இந்தியாவை நெருக்கும் பொருளாதாரப் பின்னடைவு!
, வியாழன், 4 டிசம்பர் 2008 (18:15 IST)
(
ஒபாமா: சாதனையை தொடரும் சோதனைகள்-2)அமெரிக்காவின் முதலீட்டு வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும், பரஸ்பர நிதி நிறுவனங்களும் திவாலானதால் உருவான நிதி நெருக்கடி முதலில் ஐரோப்பாவையும், பிறகு ஜப்பானையும் அதன் பிறகு சீனா, இந்தியா மட்டுமின்றி, உலகின் ஒவ்வொரு நாட்டையும் கடுமையாக பாதித்து வருகிறது.லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கிழக்காசிய நாடுகள் வரை வளர்ந்த நாடுகளின் பொருளாதார பின்னடைவு அவைகளின் உள்நாட்டு பொருளாதாரத்தில் இருந்து ஏற்றுமதி, வேலை வாய்ப்பு வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய பொருளாதாரத்தில் அங்கமாகும் ஒவ்வொரு நாடும் முன்னேறிய நாடுகளில் ஏற்படும் இப்படிப்பட்ட சரிவுகளினால் உருவாகும் சுமைச் சிலுவையை சுமந்துதான் ஆக வேண்டும், தனித்து தப்பித்துக் கொள்ள வாய்ப்பில்லை.ஆயினும் ஆசியாவின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் சீனாவும், இந்தியாவும் மட்டும்தான் இந்த சர்வதேச அளவிலான பொருளாதாரப் பின்னடைவால் பாதிக்கப்பட்டாலும், அவைகளின் பலமான உள்நாட்டு பொருளாதார அடிப்படைகளின் பலத்தின் காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டாலும், பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.
அது என்ன நிதி நெருக்கடி வேறு, பொருளாதாரப் பின்னடைவு வேறு? இதனைப் புரிந்துகொள்ள நமது நிதியமைச்சர் (இப்போது அவர் உள்துறை அமைச்சர்) ப. சிதம்பரம் கூறியுள்ளதை பார்க்க வேண்டும். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்நாட்டின் ஒராண்டு ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும் (Gross Domestic Product - GDP). கடந்த 2007-08 நிதியாண்டில் நமது நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.8 விழுக்காடு ஆகும், அதற்கு முந்தைய ஆண்டை (2006-07) விட இது 0.2 விழுக்காடு அதிகரித்திருந்தது. அதாவது கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.6 விழுக்காடாகும். நடப்பு நிதியாண்டில் (2008-09) இந்த ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7 முதல் 7.5 விழுக்காடு அளவிற்கு (இந்திய மைய வங்கியும், நிதியமைச்சகமும், திட்டக் குழுவும் தெரிவித்துள்ளதுபடி) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வேளாண் உற்பத்தி மட்டும் கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 4.5 விழுக்காடு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே நமது நாடு வேளாண் உற்பத்தி வளர்ச்சியும், உணவு இருப்பும் (இதுவரை 276 மில்லியன் டன் நெல்லும், 220 மில்லியன் டன் கோதுமையும் மத்திய அரசால் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன) போதுமான அளவிற்கு உள்ளதால், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பின்னடைவின் காரணமாக நமது நாட்டில் தொழில் உற்பத்தி, வேலை வாய்ப்பு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதே தவிர, பொருளாதார பின்னடைவு ஏற்படவில்லை. ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சி அதன் இரண்டாவது காலாண்டில் 0.02 விழுக்காடு (கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டோடு ஒப்பிடுகையில்) குறைந்துள்ளது. ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதாரமான ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சி 0.03 விழுக்காடு குறைந்துள்ளது. ஜப்பானின் உள்நாட்டு உற்பத்தியும் குறைந்துள்ளது. இது அந்நாடுகளில் இதுவரை காணாத ஒரு சரிவாகும். ஆனால் இந்திய, சீன நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மட்டுமே, கடந்த ஆண்டு வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளனவே தவிர, வளர்ச்சியின்றிப் பின்னடைவைச் சந்திக்கவில்லை.அதனால்தான் நமது நாட்டின் பொருளாதார அடிப்படைகள் பலமாக உள்ளதென்று அமைச்சர் சிதம்பரம் அடிக்கடி கூறி வந்துள்ளார்.ஆயினும், நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு எந்த அளவிற்கு நமது மக்களை பாதித்துள்ளது? பாதிக்கப் போகிறது? என்பதற்கு சமீப நாட்களில் வெளிவந்துக் கொண்டிருக்கும் செய்திகள் பார்க்க வேண்டும்.
நமக்கு ஏற்படக் கூடிய பாதிப்பை இப்படிக் கூறலாம். இந்தியாவின் பொருளாதாரத்தை அல்ல... இந்தியர்களை இந்தப் பின்னடைவு பெருமளவிற்குப் பாதிக்கிறது. எப்படி?
1.
பங்குச் சந்தை: எங்களது ஆட்சியில்தான் பங்குச் சந்தை இந்த அளவிற்கு வளர்ச்சியை எட்டியுள்ளது என்றெல்லாம் காங்கிரஸ் கட்சி புளங்காகிதத்துடன் முழங்கி வந்தது. ஓராண்டுக் காலத்தில் மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 10,000 (2006 பிப்ரவரி 6ஆம் தேதி) புள்ளிகளில் இருந்து 20,024 (2007 அக்டோபர் 29)ஆகி, பிறகு அதிகபட்சமாக 21,077 (2008 ஜனவரி 08) புள்ளிகளுக்கு அசுர வேகத்தில் உயர்ந்தது. அதாவது 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரத்தை எட்ட 443 நாட்கள் ஆனது.ஆனால், அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் தாக்கம் முதலில் பாதிப்பை ஏற்படுத்தியது (சர்வதேச அளவில்) பங்குச் சந்தைகளில்தான். அமெரிக்காவில் முதலீட்டு வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும் திவாலானத்தை தொடர்ந்து தங்களது நிதியைக் காப்பாற்றிக் கொண்டு வெளியேற முற்பட்ட அந்நிய நிறுவன முதலீட்டு நிறுவனங்கள் (Foreign Institutional Investors - FII), மளமளவென்று பங்குகளை விற்றன. பல்வேறு நாடுகளில் பதிவு செய்யப்பட்டு, நிதிச் சந்தைகளில் இலாப நோக்கோடு சுதந்திரமாக விளையாடும் இந்த அந்நிய நிறுவன முதலீட்டு நிறுவனங்களின் வருகையே நமது பங்குச் சந்தை முன்னேற்றத்திற்கும் காரணமானது, அதன் வீழ்ச்சிக்கும் காரணமானது. இதெல்லாம் எதிர்பாராததுமல்ல, இதற்கு முன்பு நடைபெறாததுமல்ல. நமது நாட்டின் பங்குச் சந்தையில் அந்நிய நிறுவன முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்த நிதியின் அளவு 2008- 09 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 10.7 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது என்று இந்திய மைய வங்கி தெரிவித்துள்ளது.இப்படிப்பட்ட பயந்த விற்பனை (Panic selling) சில வாரங்களிலேயே 10,000 புள்ளிகளைச் சரித்தது. பங்குச் சந்தையை தூக்கி நிறுத்த இந்திய மைய வங்கி (ஆர்.பி.ஐ.) வணிக வங்கிகளின் ரொக்க இருப்பை பலமுறை குறைத்து, வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறைந்த கால கடன்களின் மீதான வட்டியை (ரீபோ ரேட்) குறைத்தது. மைய வங்கியின் இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் மட்டும் வங்கிகளின் வாயிலாக மூன்றரை லட்சம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதுமட்டுமல்ல, தங்களுடைய உபரி நிதிகளை பொதுத் துறை வங்கிகளில் வைப்பு நிதியாக்குமாறு மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களை (ஓ.என்.ஜி.சி. போன்றவை) அரசு பணித்தது. ஆயினும் பங்குச் சந்தை நிமிரவில்லை. அவ்வப்போது நடந்த குறைந்த நேர இலாக வாங்கல் - விற்றலால் ஏறியது, மறுநாளே இறங்கியது.
இன்றைய நிலவரப்படி, 8,747 புள்ளிகளில் மும்பை பங்குச் சந்தைக் குறியீடு (சென்செக்ஸ்) நிற்கிறது. இந்தச் சரிவால் பெரும் பாதிப்பிற்கு உள்ளானது சாதாரண, நடுத்தர முதலீட்டாளர்களே. இவர்கள் பங்குச் சந்தை முன்னேற்றத்தில் இருந்தபோது முதலீடு செய்தவர்கள், அது சரியும் வேகத்தை சரியாக கணிக்க முடியாததால், ஓரளவிற்கு இலாபம் தேற்ற முடியாதவர்களாய், விற்காதவர்கள். விளைவு: இவர்களின் முதலீடுகள் விலை வீழ்ச்சியடைந்த பங்குகளில் முடங்கின. பரஸ்பர நிதிகளின் நிலையும் இதுவே. ஆக, அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் பாதிப்பு இந்திய பங்குச் சந்தைகளில் கடுமையாக எதிரொலித்தது. 2.
தகவல் தொழில் நுட்பம்: உலகளாவிய பொருளாதாரத்தில் இந்தியா பங்கு பெற்றதால் மிகப் பெரிய அளவிற்கு பலன் பெற்ற இரண்டு துறைகள் தகவல் தொழில் நுட்பமும், அது சார்ந்த சேவைகளும்தான் (ITES). அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இருந்து பெற்ற அயல் பணி வாய்ப்புகளால் (Business Process Outsourcing) இந்திய த.தொ. நிறுவனங்களும், அதில் பணியாற்றிய மென்பொருள் தொழில் நெறிஞர்களும் பெரும் பலனைப் பெற்றனர்.
இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதி அதிகரித்தது. இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் நமது மென் பொருள் நெறிஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் கிடைத்தன. உலகறிந்த விடயம் இதுவென்பதால் அதனை அதிகம் கூறத் தேவையில்லை. ஆனால், உலகளாவிய பொருளாதார நெருக்கடி, இவ்விரு துறைகளையும் நெருக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் சரி, இந்தியாவிலும் சரி, தகவல் தொழில் நுட்ப பணி வாய்ப்புகள் குறையத் தொடங்கியது மட்டுமின்றி, பணி வாய்ப்பு உறுதி வழங்கப்பட்டும் பணிக்கு அழைக்கப்படவில்லை. பணி கிடைத்தவர்களுக்கும் எப்போது வேண்டுமானாலும் பணி முறிவு ஏற்படலாம் என்ற திரிசங்கு சொர்க்க நிலை.
உதாரணத்திற்கு, இங்கிலாந்தில் மட்டும் தற்பொழுது பணியாற்றிக் கொண்டிருக்கிற இந்தியர்களில் 15 லட்சம் பேர் பணி இழப்பார்கள் என்று இந்தியப் பணியாளர்கள் சங்கத்தினுடைய செயலர் ஹார்சி பெய்ன்ஸ் கூறியுள்ளார். பணியாற்றுவதோடு அங்கு வாழ்ந்து வரக்கூடிய மக்கள் இவர்கள்! இவர்கள் அனைவரும் இந்தியா திரும்பும் நிலை உருவாகியுள்ளது. இது கடந்த வாரச் செய்தி.நமது நாட்டில் இயங்கி வருகின்ற, சாதாரண அல்ல, பெரும் த.தொ. நிறுவனங்கள் கூட, தங்களுக்கு அயல் பணி அளித்த நிறுவனங்களை அப்பணிகளை நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளதால், அதனை செய்து முடிக்க தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி உத்தரவுகளை நிறுத்தி வைத்துள்ளது. தற்காலிகமாக பணி செய்துவந்த பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தகவல் தொழில் நுட்பம், சேவைகள் தரும் நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம், கடந்த ஆண்டு த.தொ. கண்ட வளர்ச்சி, அதற்கு முந்தைய ஆண்டை விட 29 விழுக்காடாக இருந்தது என்றும், இந்த ஆண்டு அது 21 முதல் 24 விழுக்காடாக மட்டுமே இருக்குமென்றும் கூறியுள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய பராக் ஒபாமா கூட, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் அயல் பணிகள் தடுக்கப்படும் என்று கூறினார். ஆனால் அது முழுமையாக சாத்தியமில்லை என்றே அமெரிக்க நிறுவனங்கள் கூறுகின்றன. அப்படி அயல் பணி அளிப்பதன் மீது 20 விழுக்காடு வரி விதிக்கப்பட்டால் கூட, அயல் பணியே தங்களுக்கு இலாபகரமானது என்று அவர்கள் கூறியுள்ளனர். எனவே, ஒரு பக்கத்தில் மென்பொருள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி குறைந்தாலும், நமக்கு கிடைத்துவரும் அயல் பணி வாய்ப்புகள் இந்த பொருளாதார பின்னடைவிலும் அதிகரிக்கும் சாத்தியமுண்டு என்றும் கூறப்படுகிறது.3.
ஏற்றுமதி, தொழில் உற்பத்திச் சரிவு! பொருளாதார பின்னடைவு நிதிச் சந்தைகளில் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு நமது நாட்டின் தொழில் உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டின் வாகன உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. செப்டம்பர் மாதம் வரை ஏறுமுகமாகவே இருந்துவந்த வாகன விற்பனை அக்டோபரிலும், நவம்பரிலும் பெருமளவிற்கு குறைந்துள்ளது. இரு சக்கர வாகனங்களின் விற்பனை 2007 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 15 விழுக்காடு வரை குறைந்துள்ளது. இதே மாதத்தில் கார்களின் விற்பனையும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. நமது நாட்டில் அதிகம் விற்பனையாகும் மாருதி கார்களின் விற்பனை 27 விழுக்காடு குறைந்துள்ளது. டாடா வாகனங்களின் விற்பனை 15 விழுக்காடும், மஹிந்திரா வாகனங்களின் விற்பனை 45 விழுக்காடும் சரிந்துள்ளது.
இந்தியாவிலிருந்து அயல் நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் வாகனங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதன் காரணமாக வாகன உற்பத்தியாளர்கள் தங்களது அன்றாட உற்பத்தியை குறைத்து வருகின்றனர். தனது பணி நேரத்தில் 4 மணி நேரத்தை குறைத்துள்ளது மாருதி.டாடா நிறுவனத்தின் ஜம்ஷட்பூர் கனரக வாகன உற்பத்தி பிரிவு தனது உற்பத்தியை 5 நாட்களுக்கு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனமும் தனது உற்பத்தி நாட்களை வாரத்திற்கு 5 நாட்களாக குறைத்துவிட்டது. நமது நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்து அக்டோபரில் 12 விழுக்காடு குறைந்துள்ளது. அதே நேரத்தில் இறக்குமதி 10 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஜவுளியில் இருந்து பட்டை தீட்டப்பட்ட வைரம் வரை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகப் பெரிய அளவிற்கு வேலையின்மையை ஏற்படுத்தக் கூடியதாகும்.
இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபருமான லார்ட் சுவராஜ் பால், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதாரப் பின்னடைவு மற்ற நாடுகளை விட இந்தியாவை கடுமையாக பாதிக்கும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜவுளி, தோல், மென்பொருள் மற்றும் சேவைகள், ஆயத்த ஆடைகள், வாசனைப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியின் மூலம் நமது நாடு பெறும் வருவாய் நமது ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 விழுக்காடு பங்கு வகிக்கிறது. எனவே ஏற்றுமதி குறைவது நமது பொருளாதார வளர்ச்சியை பாதிப்பது மட்டுமின்றி, இதன் எதிர்வினையாக ஏற்றுமதி நிறுவனங்களில் ஆட்குறைப்பும் ஏற்படும். இது வேலையின்மையை அதிகரிக்கும். ஆக, அமெரிக்காவில் கடந்த ஆண்டின் இறுதியிலேயே (இப்பொழுதுதான் அதைத் தெரிவித்துள்ளார்கள்) துவங்கிவிட்ட பொருளாதாரப் பின்னடைவு, ஐரோப்பாவையும், ஜப்பானையும் தாக்கியுள்ளதை விட நமது நாட்டை பாதிக்கும் அளவு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அக்டோபரில் ஏற்பட்டுள்ள சரிவு ஒரு துவக்கமே.
இதை எப்படி சமாளிப்பது என்று ஆராய மத்திய அரசு ஒரு குழு அமைத்து தீவிரம் காட்டியபோதுதான், மேலும் ஒரு பேரிடியாக நமது நாட்டின் நிதித் தலைநகர் என்று போற்றப்படும் மும்பை நகரில் கடந்த 26ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது.
இந்தத் தாக்குதல் உலகளாவிய பொருளாதார பின்னடைவால் நமது நாட்டிற்கு உருவாகிவரும் மந்த நிலையை மேலும் கடுமையாக்கப்போகிறது.
எனவே பொருளாதாரப் பின்னடைவை சமாளிக்க எடுக்கப்படும் உலகளாவிய அளவிலான கூட்டு நடவடிக்கையில் பயங்கரவாத ஒடுக்கலும் சேர்ந்துகொண்டுவிட்டது. மற்ற உலக நாடுகளை விட இது இந்தியாவிற்கு பெரும் சவாலாக இருக்கப்போகிறது.
மீ்ண்டும் சந்திப்போம்...