Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனித உரிமை மீறல்களை மறைக்கிறது ‘தி இந்து’: மே 17 குற்றச்சாற்று

மனித உரிமை மீறல்களை மறைக்கிறது ‘தி இந்து’: மே 17 குற்றச்சாற்று
, சனி, 28 நவம்பர் 2009 (20:48 IST)
ஈழம், லால்கர், திபெத் ஆகியவற்றில் நடந்துவரும் மனித உரிமை மீறல்களையும், படுகொலைகளையும் இருட்டடிப்புச் செய்து, ஊடக அறனிற்கு எதிராக தி இந்து நடந்து கொள்கிறது என்று மே 17 இயக்கம் குற்றம் சாற்றியுள்ளது.

webdunia photo
FILE
கோவை நகரில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற ‘தி இந்து பத்திரிக்கையும் அதன் ஆசிரியர் என்.ராமும் தமிழின விரோதிகளாக செயல்படுவது ஏன்?என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், இந்தியாவின் தேச இறையாண்மைக்கு எதிராகவும், சீனா ஆதரவு கருத்து நிலையை உருவாக்கியும் வரும் என்.ராமை சந்தேகத்திற்குரிய, ஆபத்துமிக்க நபராக மே 17 அறிவிக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள திவ்யோதயா அரங்கில் மே 17 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில் பேசிய அந்த இயக்கத்தின் அமைப்பாளர் திருமுருகன், ஈழ விடுதலைப் போர் தொடர்பான உண்மை விவரங்களை மறைத்தும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக திட்டமிட்டும் தி இந்து பத்திரிக்கையில் செய்திகளை வெளியிட்டு வந்தார் என்று குற்றம் சாற்றினார்.

ஈழத் தமிழினத்தின் மீது சிறிலங்க அரசப் படைகள் தொடுத்த இனப் படுகொலைப் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியும், அது குறித்து ஒரு வரி கூட செய்தி போடாமல் தி இந்து இருட்டடிப்பு செய்ததைச் சுட்டிக்காட்டிய திருமுருகன், மேற்கு வங்க மாநிலம் லால்கரில் பழங்குடியினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்த உண்மைச் செய்திகள் எதையும் தி இந்து வெளியிடவில்லை என்று குற்றம் சாற்றினார்.

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் மீது ஒரு தவறான கருத்தை இந்தியர்கள் மத்தியில் உருவாக்குவதில் தி இந்துவும், அதன் ஆசிரியர் என்.ராமும் தீவிரமாக ஈடுபட்டனர் என்றும், அதே நேரத்தில் சீனத்திற்கு ஆதரவான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு தனது சீனப் பற்றை பறைசாற்றி வருகிறார் என்று கூறினார்.

webdunia
webdunia photo
FILE
சென்னையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் என்.ராம் பேசியபோது, இந்தியாவும், சீனாவும் தங்களுக்கிடையிலான பிரச்சனையை விட்டுக் கொடுத்துத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியபோது, அங்கிருந்த ஒரு பார்வையாளர், எதை விட்டுக் கொடுக்க வேண்டும், எதைப் பெற வேண்டும் என்று கேட்டதற்கு பதிலளிக்க முடியாமல் ராம் நழுவியதை சுட்டிக்காட்டிய திருமுருகன், தி இந்து நாளிதழ் தொடர்ந்து தமிழின எதிர்ப்பு குணத்தைக் காட்டிவருவதை பல்வேறு எடு்த்துக் காட்டுகளுடன் விளக்கினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி திபெத் மகளிர் அமைப்பின் தலைவி டோல்மா, சீன அரசின் ஆக்கிரமிப்பில் திபெத் மக்களின் பண்பாடு, சமயம் ஆகியன எப்படிப்பட்ட ஒடுக்குதலிற்கு ஆளாகிறது என்பதை விளக்கினார்.

தி இந்து பத்திரிக்கை எந்த அளவிற்கு உண்மை மறைக்கும் குணம் கொண்டது என்பதை விளக்கிய எழுத்தாளர் பாமரன், பிரபாகரன் இறந்துவிட்டதாக மூன்று முறை செய்தி வெளியிட்டுவிட்டு, பிறகு அவர் உயிருடன் இருப்பது தெரிந்தும், தவறாக செய்தி வெளியிட்டமைக்காக வருத்தம் தெரிவிக்காத ஒரே நாளிதழ் தி இந்து என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றி தமிழ்.வெப்துனியா.காம் இணையத் தளத்தின் ஆசிரியர் கா. அய்யநாதன், இந்தியா சீனா இடையே பதற்றத்தை ஏற்படுத்துவது ஊடகங்கள் தான் என்று இந்து என்.ராம் குற்றம் சாற்றியதை ஆதாரத்துடன் மறுத்தார்.

திபெத்தியர்களின் தலைவர் தலாய் லாமா அருணாச்சல பிரதேசத்திற்கு செல்வதற்கு இந்திய அரசு அனுமதித்தற்காக கடுமையான கண்டனம் செய்து சீன அரசு ஆதரவு இணையத் தளங்களான பீப்பிள்ஸ் டெய்லி, குளோபல் டைம்ஸ் ஆகியவற்றி்ல் வெளியிடப்பட்ட கட்டுரைகளை அய்யநாதன் படித்துக் காட்டினார்.

1962ஆம் ஆண்டு நடந்த இராணுவ மோதலில் இருந்து கற்றப் பாடத்தை இந்தியா மறந்துவிட்டது என்றும், இந்தியா விரும்பும் வகையில் - இராணுவ ரீதியாக - சீனா பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் பீப்பிள்ஸ் டெய்லியில் வந்த ஆங்கிலக் கட்டுரையை வாசித்துக் காட்டிவிட்டு, இது நட்புறவை நாடும் எழுத்துக்களா என்று கேள்வி எழுப்பினார்.

தமிழர்கள் பிரச்சனையில் எப்படியெல்லாம் தி இந்து செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறது என்பதையும், கச்சத் தீவுப் பிரச்சனையில் அது எழுதிய தலையங்கத்தில் எந்த அளவிற்கு உண்மை மறைக்கப்பட்டுள்ளது என்பதை ஆதாரங்களுடன் விளக்கி அய்யநாதன் பேசினார்.

webdunia
webdunia photo
FILE
இக்கருத்தரங்கில் ஸ்ரீஜித் சுந்தரம் குழுவினரின் ‘தி பொந்து’ என்ற வீதி நாடகம் நடத்தப்பட்டது. தி பொந்து பத்திரிக்கை எவ்வாறு இலங்கைப் போரை திருத்தி செய்தி வெளியிட்டது என்பதை, ‘ஹனுமனால் சீதை கடத்தப்பட்டார், அவரை மீட்க சிறிலங்கப் படைகள் போர்’ என்று செய்தி வெளியிட்டு அந்தப் பத்திரிக்கை ஆசிரியரின் முகமூடியை தொலுறுத்திக் காட்டினர்.

தி பொந்து பத்திரிக்கை ஆசிரியருக்கு ஆதரவாக வந்த கூசாமி பாத்திரம் அரங்கத்தையே அதிரவைத்தது.

இக்கூட்டத்திற்கு பொது நல சேவகர் கிளாடிஸ் தலைமை வகித்தார். இக்கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்டட தீர்மானங்கள் வருமாறு:

1. தன்னை சனநாயகவாதியாக, முற்போக்குவாதியாகக் காட்டிக் கொள்ளும் இந்து பத்திரிக்கையும், அதன் முதன்மை ஆசிரியர் என். ராம், தொடர்ந்து ஈழம், லால்கர், திபெத் போன்ற பகுதிகளில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களையும், படுகொலைகளையும் கண்டிக்காமல், செய்திகளை இருட்டடிப்பு செய்து பத்திரிக்கை அறத்திற்கு எதிராக நடந்து கொள்ளும் செயலை மே 17 இயக்கம் கண்டிக்கிறது.

2. தேச இறையாண்மைக்கு எதிராகவும், சீன ஆதரவு நிலையையே தொடர்நது எழுதி வருவதாலும், சீன ஆதரவுக்கான கருத்து நிலையை உருவாக்கி வருவதாலும் என். ராமை சந்தேகத்துக்குரிய, ஆபத்துமிக்க நபராக மே 17 இயக்கம் அறிவிக்கிறது.

3. தொடர்ந்து தமிழர்களுக்கும், தமிழர் நலன்களுக்கும் எதிராக செயல்படுவது, ஈழத்திற்கு எதிரான கருத்தியல் திரட்சியை ஏற்படுத்துவது, ஈழத்தில் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும் அதை செய்தியாக்காமலஇருட்டடிப்பு செய்து சிங்களப் பேரினவாத நிலைக்கு ஆதரவாக இருந்து வருவதால், இந்துப் பத்திரிக்கை மற்றும் அதன் ஆசிரியர் என். ராம் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என மே 17 இயக்கம் அறிவிக்கிறது.

4. அறிவுஜீவி தளத்திலும், முற்போக்குத் தளத்திலும், பத்திரிக்கைத் தளத்திலும் என். ராமின் நேர்மை சந்தேகத்திற்குரியதாக இருப்பதால் அவரையும், அவரின் கருத்துகளையும் நிராகரிக்கவும், தனிமைப்படுத்தவும் மே 17 இயக்கம் தமிழர்களைக் கேட்டுக்கொள்கிறது.

5. மக்கள் போராட்டங்களுக்கு எதிராகவும், விடுதலைப் போராட்டங்களுக்கு எதிராகவும், அந்நிய சக்திகளுக்கு ஆதரவாகவும் செயல்படுவதால் இந்துப் பத்திரிக்கையை மக்கள் விரோதப் பத்திரிக்கை என அறிவித்துத் தடை செய்ய மே 17 இயக்கம் கோருகிறது.

6. நடைமுறைக்கான சனநாயகத் தளத்தை உருவாக்கிட அனைவரும் இணைந்து செயல்பட மே 17 இயக்கம் அனைவரையும் தோழமையுடன் அழைக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil