ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளும் வித்தையில் ‘கை’ தேர்ந்த காங்கிரஸ் கட்சி, விலையேற்றத்தைக் கடுமையாக எதிர்த்துவந்த எதிர்க்கட்சிகள் சிலவற்றின் ஆதரவோடு ஆட்சிக்கு எதிரான வெட்டுத் தீர்மானத்தை சுலபமாகத் தோற்கடித்து சாதனை புரிந்துள்ளது.
எத்தனை உறுப்பினர்களை வாங்கினால் வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியும் என்ற கணக்கீட்டில் புலியான காங்கிரஸ் கட்சி, இம்முறை கீழ்த்தரமான அந்த நடவடிக்கையில் ஈடுபடவில்லை. மாறாக, எதிர்க்கட்சிகள் சிலவற்றை எப்படி சரிகட்ட வேண்டுமோ அப்படி சரிகட்டி தனது பலத்தை நிரூபித்துள்ளது. அதுதான் அரசுக்கு எதிரான வெட்டுத் தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் இந்திய ஜனநாயகத்திற்கு காங்கிரஸ் கட்சி கற்றுத் தந்துள்ள புதிய பாடமாகும். ஆட்சிக்கு ஆதரவாக 265 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தும், மேலும் 8 உறுப்பினர்களைத் தேடிச் சென்று வாங்குவதோடு நில்லாமல், கட்சிகளையே வளைத்துப் போட்டு ஜெயித்ததில் காங்கிரஸ் கட்சி, வெட்டுத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படவில்லை. அணு சக்தி விபத்து இழப்பீடு , பெண்கள் இட ஒதுக்கீடு, மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை எதிர்த்துப் பேசுவோரை சிறையில் அடைக்கும் சட்ட வரைவு என்று மேலும் பல முக்கியமான சட்ட வரைவுகளை நிறைவேற்றவே ‘ஒரு வழியாக’ எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு பெரிய பேரத்தை - காசைக் காட்டி நடத்தாமல், சிக்கலைக் காட்டி - முடித்துள்ளது. மத்திய அரசிற்கு ‘வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதில்’ உள்ள அனுகூலங்கள் என்ன என்பதை சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சிகள் நன்றாக நிரூபித்துள்ளன. ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவிற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் ஈடிணையற்றத் தலைவி மாயாவதிக்கு எதிரான அம்பேத்கர் பூங்கா திட்டம், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங்கிற்கு எதிரான வழக்கு (எந்த வழக்கு என்றுதான் தெரியவில்லை) ஆகியவற்றிலிருந்து அவர்களை விடுவித்து, அதன் மூலம் அவர்களின் ஆதரவைப் பெற்று ஜனநாயக வழியில் ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டுள்ளது காங்கிரஸ் கட்சி.திடீர் ஞானோதயம்பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய இந்த மூன்று கட்சிகளுக்கு மக்களவையில் 64 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதில் சமாஜ்வாடித் தலைவர் முலாயம் சிங்கும், ராஜ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத்தும் (மொத்தம் 39 + 4 = 43), “மதவாத சக்திகளுடன் தாங்கள் இணைந்து செயல்படுகிறோம் என்று மக்கள் தவறாக புரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காகவே, ஆட்சிக்கு எதிரான நிலையெடுத்திருந்தாலும், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளியேறுகிறோம்” என்று கூறியுள்ளனர். என்னே மக்கள் பற்று!இதனை இடதுசாரிகளுடன் நடத்திய கூட்டத்தில் தெரிவித்திருக்கலாமே? அப்போது பேரம் துவங்கவில்லையோ?
அரசிற்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று அன்று காலை ஏற்பட்ட ஞானோதயத்திற்குப் பிறகு நாட்டிற்கு அறிவித்தார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவியும் உத்தரப்பிரதேச மாநில முதல்வருமான மாயாவதி. அதற்கான காரணத்தை அவரும் உதிர்த்தார். ‘மதவாத சக்திகளிடம் தேசம் சிக்கிக்கொள்ளக் கூடாது’ என்றார். இந்த மதசார்ப்பற்ற அரசியல் தலைவிதான் உ.பி. சட்டப் பேரவைத் தேர்தலில் பரப்புரை மேற்கொண்டபோது, தனது கட்சியின் சின்னமான யானையைப் பார்க்கும்போது அதில் வினாயகரைப் பாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தவர்!அப்படி கூறி அவர் விடுத்த சமிக்ஞையே அருதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க உதவியது என்று தேர்தல் பண்டிதர்களும் கூறியிருந்தார்கள்.பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 21 உறுப்பினர்களும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பிழைத்தது. கடைசி நேரத்தில் முடிவெடுத்து வாக்களிப்பது மாயாவதி ஜனநாயகத்தில் புதிதல்ல. 1998ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் அரசிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது - பெறுவதைப் பெற்றுக்கொண்டு - எதிர்த்து வாக்களித்த ‘பெருமை’ கொண்டவர்தான் மாயாவதி.
இடதுசாரிகளுடன் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா கட்சிகள் இணைந்து வாக்களித்திருக்குமாயின் வெட்டுத் தீர்மானத்திற்கு ஆதரவாக - ஆட்சிக்கு எதிராக - 201 + 21 + 43 = 265 வாக்குகளும், ஆட்சிக்கு ஆதரவாக 289 - 21 = 268 வாக்குகளும் விழுந்திருக்கும். அப்போதும் ஆட்சி தப்பித்திருக்கும் என்றாலும், அதற்கு ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும், அது மத்திய அரசை மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படத் தூண்டியிருக்கும். தங்களுடைய சுயநல அரசியலால் மத்திய அரசின் தவறான நடவடிக்கைகளுக்கு துணை போயுள்ளனர் இக்கட்சிகளின் தலைவர்கள்.
பழக்கம் மாறிடுமா?
இந்தியாவின் ஜனநாயக வரலாற்றை யார் எழுதினாலும், இந்த நாட்டின் ஒரு அரசியல்வாதியை தவிர்க்க முடியாது. அவர், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான சிபு சோரன்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் பெரும்பான்மையான பழங்குடியின மக்களின் நலனை, அவர்களின் உரிமைகளை காக்க வேண்டிய இந்தத் தலைவர் பணத்தைப் பெற்றுக்கொண்டு வாக்களிக்கும் அரசியல் ஜனநாயகத்திற்குச் சொந்தக்காரர். இன்று நேற்றல்ல, காங்கிரஸ் கட்சிக்கு எப்போதெல்லாம் சோதனை வருகிறதோ, அப்போதெல்லாம் காசை வாங்கிக் கொண்டு கை கொடுத்துக் காப்பாற்றும் ஆபத்பாந்தவன், ரட்சகன். 1991
ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மை பெறவில்லை. 232 இடங்களைத் தான் வென்றது. நாடாளுமன்றத் தேர்லில் போட்டியிடவே வாய்ப்பளிக்கப்படாத நரசிம்ம ராவ் - தேர்தலின் போது ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதால் - பிரதமராகவே பொறுப்பேற்றார்! பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கைத் தீர்மானத்தை எதிர்கொண்டது, வெற்றியும் பெற்றது. அன்றைக்கு தனது கட்சியின் 5 உறுப்பினர்களின் வாக்குகளை பேரம் பேசி ஆட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்தவர் சிபு சோரன். பின்னாளில் அது பெரும் வழக்கானது, ஜெஎம்எம் கையூட்டு வழக்கு என்றே அவ்வழக்கு அழைக்கப்பட்டது. அந்த ஆண்டில்தான் வாக்குக்குப் பணம் என்கிற திருமங்கல முறை இந்திய ஜனநாயகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. வாக்குக்காக வாங்கிய பணத்தில் தனக்கும் ஷேர் வேண்டும் என்று கேட்டதற்காக தனது உதவியாளரை கொலை செய்தார் என்று தொடரப்பட்ட வழக்கில் சிபு சோரன் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆயினும், டெல்லி அரசியலை நன்குணர்ந்த சிபு சோரன், காங்கிரசின் வேண்டுகோளை ஏற்று அரசைக் காப்பாற்றும் அந்த உன்னத திருப்பணியை - பெற வேண்டியதைப் பெற்றுக் கொண்டு - செய்து முடித்துள்ளார். எவ்வளவு பெரிய தியாகியை தனக்கு ஆதரவாளராக பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி! பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் ஜார்க்கண்டில் முதல்வராக இருக்கும் சிபு சோரன், அந்த நிலையை மறந்தவராக (நான் தவறு செய்துவிட்டேன் என்று பிறகு கூறியுள்ளார்) ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.
பாஜகவிற்கு வந்தது கோபம். சிபு சோரன் அரசிற்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக அறிவித்துள்ளது. முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று கோரியுள்ள சிபு சோரனின் மகன், முதலமைச்சர் மாற்றப்படுவார் என்று ஒரு ‘மாற்றை’ அளித்துள்ளார். இதனை பாஜக ஏற்றுக் கொள்ளும் என்றுதான் தெரிகிறது. இல்லையென்றால் காங்கிரஸ் ராஜ்ஜியம் அங்கும் ஏற்பட்டுவிடுமே? அதைத் தடுக்க வேண்டாமா? இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இதெல்லாம் சகஜமாகிவிட்டது. தமிழ்நாட்டிலுள்ள நாம், இந்திய ஜனநாயகம் கெட்டதற்கு ஏதோ திருமங்கலம் சட்டப் பேரவைத் தேர்தல்தான் வித்திட்டது போல பேசிக் கொண்டிருக்கிறோம். டெல்லி அரசியலோடு ஒப்பிட்டால் திருமங்கலம் மிக மிக ஜுஜுபி என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நமது அரசும், தலைவர்களும் அதைத்தான் இந்த வாக்கெடுப்பின் மூலம் நமக்கு புரிய வைத்துள்ளார்கள். மற்றபடி, இந்த விலைவாசி ஏற்றம், எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற மக்கள் பிரச்சனையெல்லாம்... அதெல்லாம் அவர்களின் அன்றாட அரசியலிற்கான மேட்டர் மட்டுமே. இந்தியா ஒரு மாபெரும் ஜனநாயக நாடு என்று சிலாகித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், நமது நாடு எப்படி ஒரு ஜனநாயக நாடாக இருக்கத் தகுதிபெற்றுள்ளது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.