“தமிழ்நாட்டில் சில பேர் வெளிநாட்டுப் பிரச்சனையை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசி வருகின்றனர். பேச்சுரிமை என்ற போர்வையில் அவர்கள் பேசுகின்றனர். இருப்பினும் அத்தகைய நபர்கள் விரைவில் புதிய சட்டத்தை சந்திக்க நேரிடும். இவர்களைத் தண்டிக்கத் தேவைப்பட்டால் கடுமையான புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும்” என்று தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றக் கட்டடத்தில் விடுமுறைக் கால குடும்ப நல நீதிமன்றத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசியபோது தமிழ்நாட்டின் சட்ட அமைச்சர் துரைமுருகன் இவ்வாறு பேசியுள்ளார்.‘இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது’ என்கிற இந்த சொற்றொடர் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும், ஏன் நாடாளுமன்றத்தில் கூட ஒலிக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில்தான், அதுவும் கடந்த 4 ஆண்டுகளாக அதிகம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நாட்டின் உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் உட்பட தமிழ்நாட்டின் காங்கிரஸ் கட்சிக்காரர்கள்தான் (ஏதோ இறையாண்மை என்பதும் காங்கிரஸின் கண்டுபிடிப்பு, அதற்குத் தங்களுக்கு மட்டுமே அறிவுச் சொத்துரிமை உள்ளது என்பதுபோல்) தொடர்ந்து பேசிவந்தார்கள். அதுவும் எப்போதெல்லாம் ஈழத் தமிழர் பிரச்சனை தமிழ்நாட்டில் வலிமையாக எழும்புகிறதோ, உடனே காங்கிரஸ்காரர்கள் ராஜீவ் படுகொலையை எழுப்புவார்கள். அந்த பூதத்திற்கு அடுத்தபடியாக அவர்கள் தட்டி எழுப்புவதுதான் இறையாண்மை. இந்த நாட்டின் இறையாண்மை மட்டுமல்ல, இலங்கையின் இறையாண்மை பற்றிக் கூட இவர்கள் மிகுந்த கவலையுடன் பேசுவார்கள். ஈழத் தமிழர்கள் படுகொலையை தடுத்து நிறுத்த முதலில் குரல் கொடுத்துவிட்டு பிறகு தன் அரசிய்ல வசதிக்காக தமிழக மக்கள் அதனை மறந்துவிட வேண்டும் என்று விரும்பிய தமிழ்நாட்டின் முதல்வர் கருணாநிதி இறையாண்மை பற்றி பேசத் துவங்கினார். இவரும் இரண்டு நாடுகளின் (இந்தியா + இலங்கை) இறையாண்மையையும் பேசினார். காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி நடத்துகிறார் அல்லவா? பிறகு அதே பாணியில்தானே பேச வேண்டும்?இப்போது அந்தக் கச்சேரியை அவருடைய அமைச்சரவையில் இடம்பெற்று, இருக்கிறாரா... இல்லையா என்ற சந்தேகத்திலிருந்த சட்ட அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார். எனவே இதில் துரைமுருகன் எந்த விதத்திலும் கட்சியின் கட்டுப்பாட்டையோ அல்லது முதல்வர் போட்ட கோட்டையோ தாண்டாதது மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தொங்கிக் கொண்டிருக்கும் திராவிட அரசிற்கும் ஆபத்து எதையும் ஏற்படுத்தாமல் பேசியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கதாகும். அரசும் நாடும் ஒன்றா?துரைமுருகன் பேசியதில் கவனிக்கத்தக்க முக்கிய விடயம் என்னவெனில், “சில பேர் வெளிநாட்டுப் பிரச்சனையை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசிவருகின்றனர்” என்று கூறியுள்ளார். அதுவும் ‘சில பேர்’ மட்டுமே பேசுவருகிறார்கள், அதற்கே இவ்வளவு பதட்டமாகி இவர் பேசியுள்ளார்.
இதில் ‘வெளிநாட்டுப் பிரச்சனையை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக’ என்று துரைமுருகன் பேசியிருப்பதுதான் புரியவில்லை. வெளிநாட்டுப் பிரச்சனை என்பது மாநில அரசு சம்மந்தப்பட்ட பிரச்சனை அல்ல, அது மத்திய அரசின் பொறுப்பின் கீழ் வரும் மிக முக்கியமான அமைச்சு. அவ்வாறிருக்க, ஒரு மாநில அமைச்சரான துரைமுருகன் ஏன் அதற்காக அலட்டிக் கொள்கிறார் என்று புரியவில்லை. சில பேர் பேசுவதால் இந்தியாவின் வெளிநாட்டு உறவிற்கு பங்கம் ஏற்படுகிறது என்றால் அது குறித்து இந்தியாவின் அயல் உறவு அமைச்சராக இருக்கிறத எஸ்.எம். கிருஷ்ணாதான் பேச வேண்டும், துரைமுருகன் ஏன் மருக வேண்டும் என்று கேட்கத் தோன்றுகிறதா? அவசரப்படாதீர்கள். எஸ்.எம். கிருஷ்ணாதான் (அயலுறவுச் செயலர் நிரூபமா மேனன் ராவிற்குப் பிறகு) இந்தியாவின் அண்டை நாடுகள் குறித்து தகுதியுடன் அதிகம் பேசுபவர். இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்று மனசாட்சியோடு அமைச்சர் கிருஷ்ணா பேசியதற்கு சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வமான இணையத்தளத்தில் (லங்கா.எல்கே) கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது மட்டுமின்றி, இலங்கையின் இறையாண்மையில் தலையிட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து கட்டுரை வெளியிடப்பட்டது. இப்போதுதான் தெரிகிறது நமது தமிழ்நாட்டின் சட்ட அமைச்சராகவுள்ள துரைமுருகனுக்கு உள்ளத் தெளிவு நமது நாட்டின் அயலுறவு அமைச்சராக இருக்கும் கிருஷ்ணாவிற்கு இல்லை என்பது. இப்படிப்பட்ட ஒருவரை அமைச்சராகப் பெற்றதற்கு தமிழ்நாடு மாதவம் செய்திருக்க வேண்டும்.
மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகப் பேசாதே என்கிறார் துரைமுருகன். ஏன்? அது அவர்களுக்கும், காங்கிரசின் ஆதரவுடன் இன்னும் ஓராண்டு தள்ள வேண்டிய ஆட்சிக்கு ஆபத்து உண்டாகிவிடும் என்று (தனது தலைவர் கலைஞர் மு.கருணாநிதி சார்பாக) பொறுப்புணர்வுடன் பேசியுள்ளார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அது என்ன வெளிநாட்டுப் பிரச்சனை? எவ்வளவு அரசியல் சாதுரியம் துரைமுருகனுக்கு! அப்பப்பா புல் பயங்கரமாக அரிக்கிறது! இலங்கைப் பிரச்சனையைத்தான் குறிப்பிடுகிறார்... ஆனால் இலங்கைப் பிரச்சனை என்று பேசினால் அதுவே சிறிலங்க அதிபர் ராஜபக்சவிற்கு கோபத்தை ஏற்படுத்தலாம் அல்லவா? பிறகு அவரிடம் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பி வைப்பது முடியுமா? அவரைச் சந்திப்பதால் ‘தமிழ் மக்களுக்கு’ பெற்றுத்தரக் கூடிய ‘அனுகூல’ங்களை பெறத்தான் முடியுமா? எனவேதான் அவர் இலங்கைப் பிரச்சனை என்று கூட சொல்லாமல், மிக இராஜதந்திரமாக ‘வெளிநாட்டுப் பிரச்சனை’ என்று சொல்லியுள்ளார். அதுமட்டுமல்ல, இலங்கைப் பிரச்சனை என்று கூறி, எதை மக்கள் மறைக்க வேண்டும் என்று தனது தானைத் தலைவர் விரும்புகிறாரோ அதனை ஏன் சொல்ல வேண்டும்? அதனைக் கேட்கும் மக்களுக்கு ஈழத் தமிழர் இனப் படுகொலையும், இன்றளவும் அவர்கள் அனுபவித்துவரும் துயரமும் நினைவுக்கு வந்துவிடாதா? பிறகு ரூ.380 கோடி செலவில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டதன் நோக்கம் என்னாவது? இப்படி பல்வேறு விடயங்களை தன்னுள் அடக்கியவறாகவே துரைமுருகன் ‘வெளிநாட்டுப் பிரச்சனை’ என்று நாசூக்காக கூறியுள்ளார். எல்லாம் தமிழினத் தலைவரின் அமைச்சரவையில் தொடர்ந்து இருந்து பணியாற்றியதால் கற்றப் பாடமல்லவா?எனவே, வெளிநாட்டுப் பிரச்சனையை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகப் பேசக்கூடாது என்று அவர் கூறுவதில் ஒர் உன்னதமான உண்மையும் அடங்கியுள்ளதல்லவா? மத்திய மாநில அரசுகள் இணைந்துதானே அந்த வெளிநாட்டுப் பிரச்சனையில் செயல்பட்டன. உண்ணாவிரதம், மனித சங்கிலி என்றெல்லாம் நடத்தினாலும், அவையெல்லாம் மத்திய அரசிற்கு எதிரான நடவடிக்கை அல்லவே, தமிழர் அனுபவித்த துயரம் அந்த நிலைக்கு நம்மைத் தள்ளியது அவ்வளவுதான். எனவே அதிலுள்ள ஒற்றுமையை, தேச ஒற்றுமையை கருத்தில்கொள்ள வேண்டும், எதிர்த்து பேசக் கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார். ராஜபக்ச அரசோடு இணைந்துதான் டெல்லி அரசு செயல்பட்டது என்பதையும், அந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு இரகசிய ஆதரவு அளித்தது என்பதையும் நன்கு புரிந்துகொண்டுள்ள அந்த ‘சில பேர்’ மட்டுமே பேசி வருகின்றனர். அவர்களுக்கே இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார் துரைமுருகன். அதுமட்டுமல்ல, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகப் பேசுவது மட்டுமின்றி, அவர்கள் இந்திய இறையாண்மைக்கும் எதிராக பேசிவருகிறார்கள் என்பதையும் இனம் கண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவின் இறையாண்மை என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் (Preamble) கூறப்பட்டுள்ளதற்கு பொருள் என்ன என்பது குறித்து பல்வேறு வழக்குளில் விளக்கமளித்துள்ள இந்தியாவின் உச்ச நீதிமன்றம், அது நாட்டின் எல்லைகளைக் காப்பதற்கும், விரிவுபடுத்துவதற்கும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசிற்கு மக்கள் அளித்துள்ள அதிகாரம் என்று கூறியுள்ளது. அதாவது எல்லைகளைக் காப்பதன்மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான அதிகாரம் இறையாண்மை என்பது. இதனை மன்னராட்சிக் காலத்து ‘அளவு கடந்த அதிகாரம்’ என்று பொருளில், அதாவது மக்கள் என்ன சிந்திக்க வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அரசன் நிர்ணயிக்கும் அதிகாரம் என்பதற்கு ஒப்பாக நமது அரசியல்வாதிகள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதனால்தான் எப்போதெல்லாம் அரசின் தவறான நடவடிக்கையை சுட்டிக்காட்டினாலும், இந்த இன்பத் தமிழ்நாட்டில் அது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது என்று பேசப்படுகிறது. இந்தியாவின் கடல் எல்லைகளில் மீன் பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டின் மீனவர்கள், அண்டை நாடான சிறிலங்காவின் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும்போது இந்தியா ஏன் அமைதி காக்கிறது என்று அந்தச் ‘சிலர்’ கேள்வி எழுப்புவதோடு நின்றுவிடாமல், தமிழக மீனவர்களைக் காக்க வேண்டிய கடமை இந்திய அரசிற்கு இல்லையா? நமது கடற்பகுதிக்குள் அத்துமீறி வந்து நமது நாட்டு மீனவர்களை சுட்டுத் தள்ளிவிட்டுப் போகிறானே இது நமது நாட்டின் இறையாண்மைக்கு இழுக்கல்லவா? என்றும் கேட்கிறார்கள். இதுதான் (மத்திய, மாநில) ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கவில்லை. எல்லையென்றால் பாதுகாக்க வேண்டும் என்று யார் சொன்னது? எல்லைகளைச் சரியாக பாதுகாத்தால் பாகிஸ்தானில் இருந்து எப்படி பயங்கரவாதிகள் ஊடுருவ முடியும்? அவர்கள் ஊடுருவாவிட்டால் எதை வைத்து அயல் நாட்டு அரசியல் நடத்துவது? எல்லைகளை நன்கு பாதுகாத்தால், சீன இராணுவம் எப்படி நமது நாட்டின் பகுதிகளை கைப்பற்றும்? அப்படி நடக்காவிட்டால் அண்டை நாட்டுடன் எப்படி எல்லைப் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது? எனவே இறையாண்மை என்பது எல்லையைக் காப்பது, நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வது, மீன் பிடிக்கச் செல்லும் தமிழனைக் காப்பது என்பதெல்லாம் அல்ல, அது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வது என்பதே! இதனை அறிந்தவர் துரைமுருகன்.
இறையாண்மை என்பது ஒரு சட்ட ரீதியான மிரட்டல் கருவியாகவே பயன்படுத்தப்படுகிறது. இறையாண்மை என்னவென்று புரியாவிட்டாலும், அதனை எவ்வாறு அரசியல் அச்சுறுத்தல் ஆயுதமாக பயன்படுத்தவது என்பதை நன்கு புரிந்துகொண்டுள்ள சட்ட மேதையான துரைமுருகன், அந்தச் சிலரை இறையாண்மை வார்த்தை கூறி மிரட்டியுள்ளார். அந்த மிரட்டிலில் எதிர்கால தேர்தல் அரசியல் அடங்கியுள்ளது எனபதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
பேச்சுரிமையாவது கீச்சுரிமையாவது....
“பேச்சுரிமை என்ற போர்வையில் இவர்கள் பேசுகின்றனர். இவர்களைத் தண்டிக்க சட்டங்கள் உள்ளன. இருப்பினும் அந்த நபர்கள் விரைவில் புதிய சட்டத்தை சந்திக்க நேரிடும். இவர்களைத் தண்டிக்க தேவைப்பட்டால் கடுமையான புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும்” என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இரண்டே வரியில் எத்தனை சட்டங்கள்! அப்பப்பா அசத்திவிட்டார். அங்கிருந்த நீதிபதிகள் கூட அரண்டுபோய் இருப்பார்கள். 1. இவர்களைத் தண்டிக்க சட்டங்கள் உள்ளன; 2. விரைவில் புதிய சட்டங்கள்; 3. தேவைப்பட்டால் கடுமையான சட்டங்கள்... அடடா... அடடா... எங்கோ போய்விட்டார் துரைமுருகன்! மீண்டும் பயங்கரமாக புல் அரிக்கிறது. அந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வளவு அரித்திருக்கும்? எப்படி சொரிந்திருப்பார்கள்? வடிவேலு ஜோக்கைப் போல உடம்பு ரணகளமாகியிருக்குமே!
தண்டிக்க சட்டம் உள்ளது... தண்டிக்க வேண்டியதுதானே, புதிய சட்டம் எதற்கு என்று கேட்கிறீர்களா? அந்தச் சில நபர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் தருகிறார். அதற்காகவே புதிய சட்டத்தைத் தேடியிருக்கிறார். அது புதிதாக மட்டுமே இருந்தால் போதுமா? சடுதியில் ஒரு ஐடியா பிறக்கிறது அவருடைய அபார சட்ட மூளையில், உடனே கூறுகிறார்... கடுமையான சட்டம் என்று. அதுவும் நிறைவெற்றப்படும் என்று கூறவில்லை துரைமுருகன். ‘கொண்டு வரப்படும்’ என்று கூறுகிறார். அவர் ஏற்கனவே வெளிநாட்டுப் பிரச்சனை என்று அந்த நிகழ்ச்சியில் பேசியிருப்பதால்... அயல் நாட்டில் இருந்தே கொண்டுவர திட்டமிட்டுள்ளார் என்று தெரிகிறது.
ஏனென்றால் சிறிலங்க அரசு பல வருடங்களாக அவசர நிலைச் சட்டத்தை பிரகடனம் செய்து, அதனை ஒவ்வொரு மாதமும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு புதுப்பித்துக் கொண்டிருக்கிறது அல்லவா? அதை வைத்துதானே அங்குள்ள பத்திரிக்கையாளர்களில் இருந்து அரசிற்கு எதிரான (அதாவது இறையாண்மைக்கு எதிரான) அனைவரையும் ‘உள்ளே’ தள்ளிக்கொண்டிருக்கிறது. அதைக் கொண்டுவருவோம் என்று துரைமுருகன் சொல்லியிருக்கிறார். கொண்டு வருவோம் என்று கூறியிருப்பதால், அதில் காங்கிரஸும் உள்ளது எனபதையும், அப்படிப்பட்ட சட்டம் இயற்றும் ஐடியா மத்திய அரசிற்கும் இருக்கலாம், அதைத்தான் கூட்டணி சூட்சமத்துடன் துரைமுருகன் கூறியுள்ளார் என்றும் கொள்ள வேண்டும்.
ஏன் அவசர கால சட்டத்தை மனதில் வைத்து துரைமுருகன் பேசுகிறார் என்றால், அதை 1975வது ஆண்டு ஜூன் மாதம் முதல் 20 மாதங்களுக்கு ‘நன்கு’ அனுபவித்த கட்சியைச் சேர்ந்தவர் அல்லவா, எனவே அந்த அனுபவத்தை குறைந்தது தமிழ்நாட்டிற்காவது தனது தலைவன் ஆட்சிக் காலத்திலேயே கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார். எல்லாம் அந்தச் சில பேருக்காகத்தான்.
‘பேச்சுரிமை என்ற போர்வையில்’ என்று அரசமைப்புச் சட்டம் நமக்களித்துள்ள அடிப்படை உரிமை குறித்துப் பேசியுள்ளார். பேச்சுரிமை குறித்தும் அதிகம் அறிந்தவர் துரைமுருகன் என்பது இளைஞர்கள் அதிகம் பேருக்குத் தெரியாது. தமிழக சட்டப் பேரவையில் மிக ஜாலியாக பேசக் கூடியவர் துரைமுருகன். பொருள் பொதிந்த அவருடைய வார்த்தைகள் பலமுறை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பெருமையைப் பெற்றவர். எனவே பேச்சுரிமைப் போர்வை எவ்வளவு ஆபத்தானது என்பது அவருக்குத் தெரியும்தானே?
இந்த நாட்டை வழிநடத்த துரைமுருகன் போன்ற சட்ட மேதைகள் நிச்சயம் தேவையே. ஏனென்றால் அரசமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரும் இல்லை, நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுத்தந்த மகாத்மா காந்தியும் இல்லை. நமக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த தலைவர்கள் ஒருவரும் இல்லை.
நல்லவேளையாக... அவர்களெல்லாம் எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.