பாலியல் தொல்லையிலிருந்து மகளிரைப் பாதுகாக்கும் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது. இந்த சட்ட வரைவை நாடாளுமன்ற நடப்புக் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது எதிர்க்கட்சிகளின் அமளியால் இந்த சட்ட வரைவு அறிமுகப்படுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இதுமட்டுமின்றி, பாலியல் கொடுமைகளிலிருந்து சிறுமிகளை பாதுகாக்கும் சட்ட வரைவும் தயாராக இருக்கிறது. இதுவும் சட்டமாகலாம். இரண்டுமே இன்றைய காலத்தின் கட்டாயம் என்பது மட்டுமன்றி, பெண்களுக்கு உண்மையிலேயே பாதுகாப்பாக அமையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
பணியிடங்களில் பெண்களின் மீதான பாலியல் தொல்லைகளைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டம், அரசு , தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களை மட்டுமல்ல, அமைப்புச் சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களையும் கூட உள்ளடக்கியதாக இருக்கிறது.
மேலும், இந்த நிறுவனங்களில் பணியாற்றுகிற பெண்கள் மட்டுமன்றி, நிறுவனத்துக்கு வரும் பார்வையாளர், வாடிக்கையாளர் என யாராக இருந்தாலும் அவர்களும், பணியிடத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும்போது இச்சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்க முடியும் என்ற விதிமுறை, நிறுவனத்துக்கு அப்பாற்பட்ட பெண்களையும் பாதுகாப்பதாக அமைந்துள்ளது. பணியிடம் மட்டுமன்றி, கல்விக் கூடங்களில் மாணவ, மாணவிகள், ஆய்வு மாணவிகள், மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனைபெற வரும் மகளிரும்கூட இச்சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கலாம் என்பதுதான் இதன் சிறப்பு.
இந்தச் சட்டம் அமலுக்கு வரும்போது, ஆண்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்படும் என்றும், கறாராக இருக்கும் அதிகாரியை மிரட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் என்றும் ஒரு கருத்து முன் வைக்கப்பட்டாலும் கூட, பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை புகார்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, இத்தகைய பொய்ப் புகார்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருக்கும் என்பது நிச்சயம். புகார் தெரிவிப்பதால் பணியிடத்தில் வேலையை இழக்க நேரிடும் என்ற இயல்பான அச்சத்தையும் போக்கி, புகார் கூறிய பெண்கள் வழக்கு முடியும்வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பில் செல்லவும் அல்லது வேறு இடத்தில் பணியாற்றவும் இச்சட்டம் வகை செய்துள்ளது.
இரண்டாவதாக, குழந்தைகள் மீதான பாலியல் கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்ட மசோதாவின் முக்கியத்துவம் என்னவெனில், 16 வயதுக்குள்பட்ட சிறுமி அல்லது சிறுவன் யாராக இருப்பினும், அவர்கள் யார் மீது குற்றம் சுமத்தினாலும், குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு, குற்றம் சாற்றப்பட்ட நபரைச் சார்ந்ததே தவிர, நீதிமன்றம் அவர் குற்றவாளி என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான்.
முந்தைய சட்டத்தில் இடம்பெற்ற புணர்தல் என்ற சொல்லை நீக்கிவிட்டு 'பாலியல் நோக்கத்துடன்' என்ற சொல் இடம்பெற்றிருப்பதால் இச்சட்டம் நிச்சயமாகவே பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதாக அமையும். இந்தச் சட்டத்தின் கீழ் யாராக இருந்தாலும், அரசுப் பதவியில், இராணுவத்தில் இருந்தாலும்கூட அவர் மீது வழக்குப் பதிவு செய்ய முடியும் என்கிற அளவுக்குச் சட்டத்தில் கிடுக்கிப்பிடி போடப்பட்டுள்ளது.
வழக்கமாக சிறுமிகள் - சிறுவர் பாலியல் கொடுமைக்கு ஆளாகும்போது அவர்களது பெயரை வெளியிடக்கூடாது என்கிற பொது நடைமுறை ஏற்கனவே இருக்கிறது. ஆனாலும் பல பத்திரிகைகள், பரபரப்புச் செய்திக்காக இத்தகைய நிகழ்வுகளை வெளியிடும்போது, அச்சிறுமி படிக்கும் பள்ளி, பெற்றோரின் பெயர், வசிக்கும் தெரு எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, 'பெயர் மாற்றப்பட்டுள்ளது' என்று ஏதோ ஒரு பெயரை அச்சில் தெரிவிக்கும் வழக்கம் இருந்து வருகிறது.
பாலியல் வன்முறைக்கு ஆளான சிறுமிகள் குறித்த அடையாளங்கள் எந்த வகையிலும் வெளிப்படுத்தப்படக்கூடாது என்று மிகக் கடுமையாகச் சொல்லியிருக்கிறது இந்த வரைவு ஆனால் அதேசமயம், பாலியல் வன்கொடுமைக்கு இலக்கான சிறுவர் - சிறுமிகள் அல்லது அவர் தம் பெற்றோர் அனுமதியுடன் ஆதாரப்பூர்வமான தகவலை வெளியிடலாம் என்று அனுமதித்திருப்பது, மீண்டும் பழைய போக்குக்கே வழிவகுப்பதாக அமையும். வழக்கு முடியும்வரை சிறுவர் - சிறுமிகள் குறித்த எந்தத் தகவலையும் வெளியிடக்கூடாது என்கிற விதிமுறை இருப்பது மட்டுமே சரியானதாக இருக்க முடியும்.
ஏனெனில், இத்தகைய சட்டத்தின் நோக்கமே, சிறுவர் அல்லது சிறுமியின் அடையாளம் தெரிந்தால், சமூகத்தில் அவர்கள் மீதான தேவையற்ற சங்கடப் பார்வைகள் விழும் என்பதுதான். இந்த நிலைமை பாலியல் வன்கொடுமையில் அவர்கள் ஆளாகும்போது மட்டுமல்ல, அவர்கள் பெற்றோர் ஆளாகும்போதும் இதே சமூகப் புறக்கணிப்புக்கு அவர்களும் ஆளாகிறார்கள்.
ஒரு பெண் கள்ளக்காதல் கொலை வழக்கில் கைது செய்யப்படும்போது, அவரது குழந்தைகளின் படங்களையும் பிரசுரிப்பது அக்குழந்தைகள் மீது அனுதாபத்தை ஏற்படுத்துவதைவிட சமூகப் புறக்கணிப்புக்கும், கேலிக்கும்தான் அதிக இடமளிக்கிறது. எதற்காக அந்தக் குழந்தைகளின் படம் அல்லது அப்பாவித்தனமான பேட்டியை வெளியிட வேண்டும்? அண்மையில் ஒரு நடிகை விபசார வழக்கில் கைது செய்யப்பட்டபோது, அவரது குழந்தையின் பெயர், படிக்கும் பள்ளி, வகுப்பு எல்லா தகவலும் பத்திரிகைகளில் வெளியாயின. தாய் - தந்தை செய்த தவறுக்குக் குழந்தைகள் என்ன செய்வார்கள்? இப்படிப்பட்ட செய்திகளை பிரசுரிக்கும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும்.