நமது நாட்டின் பொருளாதார வாழ்வில் பழங்குடியினருக்கு உரிய இடத்தைத் தராததும், அவர்களை எந்த விதமான சமூக, பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளிலும் பங்கேற்க அனுமதிக்காது தனிமைப்படுத்தியதும் ஒரு அபாயகரமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று டெல்லியில் நேற்று நடந்த வன உரிமைச் சட்ட நடைமுறைப்படுத்தல் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியுள்ளது விவாதத்திற்குரியதாகியுள்ளது.பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பாரம்பரிய வன வாழ் மக்கள் உரிமைகள், நலன்கள் பாதுகாப்பிற்கான முதலமைச்சர்கள் மற்றும் மாநில வன அமைச்சர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், இந்திய சமூகத்தில் புறக்கணிப்பிற்கு உள்ளாகியுள்ள பழங்குடியினரின் உரிமைகளை சட்ட ரீதியாக அங்கீகரிக்காமல் சரிசமமான வளர்ச்சி சாத்தியமாகாது என்றும், அதற்கு 2006ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர வன வாழ் மக்கள் (உரிமைகள் அங்கீகாரச்) சட்டத்தை (The Scheduled Tribe and Other Traditional Forest Dwellers (Recognition of Rights) Act, 2006) முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார். “பல நூற்றாண்டுகளாக வனங்களில் வசித்துவரும் பட்டியல் பழங்குடியினரும், மற்ற மக்களின் உரிமைகளும், வனங்களைக் அழியாமல் கட்டிக்காத்ததில் அவர்களின் பங்களிப்பும் அங்கீகரிக்கப்படவில்லை. அவர்களின் உரிமைகளை நிலைப்படுத்தவும், வனத்தையும், உயிரியல் பரவலையும், சூற்றுச் சூழல் சம நிலையை காத்திடவும், மதிப்புடைய நமது வனச் செல்வங்களைக் காத்திடவுமான பொறுப்புக்களை பகிர்ந்தளிக்க இச்சட்டம் வழி செய்கிறது” என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.துப்பாக்கியின் நிழல் வந்தது ஏன்?பழங்குடியின மக்களின் மீது பிரதமருக்கும், மத்திய அரசிற்கும் திடீரென்று இப்படி கரிசனம் பிறந்தது ஏன் என்கின்ற கேள்விக்கும் பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையில் பதிலுள்ளது. “நமது நவீனப் பொருளாதார வாழ்வில் பழங்குடியினருக்கு உரிய இடத்தைத் தராததும், அப்படிப்பட்ட தனிமைப்படுத்தல் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்ததும் இப்போது அபாயகரமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடி சமூகத்தினரை சமூகப் பொருளாதார ரீதியாக திட்டமிட்டுச் சுரண்டுவதை இதற்கு மேலும் சகித்துக்கொள்ள முடியாது. அதே நேரத்தில் துப்பாக்கி நிழலில் எந்த ஒரு நீடித்த நடவடிக்கையும் சாத்தியமில்லை” என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதன் பொருள், பல பத்தாண்டுகளாக சமூக, பொருளாதார ரீதியாக புறக்கணிக்கப்பட்டு வந்த பழங்குடி சமூகத்தினர் இன்று துப்பாக்கிகளின் (மாவோயிஸ்ட்டுகள் என்பதைப் புரிந்து கொள்க) நிழலில் அடைக்கலம் தேடியுள்ளனர் என்பதையும், அப்படித் துப்பாக்கி ஏந்தியவர்களால் ஒரு மாற்று பொருளாதார, சமூகத் திட்டத்தை அளிக்க முடியாது என்றும் மன்மோகன் சிங் கூறியுள்ளார். “வன்முறைக் கலாச்சாரம் சாதாரண மக்களுக்கு மேலும் துயரத்தைத்தான் சேர்க்கும், வன்முறையை சகித்துக் கொள்ள முடியாது, அதன் அச்சுறுத்தலை உறுதியாக நின்று ஒழித்திட வேண்டும்” என்று மாவோயிஸ்ட்டுகளை ஒழிப்பதில் அரசிற்கு உள்ள ‘உறுதிப்பாட்டை’யும் அம்மாநாட்டில் பிரதமர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பேச்சு ஒரு வகையில் மிகச் சிறந்த ஒப்புதல் வாக்குமூலம் என்பதில் சந்தேகமில்லை. நாட்டின் பொருளாதார, சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் பழங்குடியினரை கண்டுகொள்ளாமல் புறக்கணித்தது மட்டுமின்றி, அவர்கள் திட்டமிட்டச் சுரண்டலிற்கு ஆட்படுத்தப்பட்டதையும் அனுமதித்து வந்தோம் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.
நமது நாட்டின் நகர, கிராம வாழ்விற்கு அப்பாற்பட்டவர்களாகவும், தங்கள் உரிமைகளைப் பொறுத்த விழிப்புணர்வு அற்றவர்களாகவும், அதே நேரத்தில் அரசு நிர்வாகத்திற்கோ அல்லது தங்களோடு தொடர்பற்ற எவருக்கும் எவ்வித தீங்கும் இழைக்காமல் வாழ்ந்து வருபவர்கள் பழங்குடியின மக்கள். சட்டத்தால் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) என்று குறிப்பிடப்படும் இம்மக்கள்தான் நமது நாட்டின் மொத்த மக்கட் தொகையில் 8 விழுக்காடு மட்டுமே இருந்தாலும், இவர்கள் அதிகமாக வாழும் 187 மாவட்டங்களில்தான் நமது நாட்டின் 68 விழுக்காடு வனப்பகுதி உள்ளது. தங்களின் வாழ்விடமாக, உலகமாகத் திகழும் வனப்பகுதியை அதன் வளம் குன்றாமல் காத்து வருபவர்கள் இம்மக்கள். இவர்களின் இந்த உன்னதப் பங்களிப்பைத்தான் நாம் இதுநாள் வரை அங்கீகரிக்கவில்லை என்று பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.வனத்தையும், வளங்குன்றா அதன் செல்வங்களையும் காத்துவந்த இவர்களை அரசு நிர்வாகமும், அரசியல் கட்சிகளும், தொழில் நிறுவனங்களும் எல்லா விதத்திலும் - பிரதமர் பயன்படுத்திய அதே வார்த்தையில் கூறுவதெனில் - சுரண்டி வந்தனர். அவர்களின் வாழ்விடமாகத் திகழ்ந்த காட்டை அழிப்பதிலும், இயற்கை வளங்களைச் சுரண்டுவதிலும் மட்டுமே இந்த முக்கூட்டணி நின்றுவிடவில்லை, அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்தியது, அவர்களின் அந்தரங்க வாழ்க்கையிலும் அத்துமீறியது. இப்படி ஓரிரு வனப் பகுதிகளில் மட்டும் நடக்கவில்லை, சுதந்திர இந்தியாவின் வனப் பகுதிகள் அனைத்திலும் இந்த திட்டமிட்டச் சுரண்டல் தங்கு தடையின்றி நடந்துவந்தது. அதே நேரத்தில் _ பிரதமரே குறிப்பிட்டுள்ளது போல - அரசுகள் தீட்டிய சமூக, பொருளாதாரத் திட்டங்கள் எதுவும் அவர்களைச் சென்றடையவில்லை. ஒரு பக்கத்தில் சமூக, பொருளாதார வாழ்விலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, தங்களுடை உரிமைகளுக்கும், உடமைகளுக்கும் எவ்வித பாதுகாப்பும் அற்ற நிலையில், பாதுகாக்க வேண்டியவர்களே தொழில் நிறுவனங்களுடனும், ஊழல் அரசியல்வாதிகளுடனும் இணைந்து ஒடுக்க முற்பட்ட நிலையில், இயற்கையாக எழும் எதிர்ப்புணர்வு அவர்களை ஒரு கொள்கை ரீதியான ஆயுதப் பாதுகாப்பை ஏற்க தூண்டியது. துப்பாக்கி நிழலில் எதையும் செய்ய முடியாது என்று பிரதமர் வாதிடுகிறார். ஆனால், அரசு நிர்வாகம் + தொழில் நிறுவனங்கள் + உள்ளூர் அரசியல்வாதிகள் + வனக் காப்பாளர்கள் இவர்களின் கூட்டணியின் பாதிப்பில் இருந்து, பிரதமர் கூறும் அந்த துப்பாக்கி நிழல்தான் பாதுகாப்பை அவர்களுக்குத் தந்துள்ளது என்பதற்கு யதார்த்தம் சாட்சியாகவுள்ளது.ஒரு முன்னேறிய மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டிலேயே, வனப் பகுதிகளும், பழங்குடியினரும் அத்துமீறல்களுக்கு ஆட்படும்போது, ஒரிசா, பீகார், சட்டீஸ்கார், ஜார்க்கண்ட் போன்ற இடங்களில் எப்படிப்பட்ட ஒடுக்குமுறை இத்தனை ஆண்டுக் காலமாக அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது என்பதையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.வனப் பாதுகாப்புச் சட்டம், வன உயிர்கள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த அப்பாவி மக்கள் மீது வனத் துறையினர் தொடர்ந்த வழக்குகளின் எண்ணிக்கை பல இலட்சங்கள்! இதனைப் பிரதமர் தனது உரையில் சுட்டிக்காட்டிவிட்டு அப்படிப்பட்ட இலட்ச வழக்குகளை சட்டீஸ்கார் அரசு திரும்பப் பெற்றதை மற்ற மாநிலங்களும் கடைபிடிக்க வேண்டும் என்று ஆலோசனையும் அளித்துள்ளார்!
அப்படியானால் இந்த வழக்குகள் யாவும் அடிப்படையற்றவை என்பதும், பழங்குடியினர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைக்கு அத்தாட்சிகள் என்பதும் நிரூபனமாகிறதல்லவா?
பழங்குடியினர் வாழ்விடமாகத் திகழும் வனப்பகுதிகளிலுள்ள இயற்கை மற்றும் கனிம வளங்களே அரசுகளை (தனியார் தொழில் நிறுவனங்களை) பெரிதும் ஈர்க்கின்றனவே தவிர, அம்மக்களின் நல வாழ்வோ உரிமைகளோ அல்ல என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
வாழ்வைப் பறிப்பது மறு வாழ்வா?
நாட்டின் முன்னேற்றத்திற்கு என்று கூறி செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவர்களின் வாழ்வாதரங்களையும், அவர்கள் தொன்று தொட்டு வாழ்ந்த இடங்களைப் பறிப்பதையும், மறுவாழ்வு என்ற பெயரில் அதுவரை இயற்கையோடு இயைந்த சுதந்திர வாழ்வை வாழ்ந்துக் கொண்டிருந்தவர்களை, ஒரு இரவில் அனைத்தையும் பறித்து, தொழிற்சாலைகளில் கூலியாட்களாக மாற்றுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? பல தலைமுறைகளாக வன வாழ்வை அமைதியுடன் மேற்கொண்டு வந்த மக்களை, முன்னேற்றம் என்ற பெயரால் வாழ்வு, வாழ்வுரிமை, வாழ்விடம் உள்ளிட்ட அனைத்தையும் பறித்து, அவர்கள் விரும்பாத ஒரு வாழ்வை அவர்களின் மீது திணிப்பதென்பதை எந்த நாகரீக வரையறைப்படி ஏற்பது? அவர்களுக்குத் தரமான கல்வி வசதியளிப்பது என்றுத் துவங்கி, மின்சாரம் அளித்து, எவ்வித அழுத்தமுமின்றி அவர்கள் வாழ்ந்த இயற்கையான, இயல்பான வாழ்க்கையை சிதைப்பதில் என்ன மேம்பாடு உள்ளது?மறுவாழ்வு, மீள் குடியமர்த்தல் என்று கூறி, சமூகத்தின் வசதிக்காக அவர்கள் அறிந்திராத ஒரு வாழ்வை, அவர்களுக்கு பரிச்சயமில்லாத ஒரு புதிய இடத்தில் மேற்கொள்ளச் செய்வது எப்படி ‘மறு வாழ்வு’ அளிப்பது ஆகும். முன்னேற்றம் என்ற பெயரில் நாம் கூறும் வழிகள் அனைத்தும் அவர்களுக்கு எவ்விதத்திலும் பொருந்தாதவையே, இதனை சமூகமும், அரசுகளும் புரிந்து கொள்ள வேண்டும்.தொழில் நுட்ப வசதிகளோடு கூடிய வாழ்க்கை, நம்மிடமிருந்து எத்தனையோ விடயங்களைப் பறித்து விடுகிறது. அழுத்தம் மிகுந்த ஓய்வற்ற வாழ்க்கையில் தள்ளும் இந்த தொழில் நுட்ப வாழ்வை, கடினமாக உழைத்தாலும், நிம்மதியாக வாழும் பழங்குடியினர் மீது திணிக்க நமக்கு ஏது அதிகாரம்? அரசு நினைத்தால் ‘வாழ்க்கை’யைக் கூட திணிக்கலாமா?இப்படி எதையும் யோசிக்காமல், நமது பொருளாதார பிரைனில் உதித்ததையெல்லாம் பழங்குடி மக்கள் மீது திணிக்க முற்படும்போது அவர்கள் அமைதி இழக்கிறார்கள், உரசல்கள் பிறக்கின்றன, அதுவே பிறகு அரசு நிர்வாகத்துடனான மோதலாக மாறி, பிறகு அரசே அதன் மக்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தும் நிலையைத் தோற்றுவிக்கிறது.எனவே, துப்பாக்கியின் நிழலின் கீழ் மேலும் மேலும் பழங்குடியின மக்களும், நிலங்களும் பாதுகாப்பைத் தேடி அடைக்கலாம் புகாமல் தடுக்க வேண்டுமெனில், அவர்களின் வாழ்விலும், வன வளத்திலும் செய்யப்படும் அத்துமீறல்களை நிறுத்த வேண்டும். சட்டங்களால் யாருடைய உரிமையையும் காப்பாற்ற முடியாது என்பதை மற்ற எவரையும் விட பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நன்றாகவே தெரியும். அரசமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள் கூட இத்தனை ஆண்டு சுதந்திர வாழ்வில் இயற்றப்பட்ட பல்வேறு சட்டங்களால் பறிக்கப்பட்டதை அறிவோம். எனவே, பழங்குடியினர் வாழ்வுரிமையை சட்டத்தால் காப்பாற்ற முற்படுவதை விட, அவர்களின் வாழ்வில் குறிக்கிடாத, அதே நேரத்தில் வன வளங்களைக் காப்பாற்றும் பொதுக் கொள்கை உருவாக்கப்படுவது சரியான வழியாக இருக்கும்.