ஐக்கிய நாடுகள் அமைப்பை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிவரும் இந்தியா, ஐ.நா.வின் உயர் அதிகார அமைப்பான பாதுகாப்புப் பேரவையின் (UN Security Council) நிரந்தர, தற்காலிக உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டு்ம் என்று ஒரு கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையின் நிரந்தர உறுப்பினராக ஆதரவு தரவேண்டு்ம் என்ற இந்தியாவின் இந்த நீண்ட காலக் கோரிக்கைக்கு தற்பொழுது நிரந்தர உறுப்பினர்களாக உள்ள இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியன ஆதரவு தெரிவித்தாலும், ஐ.நா.பொது அவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு அதற்குக் கிட்டவில்லை.
இன்றைய உலகின் பொருளாதார, இராணுவ சம நிலைகளை ஐ.நா. அவை பிரதிபலிக்க வேண்டுமெனில் அதன் பாதுகாப்புப் பேரவையின் நிரந்தர உறுப்பினராக வளர்ந்துவரும் நாடுகள் சிலவற்றிற்கும் இடம் தர வேண்டு்ம் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால், அந்த கோரிக்கையை உலக நாடுகள் சற்றும் கருத்தில் கொள்ளாத காரணத்தினால், இப்போது மற்றொரு கோரிக்கையை இந்தியா முன் வைத்துள்ளது. அதன்படி, பாதுகாப்புப் பேரவையின் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை மேலும் 6 உறுப்பினர்களைச் சேர்த்து 11 ஆக அதிகரிக்க வேண்டு்ம் என்றும், தற்காலிக உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன் மேலும் 4 உறுப்பு நாடுகளைச் சேர்த்து 14 ஆக உயர்த்தி, அதன் மூலம் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 25 ஆக (தற்பொழுது மொத்தம் 15 உறுப்பினர்கள் உள்ளனர்) உயர்த்த வேண்டும் என்று கோரியுள்ளது.
இதற்கு ஐ.நா.வின் பல உறுப்பு நாடுகள் தெரிவிக்கும் எதிர்ப்பிற்கு பதிலளித்துள்ள ஐ.நா.விற்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ஹர்தீப் பூரி, பாதுகாப்புப் பேரவையை விரிவாக்கம் செய்வதற்கு ஆதரவு உள்ளதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள ஐ.நா.வின் பொது அவையில் வாக்கெடுப்பு நடத்தத் தயாரா என்று சவால் விடுத்துள்ளார். ஐ.நா. பாதுகாப்புப் பேரவை சாதித்தது என்ன? ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையை விரிவாக்கம் செய்வதால் அதன் நடவடிக்கைகளில் எந்த விதத்திலாவது முன்னேற்றம் ஏற்படுமா? என்ற கேள்விக்கு பதில் தேடுவதற்கு முன்னால் இதுவரை ஐ.நா. பாதுகாப்புப் பேரவை சாதித்து என்ற கேள்விக்கு பதில் தேடுவது அவசியமாகிறது. ஏனெனில், இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, சர்வதேச அமைதியை காப்பதற்கும், உலக நாடுகளிடையே நல்லுறவை பேணுவதற்கும் உருவாக்கப்பட்டது ஐ.நா. அவை. அதில் இன்று 192 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இவை அனைத்தும் ஐ.நா.வின் பொது அவையின் (General Council) உறுப்பினர்கள். ஆனால் ஐ.நா. அவையின் நடவடிக்கைகளை தீர்மானிப்பது அதன் உயர் அதிகார அமைப்பான பாதுகாப்புப் பேரவைதான். இதன் நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா, இங்கிலாந்து, இரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகியன உள்ளன. இவைகள் மட்டுமின்றி, பொது அவையில் இருந்து தேர்வு செய்யப்படும் 10 தற்காலிக உறுப்பி நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன. இந்தப் 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்புப் பேரவையில் அணு ஆயுதங்களை பெற்றிருப்பதால் வல்லரசுகளாக நிரந்தரமாக அமர்ந்துள்ள 5 நாடுகள் வைத்ததுதான் சட்டம். இந்த ஐந்து நாடுகளுக்கும் வீட்டோ என்றழைக்கப்படும் இரத்து அதிகாரம் உள்ளது. பாதுகாப்புப் பேரவையில் எந்த ஒரு பிரச்சனையை விவாதிக்க வேண்டுமென்றாலும், அதன் மீது தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்றாலும் இந்த 5 நாடுகளும் சம்மதித்தால்தான் சாத்தியம்! இவற்றில் ஒரு நாடு ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் விவாதிக்கவும் முடியாது, தீர்மானம் நிறைவேற்றவும் முடியாது! அந்த அளவிற்கு ஜனநாயகம் நிலவும் இடம்தான் ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவை.
உதாரணத்திற்குக் கூற வேண்டுமானால், இலங்கையில் சிறிலங்க அரசு ஈழத் தமிழர்களை நூற்றுக்கணக்கிலும், பின்னர் ஆயிரக்கணக்கிலும் கொன்று குவித்தபோது, அது குறித்து விவாதிக்க அப்போது ஐ.நா.பா.பே.யின் தலைவராக இருந்த மெக்சிகோ நாடு ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதற்கு கோஸ்டா ரீக்கா, ஆஸ்ட்ரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவும் அளித்தன. ஆனால் விவாதிக்கப்படவில்லை. ஏன்? “இலங்கையில் நடைபெறும் போர் அந்நாட்டு உள்நாட்டுப் பிரச்சனை. மேலும், அதனால் சர்வதேச அமைதிக்கு குந்தகம் ஏதும் ஏற்படவில்லை” என்று கூறி, அப்பிரச்சனை பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கத் ‘தகுதியற்றது’ என்று சீனா கூற, அதனை மற்றொரு வல்லரசான இரஷ்யா (இரஷ்யாதான் சிறிலங்க அரசிற்கு கொத்துக் குண்டுகளை வழங்கிய நாடு!) ஆதரவளிக்க, ஈழத் தமிழர்களின் இனப் படுகொலை விவாதிக்கப்படவில்லை. இதில் குறிப்பிடத்தக்க ஒரு விடயம் யாதெனில், சிறிலங்க அரசப் படைகளால் ஜனவரி இறுதியில் இருந்து மார்ச் மாத இறுதிவரை கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 2700 என்ற விவரத்தை உள்ளடக்கி அறிக்கையை ஐ.நா. அலுவலகமே தயாரித்து (வெளியிடாமல்) வைத்திருந்தது! பல்லாயிரக்கணக்கில் அப்பாவி மககள கொல்லப்பட்டது, கொல்லப்படுவது உள்நாட்டுப் பிரச்சனை! எப்படி இருக்கிறது ஐ.நா.பா.பே.யின் செயல்பாடு? சில வாரங்களுக்குப் பிறகு, ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் அலுவலகத்தின் தலைமை அலுவலரான விஜய் நம்பியார் இலங்கை சென்று, அங்குள்ள ஐ.நா. அலுவலகம் தந்த ‘படுகொலை விவரங்களை’ திரட்டிக் கொண்டு வந்தார். முன்பு வந்த கணக்கை விட அது மிக அதிகமாகும். அவர் நியூ யார்க் திரும்பியவுடன் அது குறித்து பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்க வேண்டும் என்று தற்காலிக உறுப்பினர்கள் கேட்டுக் கொண்ட பின்னரும், சீனாவின் எதிர்ப்பால் அது விவாதிக்கப்படவில்லை. பாதுகாப்புப் பேரவை உறுப்பினர்களுக்கு தனது பயண விவரத்தை வெளியிட முடியாது என்று விஜய் நம்பியார் கூறியது ஒரு தனிக் கதை. ஆனால் அவர் பான் கீ மூன் வசம் அளித்த விவரங்களின் அடிப்படையில் விவாதிக்க முடியாமல் போனதற்கு சீனாவிடம் இருந்த வீட்டோ அதிகாரமே காரணம்.
போர் முடிந்ததாகக் கூறப்பட்ட பின்னர் அங்கு சென்றுவந்த பான் கீ மூன், தனது ‘அனுபவத்தை’ பாதுகாப்புப் பேரவையில் (இரகசியமாக) பகிர்ந்து கொண்டதன் அடிப்படையில் கூட எந்த விவாதமும் நடைபெறவில்லை! அதன் பிறகு மூன்று இலட்சம் தமிழர்கள் முகாம்களில் வதைபடுத்தப்பட்டு வருவதை தடுத்து நிறுத்தவும் பாதுகாப்புப் பேரவை இன்று வரை முன்வரவில்லை. ஏனென்றால் இந்தப் பெரிய பிரதர்கள் ஐந்து பேரும் ஒருமித்து ஒப்புக் கொண்டால்தான் உலகில் அது பிரச்சனையாக ஒப்புக் கொள்ளப்படும்! இந்த ஒரு உதாரணத்தை மட்டும் வைத்து ஐ.நா.பா.பே.யின் நடவடிக்கையை தீர்மானித்துவிட முடியுமா? என்று கேள்வி எழுமாயின் மற்றொரு முக்கிய பிரச்சனைக்கு எப்படி முடிவெடுக்கப்பட்டது என்பதையும் விவாதிக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான தீர்மானங்கள்!2001
ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் மீது விமானங்களைக் கொண்டு மோதி தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அது குறித்து விவாதிக்கக் கூடிய ஐ.நா.பா.பே., பயங்கரவாதத்தை ஒடுக்க சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வழிவகுக்கும் தீர்மானங்களை சட்டுப்புட்டென்று நிறைவேற்றியது. ஒரே ஒரு தீர்மானமல்ல, பல தீர்மானங்களை அடுத்தடுத்த வாரங்களில் நிறைவேற்றியது. ஏனென்றால் பாதிக்கப்பட்டது அமெரிக்கா அல்லவா? பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க இணைந்து செயல் படவேண்டும், பயங்கரவாதத்தி்ற்கு ஆதரவளிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும், அதனை ஒடுக்க கடுமையான சட்டங்களை நிறைவேற்ற வேண்டும், பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதென கருதும் இயங்கங்களை தடை செய்யலாம் என்றெல்லாம் இந்த 5 வல்லரசுகளும் ஒன்றிணைந்து தீர்மானம் நிறைவேற்றி மற்ற நாடுகளின் மீது திணித்தன. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், பயங்கரவாதம் என்றால் என்ன என்பது குறித்த வரையறையை இந்த நாடுகள் இதுவரை செய்யவில்லை என்பதே!
இப்படி வரையறை செய்யாமல் விட்டதனால், இந்த வல்லரசுகள் இயக்கங்களை மட்டுமல்ல நாடுகளையும் பயங்கரவாத்திற்கு உதவும் நாடுகள் என்றும், அதற்கு உதவிடும் அரசுகள் என்றும் தங்கள் வசதிக்கு கூறிக்கொண்டு படையெடுத்து தாக்குதலும் நடத்தி வருகின்றன. ஆக இந்த 5 வல்லரசுகளின் வல்லமையே பாதுகாப்புப் பேரவையை பொறுத்த மட்டில் ‘ஜனநாயக’மாக உள்ளது. இவர்களுடைய வல்லாதிக்கம் ஐ.நா. அவையின், அதன் பாதுகாப்புப் பேரவையின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதோடு நிற்கவில்லை, ஐ.நா.வின் பல்வேறு அமைப்புகளையும் கட்டு்ப்படுத்துகின்றன.
இவர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டால் மட்டுமே மனித உரிமை மீறல், போர்க் குற்றம் என்பதெல்லாம் நடைமுறைக்கு வரும். அதனால்தான் கொசோவோ நாட்டிற்கு ஒருவாராகவும், ஈழத் தமிழனுக்கு அதற்கு மாறாகவும் நடக்கின்றன.
இங்கே வல்லமை அங்கே லாபி
ஐ.நா.வின் மனித உரிமை மன்றத்தில் என்ன ஆனது? இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கானத் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை செயற்கைகோள் படங்கள் வாயிலாகவும், மற்ற வழிகளிலும் உறுதியாக அறிந்திருந்தும், சிறிலங்காவிற்கு எதிராக மனித உரிமை மீறலையோ அல்லது போர்க் குற்றத்திற்காகவோ விசாரணை நடத்த (அதுவும் அந்த நாடே விசாரணை நடத்த!) தீர்மானம் நிறைவேற்ற முடியவில்லையே, எதனால்? இந்தியா, சீனா ஆகிய இரண்டு தெற்காசிய வல்லரசுகளும் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி சிறிலங்க அரசைக் காப்பாற்றியது மட்டுமின்றி, அதற்கு ஆதரவான தீர்மானத்தையும் நிறைவேற்றித் தந்தனவே! இதைத்தான் மனித உரிமை அமைப்பின் அலுவலர் ஒருவர், “மனித உரிமை மன்றத்தில் எல்லாமே லாபிதான். எனவே அங்கு சிறிலங்காவிற்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் எனக்கு கொஞ்சமும் ஆச்சரியமில்லை” என்று கூறினார். ஆக, ஐ.நா.வின் நடவடிக்கை எதுவாயினும் அதனை வல்லரசுகளும் அதன் தோழமைகளும்தான் முடிவு செய்கின்றன. ஐ.நா.வின் அதிகாரத்தை மீறி இந்த வல்லரசுகள் தன்னிச்சையாக முடிவெடுத்து செயலாற்றும்போதும் ஐ.நா. அதனை வாய்மூடி, கண்மூடி மெளனம் காக்கிறது. இதுதானே ஈராக் மீது நடந்த ஆக்கிரமிப்பு படையெடுப்பு உணர்த்தியது?
இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஐ.நா.பா.பே.வின் பலத்தை - அதுவும் வீட்டோ அதிகாரத்துடன் - உயர்த்துவதால் உலகிற்கு என்ன நன்மை ஏற்படப்போகிறது? தங்களுக்கு எதிரான தீர்மானங்கள் எதுவும் பாதுகாப்புப் பேரவையில் நிறைவேற விடாமல் காப்பாற்றிக் கொள்ளவும், தங்களுடைய தோழை நாடுகளின் மீறல்களை மறைத்து அவைகளைக் காப்பாற்றவும்தான் வழி வகுக்கும். இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் ஐ.நா. அவை அது தோற்விக்கப்பட்டதன் நோக்கையே கெடுத்து, அதனை பயன்றற அமைப்பாக்கிவிடும். உலக அமைதியையும், சர்வதேச உறவுகளில் சமத்துவத்தையும் கொண்டுவர இந்தியாவோ அல்லது மற்ற எந்த நாடுமோ நினைத்தால், அவைகள் முதலில் பாதுகாப்புப் பேரவை எதற்கு என்ற கேள்வியை எழுப்ப வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் உறுப்பினர்களாக உள்ள ஒரு அமைப்பில் சில நாடுகளுக்கு ‘அழிக்கும் திறனை முதலில் பெற்றவை’ என்பதற்காக அவைகளுக்கு சிறப்பு அதிகாரங்கள் அளிப்பது நியாயமென்றால், அதே திறனை மற்ற நாடுகளும் பெறுவதற்கு அதுவே காரணமாகதா? (அதனால்தானே அணு ஆயுத சக்தி பெற்ற நமது நாட்டையும் வல்லரசு என்று அங்கீகரிக்க வேண்டும் என்று கோருகிறோம்). அணு ஆயுதப் பரவல் தடுப்பு இன்றுவரை ஏற்றுக் கொள்ளப்படாததற்கு இபபடிப்பட்ட ஒரு தலைப்பட்ச அணுகுமுறை காரணமல்லவா? எனவே, ஐ.நா. அவையை அது உலக சமாதானத்திற்கு நன்கு பயன்படக் கூடிய ஒரு உயர் அதிகார அமைப்பாக மாற்ற நினைத்தால் அதற்கு முதல் தேவை பாதுகாப்புப் பேரவையை இல்லாமல் செய்வதே.