அதற்கு ஒரு அத்தாட்சியாக, நம் நாட்டில் 40, 50 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யும்போது, அங்கு 200 ரூபாய்க்கு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பெட்ரோல் விலையை உயர்த்தியது தவறு என்று தீர்ப்பளித்தார். உடனடியாக அவர் மிரட்டப்பட்டார்! இதுபோன்ற தீர்ப்புகளைக் கூறிக் கொண்டிருந்தால் நீ உயிருடன் இருக்க மாட்டாய் என்று அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் மிரட்டியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கே இந்த நிலைமை என்றால், மற்றவர்களின் கதி என்ன வென்று சொல்லவே வேண்டாம்.இப்படித்தான் ஒவ்வொருத் துறையிலும் மிகவும் கூர்மையாக அமைப்புகளை உடைத்தெறிந்தனர். காவல்துறைக்கும், ராணுவத்திற்கும் முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டது. என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறப்பட்டது. இது உச்சக்கட்டத்திற்கு போனது.
இது பற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், ஐ.நா.வில் கூறியது என்னவென்றால், ஒரு 10 போலிஸ்காரர் இருந்தால், அதில் 3 பேர் ரவுடிகள் போல செயல்படுகிறார்கள். அவர்களால்தான் மற்ற காவல்துறைக்கும் கெட்ட பெயர் வருகிறது என்று பொதுவாக கூறுவார்கள்.
இவர் சிறிலங்காவில் பல முகாம்களுக்கும், பல இடங்களுக்கும் சென்றுவிட்டு என்ன சொல்கிறார் என்றால், இந்த மாதிரியான சித்ரவதை செய்யும், சட்ட மீறல் செய்யும் காவலர்கள் குறைந்தபட்சமாக இல்லை. அவர்கள்தான் அதிகபட்சமாக இருக்கிறார்கள். அதாவது 10இல் 7 பேர் இருக்கிறார்கள். எனவே, ஏதோ ஒரு சில காவலர்கள் இப்படி செய்து விட்டார்கள் என்று ஒதுக்க முடியாது, ஏறக்குறைய அனைத்து பேருமே அங்கு அப்படித்தான் உள்ளனர் என்று கூறியுள்ளார்.
இதை நான் சொல்லவில்லை, ஐ.நா.வால் அமர்த்தப்பட்ட அதிகாரி திட்டவட்டமாகச் சொல்கிறார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தெளிவாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்.
ஜனநாயகப் போர்வையில் அங்கு ஒரு ராணுவ ஆட்சி அங்கு நடந்து கொண்டிருக்கிறது. 2006ஆம் ஆண்டு முதல் இந்த நிலைதான் அங்கு நிலவிக் கொண்டிருக்கிறது. அங்குள்ள மக்களை கடத்திச் செல்வதும் கொல்வதும் மிகவும் சாதாரணமாக நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதுபோன்று கொல்லப்பட்டுள்ளனர்.
கொழும்புவில்தான் இது அதிகமாக நடக்கிறது. ஒரு நான்கு பேர் ஒரு இளைஞரைக் கடத்திச் சென்று கொன்று விடுவார்கள். இதனால், மற்றவர்களுக்கு, நாளைக்கு நமக்கும் இந்த நிலைதான் என்ற பயம் வரும், இதனால் சமுதாயமே ஒரு அச்சத்திற்குள்ளாகியுள்ளது.
இது ஒரு அரச பயங்கரவாத நிலையாகும். அரசே ஒரு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு, மக்களை பயந்த நிலையிலேயே இருக்க வைப்பதான முறையாகும்.
இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தமிழர்களை மட்டும் இவர்கள் தாக்கவில்லை. தமிழர் அல்லாதவர்களும் இந்த தாக்குதலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். சிங்களர்கள், அதாவது சிங்கள பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், சங்கங்களைச் சேர்ந்தவர்கள், அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மறைந்து போய்விடுவார்கள்.
சிங்களர்கள் பலர், தமிழர்களின் நியாயமான கோரிக்கைக்கு வழி காண வேண்டும், அது வன்முறை மூலமாகவோ, ராணுவத்தின் நடவடிக்கை மூலமாகவோ முடியாது. அரசியல் தீர்வைத் தான் காண வேண்டும் என்று முன் வைத்தவர்கள் காணாமல் போயுள்ளனர். இந்த காலக்கட்டத்தில் 20 பத்திரிக்கையாளர்கள் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள். மற்றவர்கள் சிங்களவர்கள். எனவே இந்த ஆட்சி தமிழர்களுக்கு மட்டும் எதிரான ஆட்சி அல்ல, ஒரு சர்வாதிகார ஆட்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,
1988, 1989ஆம் ஆண்டுகளில், ஜே.வி.பி. ஆட்சி நடந்த போது 40,000 பேர் ராணுவத்தினரால் நடு ரோட்டில் தூக்கிலிடப்பட்டனர். பெளத்த சமுதாயத்தைச் சேர்ந்த இலங்கை அரசு, தன்னுடைய மக்கள் 40,000 பேரையே கொன்று குவித்துள்ளதே, அது தமிழர்களைக் கொல்வதில் ஏதாவது ஆச்சரியம் உள்ளதா? வன்முறையில் ஊறிய ஒரு ஆட்சி, ராஜபக்சே மட்டுமல்ல, அதற்கு முந்தைய ஆட்சியாளர்களும் அப்படித்தான் இருந்துள்ளனர்.
முன்பொரு காலத்தில், இலங்கையில் 5,000 பேரைக் கொன்ற வழக்கை ஐ.நா. முன்பு கொண்டு சென்றவர் ராஜபக்சே. தானே ஆய்வு செய்து, ஆதாரங்களைத் திரட்டி ஐ.நா.வில் வழக்குத் தொடர்ந்தவர். அப்போது, ஐ.நா.வின் பார்வை எப்படி இருக்கும், ஐ.நா.வின் நடவடிக்கை எப்படி இருக்கும், அவர்களது கண்ணோட்டம் என்ன என்பது எல்லாமே தெரியும், அதனால் இவர் ஆட்சிக்கு வந்த பிறகு, ஐ.நா.வை எப்படி சரிகட்டுவது என்று சரியாக கணித்து ஒவ்வொரு காரியத்தையும் செய்துள்ளார்.
தமிழ்.வெப்துனியா: ஐ.நா.வில் சுவிட்சர்லாந்து கொண்டு வந்த தீர்மானத்தில், எல்டிடிஇ எனப்படும் பயங்கரவாத அமைப்பை நிர்மூலம் செய்துவிட்டீர்கள். அதற்கு பாராட்டுகள், அங்கு ஏதேனும் மனித உரிமை மீறல்கள் நடந்திருக்குமேயானால், ஏதாவது போர் குற்றம் நடந்திருக்குமேயானால், அதற்கு சிறிலங்க அரசு விசாரணை நடத்தி, குற்றத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று ஒரு சாதாரண தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனரே?
சுரேஷ்: முதலில் இந்த கூட்டத்தை கூட்டியதே ஜெர்மனிதான். அதன் உரையிலும் முதலில் விடுதலைப் புலிகளை தாக்கிப் பேசிவிட்டுத்தான் தனது உரையை துவக்கியது. எல்டிடிஇ- அமைப்பினரும் சில அத்துமீறல்களை செய்துள்ளனர், அதை மறுப்பதற்கில்லை. ஆனால், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை விடுதலைப் புலிகளின் பிரச்சினை என்று கூறுவது வரலாற்றுத் தவறு. அதாவது விடுதலைப் புலிகள் என்பது தமிழர்களின் முக்கிய அங்கம். ஆனால் அவர்களையும் மீறியதுதான் தமிழர்கள் பிரச்சினை.
கடந்த 20, 30 ஆண்டு கால தமிழர்கள் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் ஒரு முக்கிய அமைப்பாக இருந்துள்ளனர். தமிழர்களைப் பற்றிய தவறான பிரச்சாரத்தின் மூலம், அவர்களைப் பற்றிய எண்ணத்தை மாற்றினர். தமிழர்களா... அவர்கள் வீணாக வன்முறைக்குப் போவார்கள் என்று எண்ண வைத்தனர். அதுதான் அவர்களது முதல் வெற்றி. இதனை தமிழக மக்கள் புரிந்து கொள்ளவில்லை. வெறும் மேடைப் பேச்சில் மட்டுமே தங்களது திறனைக் காட்டினர். இதனை எதிர்க்கக் கூடிய அமைப்பை நாம் உருவாக்க வில்லை. இது ஒரு கசப்பான உண்மை.
தமிழகத்தில் உள்ள அமைப்புகள், இலங்கைப் பிரச்சினையை கொண்டு போன முறையில் தவறு உள்ளது என்பதை நிச்சயமாகச் சொல்லாம்.
தமிழ்.வெப்துனியா: விடுதலைப் புலிகளும் சரி, இலங்கை அரசும் சரி பல விதிகளை மீறி மனித உரிமை மீறல்களை செய்துள்ளன. ஆனால், இதுபற்றி எதையும் விசாரிக்காமல், இலங்கை அரசு மனித உரிமையை நிலைநாட்டியுள்ளது, இந்த பணி மேலும் வளர வேண்டும் என்று பாராட்டி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எந்த அடிப்படையில் நியாயமானது?
சுரேஷ்: முதலில் இலங்கை அரசாங்கம் இந்த பிரச்சினையை எவ்வாறு கொண்டு போயுள்ளது என்றால், இந்த நாடுகள் அனைத்தும் ஏற்கனவே வெள்ளைக்காரர்களின் ஆட்சியில் இருந்தவை. இழந்த இப்பகுதிகளை மீண்டும் பிடிக்க வெள்ளைக்காரர்கள் செய்யும் சதி தான் இந்த நடவடிக்கை என்பது போல, இலங்கைப் பிரச்சினையை முன் கொண்டு வந்தனர். இதனால், லத்தீன் அமெரிக்க நாடுகள், கியூபா, வெனிசுலா, பொலிவியா போன்ற நாடுகள், கொஞ்சம் கூட யோசிக்காமல், இலங்கை அரசு சொன்னதை நம்பினார்கள்!
மேலும், இலங்கை அரசு உலக பத்திரிக்கையாளர்களை தன் வசம் கொண்டு வந்துவிட்டது. இதனைத்தான் தமிழ் அமைப்புகள் தடுக்கத் தவறிவிட்டன. உலக பத்திக்கை அமைப்பை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை.
இதனால், இலங்கை அரசு சொல்வதுதான் அவர்களுக்கு முக்கியம். இலங்கையில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவில்லை. “விடுதலைப் புலிகள் என்பவர்கள் பயங்கரவாதிகள். பயங்கரவாத குழுவை அடக்குவது முக்கியமானது. இது வளரும் நாட்டின் முக்கியக் கடமை. வளரும் நாட்டிற்கு எப்போதும் வளர்ந்த நாடுகள் தடைகளைக் கொடுப்பார்கள். வளரும் நாடுகள் எதைச் செய்தாலும், அதற்கு வளர்ந்த நாடுகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆகையால் இந்த சூழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது நமது கடமை” என்று கூறி கியூபா போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
இதுபோன்ற சிறிய நாடுகள் ஆதரவு தெரிவித்ததை விட, சீனா, பாகிஸ்தான் போன்ற பெரிய நாடுகளும் அதனை ஆதரித்தது முக்கியக் காரணம். இந்தியாவின் ஆதரவும் ஒன்று. இந்தியா சொன்னா சரியாக இருக்கும் என்று மற்ற நாடுகளும் நம்பின. இதனால் (சிறிலங்காவிற்கு) ஒரு பலம் கிடைத்தது.
இதை அறிந்த நாம், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு, உண்மை நிலவரத்தை விளக்கி தகவல்களை அனுப்பினோம். நீங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தது வேதனையை அளிக்கிறது என்று கூறியிருந்தோம். அதைப் படித்த பத்திரிக்கையாளர்களில் முக்கியமானவர்கள் கூட, இதில் ஒரு பகுதி கூட எங்களுக்குத் தெரியாதே, இதனை ஸ்பானிஷ் மொழியில் மொழி பெயர்த்து தர முடியுமா என்று கேட்டு, அதை பல நாட்டு அமைப்புகளின் மூலம் இரண்டு கடிதங்கள் மட்டும் மொழி பெயர்க்கப்பட்டு யுகேஷியாவின் அரசியல் தலைவருக்கு அனுப்பப்பட்டது.
அதைப் படித்துப் பார்த்துவிட்டு அவர்கள் பதில் அனுப்பியிருந்தார்கள், இதுபோன்ற ஒரு நிலை அங்கு இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாதே, தெரிந்திருந்தால் நிச்சயம் நாங்கள் இலங்கையைக் கேள்வி கேட்டிருப்போம் என்று கூறினார்கள். ஆனால் அதற்குள் காலம் கடந்து விட்டதே.
அடுத்த பகுதி திங்கட்கிழமை...