வெள்ளையரின் ஆதிக்கத்தை தகர்க்க வேண்டும் எனில் அவர்களின் வணிக பலத்தை உடைக்க வேண்டும் என்கின்ற இலக்கோடு சுதேசி கப்பல் நிறுவனத்தைத் துவக்கி வெள்ளையருக்கு எதிராக இரண்டு கப்பல்களை வாங்கி அவர்களை கதிகலங்கடித்தவர் கப்பலோட்டிய தமிழர் என்று பெருமையாக அழைக்கப்படும் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 136வது பிறந்தநாள் இன்று.
வெள்ளையனை விரட்டுவது என்றால் நம்மவருக்கு கடலாதிக்கம் வேண்டும். எனவே தமிழர்கள் மீதும் கடல் மேல் செல்வது எவ்வாறு என்று திட்டமிட்டேன் என்று கப்பல் விடுவது குறித்த தனது திட்டத்தை குறிப்பிட்டுள்ளார் வ.உ.சி.
பிரிட்டிஷ் கப்பல் குழுமத்தின் கொட்டத்தை அடக்க எண்ணித் தூத்துக்குடி இந்திய வணிகர்களின் ஆதரவுடன் 1906 ஆம் ஆண்டில் சுதேசிக் கப்பல் குழுமம் ஒன்றை வ.உ.சி. தொடங்கினார். சுதேசிக் கப்பல் குழுமம் 1882 ஆம் ஆண்டின் இந்தியக் குழுமச் சட்டப்படி 16.10.1906 அன்று பதிவு செய்யப்பட்டது. பங்கு ஒன்றிற்கு ரூ.25 வீதம் 40,000 பங்குதாரர்களிடம் 10 லட்சம் ரூபாய் சேர்ப்பதென திட்டமிடப்பட்டது. பாலவனத்தம் ஜமீன்தாரும் மதுரை தமிழ்ச் சங்கத் தலைவருமாகிய பொ. பாண்டித்துரைசாமி தேவர் குழுமத்தின் தலைவராகவும், வ.உ.சி. செயலாளராகவும் பொறுப்பேற்றனர். சேலம் சி. விஜயராகவாச்சாரியார், எம்.. கிருட்டிணன் நாயர் உள்பட 4 வழக்கறிஞர்கள் குழுமத்தின் சட்ட கருத்துரையாளராக அமர்த்தப்பட்டனர்.
குழுமம் பதிவு செய்யப்பட்டதும் பங்குதாரர்களைச் சேர்க்கும் வேலை தொடங்கியது. ஜனாப் ஷாஜி முகமது பக்கீர் சேட் என்பவர் மட்டும் 8,000 பங்குகளுக்குரிய ரூபாய் 2 லட்சத்தைக் குழுமத்திற்குச் செலுத்தினார். இந்த இரண்டு இலட்சம்தான் குழுமத்தைத் தொடங்க மூலதனமாக அமைந்தது.
தொடக்கத்தில் சுதேசிக் கப்பல் குழுமம் சொந்தத்தில் கப்பல்கள் வாங்கவில்லை. ஷா லைன் ஸ்டீமர்ஸ் குழுமத்திடம் குத்தகைக்குக் கப்பல்களை வாங்கி ஓட்டினர். பிரிட்டிஷ் கப்பல் குழுமத்தினர் அந்தக் குழுமத்தை மிரட்டியதோடு, பல்வேறு வகையில் தொடர்ந்து சுதேசிக் கப்பல் குழுமத்திற்கு இடையூறு செய்தனர். அதனால் சொந்தமாகக் கப்பல் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தார் வ.உ.சி.. அதற்காக பம்பாய், கொல்கட்டா முதலிய இடங்களுக்குச் சென்று பொருள் திரட்டினார். சில மாதங்களுக்குப் பிறகு காலியா என்ற கப்பலுடன் தூத்துக்குடி துறைமுகம் வந்து சேர்ந்தார் வ.உ. சிதம்பரம் பிள்ளை. பிரான்சிற்குச் சென்று லாவோ என்ற கப்பலை வாங்கி வந்தார் எஸ். வேதமூர்த்தி. இரண்டு கப்பல்கள் வாங்கிய அதே காலகட்டத்தில் இரண்டு இயந்திரப் படகுகளும் வாங்கப்பட்டன. வ.உ.சி.யின் கப்பல் நிறுவனத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்குடன் தனது நிறுவன கப்பல்களின் பயணக் கட்டத்தை பிரிட்டிஷ் - இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி குறைத்தது. ஆயினும் அந்த சதி நிறைவேறவில்லை. வ.உ.சி. இயக்கிய கப்பல் நிறுவனத்தால் பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு மாதத்திற்கு ரூ.40,000 வரை நட்டம் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது.
கப்பலோட்டியது மட்டுமின்றி, சுப்ரமணிய சிவாவுடனும், பாரதியாருடனும், பத்மநாப ஐயங்கருடனும் இணைந்து வெள்ளையர் ஆட்சியை அகற்ற பலப் போராட்டங்களை நடத்திய வ.உ.சி.யை வழக்குப் போட்டு சிறையில் அடைத்தது வெள்ளையர் அரசு.சிறையில் செக்கிழுக்கும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டும் சுதந்திர உணர்ச்சி குன்றாத சிதம்பரம் பிள்ளை, விடுதலைக்குப் பின்னர் வறுமையில் உழன்றாலும் வெள்ளையரை எதிர்ப்பில் முனைப்புடனே போராடினார். சுதந்திர தின சிறப்புப் பக்கம்!