), ஜெயப்பிரகாஷ் அசோசியேட்ஸ் ( உள்கட்டமைப்பு நிறுவனம்), ஜெய்பிரகாஷ் பவர், பிஜிஆர் ரிபைனரீஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த ஊழலில் பலம் பெற்றவைகளாக குற்றம்சாற்றப்படுகின்றன. ஆனால் தங்கள் கரங்கள் சுத்தமானவை என்று இந்த வங்கிகளும், நிறுவனங்களும் கூறுகின்றன.
இப்படி பொதுமக்கள் பணத்தைக் கொண்டு வளர்ந்த வங்கிகளும் பொதுத்துறை நிறுவனங்களும், மக்களிடமே இலஞ்சம் பெற்றுக் கொண்டும், தங்களுக்கு ‘வசதி’யான பங்குகளில் முதலீடு செய்து பெரும் கொள்ளை அடித்துள்ளதும் வெளியாகியுள்ளது.
இது எல்லாவற்றையும் விட சிறு கடன் நிதி நிறுவனங்களைக் கொண்டு மக்கள் பிழியப்பட்ட நிகழ்வுதான், ஜனநாயகத்தின் பேரால் இந்த நாட்டு மக்கள் எவ்வாறு மோசடிக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதற்கு பெரும் அத்தாட்சியாகும். இந்த விவகாரத்தை இந்திய மைய வங்கியின் (ஆர்பிஐ) முன்னாள் ஆளுநர் யாக வேணுகோபால் ரெட்டி ஒரு எச்சரிக்கையாகவே கூறியுள்ளார்.பொது, தனியார் வங்கிகளிடமிருந்து கடன்களைப் பெற்று ரூ.2,000, 3,000 என்று விவசாயிகள், சிறு தொழில் செய்வோருக்கு கடன்களை வழங்குவதற்கு உருவான சிறு கடன் நிறுனங்கள் (Micro Finance Company), கந்து வட்டிக்காரர்களைப் போல் அநியாய வட்டிக்கு கடன் கொடுத்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இப்படி அநியாய வட்டிக்கு கடன் கொடுத்து வசூலிக்க முடியாமல் ஆந்திரத்தைச் சேர்ந்த ஒர சிறு கடன் வங்கி திவாலாகிவிட்டது. இப்படி பல நிறுவனங்கள் ஆந்திரா, மத்திய பிரதேசம், ஒரிசா மாநிலங்களில் இயங்கி வருகின்றனவாம். இவைகளால் உருவாகும் பிரச்சனை, அமெரிக்காவில் ஏற்பட்ட வீட்டுக் கடன் (சப் பிரைம் கிரைசிஸ்) சிக்கலைப் போல் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஒய்.வி.ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.வங்கதேசத்தில் சிறு கடன் வங்கியை துவக்கி, ஏழை, எளிய மக்களுக்கு பெரும் பயன் தந்த மொஹம்மது யூனஸ், அந்த அரும்பணிக்காக நோபல் பரிசு பெற்றார். அதை முன்னுதாரணமாகக் கொண்டு நடத்தப்பட வேண்டிய சிறு கடன் நிறுவனங்களையே கந்து வந்து அமைப்புகளாக அரசு, தனியார் வங்கிகளே நிதியுதவி புரிந்துள்ளன என்றால், இதைவிட குற்றச்செயல் என்னவாக இருக்க முடியும்? அயல் நாடுகளுக்கு அரசி ஏற்றுமதி செய்ததில் முறைகேடு (ஊழல் நடந்துள்ளது என்றால் முதலில் அதனை முறைகேடு என்றே குறிப்பிடுவார்கள்) நடந்துள்ளதெனவும், அது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தொழில் - வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.இப்படி திரும்பிய திசையெல்லாம் ஊழலாக உள்ளது இந்த பாரத திருநாட்டில். ஆனால் இந்த நாட்டின் பிரதமரை தூயவர், திறமையானவர், பொருளாதார மேதை என்றெல்லாம் போற்றுகின்றனர். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இன்று ஊழலில் மிதக்கிறதா? மூழ்கிக்கொண்டிருக்கிறதா? தெரியவில்லை.