Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாகப்பா கொலையில் முரண்பாடான மர்மங்கள்!

நாகப்பா கொலையில் முரண்பாடான மர்மங்கள்!

Webdunia

, செவ்வாய், 3 ஜூலை 2007 (15:13 IST)
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்று கொலை செய்து விட்டதாக தமிழக, கர்நாடக அரசுகள் கூறுகின்றன. ஆனால் நாகப்பாவின் சாவில் தொடர்ந்து மர்மங்கள் நீடிக்கிறது. அதேபோல் கர்நாடக அரசின் பதில்களும் முரண்பாடாகவே உள்ளது.

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா, கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி இரவு கர்நாடக மாநிலம் கொள்ளேகால் தாலுகா காமக்கரேயில் இருக்கும் அவரது பண்ணை வீட்டில் இருந்தபோது சந்தனக் கடத்தல் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளால் கடத்திச் செல்லப்பட்டார். கடத்தி செல்லப்பட்ட நாகப்பாவை மீட்க கர்நாடக மத்திய சிறையில் இருக்கும் கொளத்தூர் மணியை தூதராக அனுப்ப வேண்டும் என்று சந்தனக் கடத்தல் வீரப்பன், முதல் கேசட்டிலிருந்து ஐந்தாவது கேசட் வரை தொடர்ந்து நிபந்தனை விதித்து வந்தான்.

இந்த நிலையில் கொளத்தூர் மணியை தூதராக அனுப்ப நீதிமன்றத்தின் தாமதத்தைக் காரணம் காட்டி கர்நாடக அரசு தட்டிக் கழித்து வந்தது. இதனால் கடத்தப்பட்டு 106 நாட்களுக்கு பிறகு சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து ஆறாவது கேசட் கர்நாடக அரசுக்கு வந்தது.

அந்த கேசட்டில் தமிழ்நாடு அதிரடிப்படை, தன் மீது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியதாகவும், அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் நாகப்பாவுக்கு காயம் ஏற்பட்டதாகவும், தமிழ்நாடு அதிரடிப்படையில் இரண்டு காவல்துறையினர் இறந்துவிட்டதாகவும், அதனால் நாகப்பாவை விட்டுவிட்டு தாங்கள் தப்பிச் சென்று விட்டதாகவும் தெரிவித்திருந்தான். தற்போது நாகப்பா செங்கடி வனப்பகுதியில் இருப்பதாகவும், கர்நாடக அதிரடிப்படையை அனுப்பி மீட்டு செல்லுங்கள் எனவும் தெரிவித்ததன் பேரில் 106 நாட்களுக்குப் பிறகு வீரப்பன் பிடியிலிருந்து நாகப்பா விடுதலையானார் என்று முதலில் செய்தி வந்தது.

இதனையடுத்து சில மணி நேரத்தில் நாகப்பாவை, கர்நாடக மாநிலம் செங்கடி வனப்பகுதியில் தேடிச் சென்றபோது நாகப்பா இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடரும் மர்மங்கள்!


இந்த தகவலுக்குப் பிறகு வந்த அனைத்து தகவலும் முரண்பாடாகவே உள்ளன. முதலில் நடுக்காட்டில் நாகப்பா இறந்துகிடந்தார் 32 குண்டுகள் பாய்ந்திருந்தன. முகங்கள் வனவிலங்குகள் தாக்கி சிதைந்து கிடந்தது என கூறிய கர்நாடக அதிரடிப்படையினர், அடுத்த நாள் நாகப்பாவின் கண், ை, கால்கள் கருப்பு துணியால் கட்டப்பட்டிருந்தது என கூறியது வியப்பாக உள்ளது.

ஆனால் முதல் நாள் நாகப்பா இறந்து கிடந்தார் என கூறிவிட்டு அடுத்த நாள் கை, கால், கண்கள் கட்டப்பட்டு இருந்தது என கூறியது. உண்மையை மறைப்பதாய் தெரிகிறது. அடுத்து பிரேத பரிசோதனை அறிக்கை. சாதாரணமாக இந்த அறிக்கையை ஒரே நாளில் கொடுத்து விடுவார்கள். ஆனால் நாகப்பாவின் சாவு குறித்து இரண்டு நாட்கள் கழித்து வந்த போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் இருபது அடி தூரத்தில இருந்து சுடப்பட்டுள்ளது. நாகப்பாவின் நெஞ்சில் ஒரே ஒரு ஏ.கே. 47 ரக துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

நாகப்பா கொலையில் முரண்பாடான மர்மங்கள்!



கர்நாடக அதிரடிப்படை செல்லும் வரை யாரோ பாதுகாத்து உள்ளனர் என மருத்துவர்கள் கூறியிருப்பது, வீரப்பன்தான் கொன்றுள்ளான் என திட்டவட்டமாக, மறைமுகமாக கூற வைக்கிறது.

மருத்துவர்களை இதுபோல் கூறுமாறு வற்புறுத்தப்பட்டார்களா? என்ற கேள்வியும் எழுகிறது.

அடுத்து நாகப்பாவின் உடல் இருந்த இடத்தில் இருபத்தி ஏழு குண்டுகளும், டைரியும் இருந்தது அந்த டைரியில் நான்காம் தேதி வரை நாகப்பா எழுதியுள்ளார். அதில் வீரப்பன் தனக்கு சரியாக உணவு கொடுப்பதில்லை என எழுதியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பாவின் உறவினர்கள் இவற்றை கண்டெடுத்ததாக கூறியுள்ளனர்.


பொதுவாக நாகப்பாவுக்கு டைரி எப்படி கிடைத்தது, ஒருவேளை வீரப்பனே வாங்கி கொடுத்திருந்தாலும் வீரப்பன் அவனது கூட்டாளிகளின் முழு கட்டுபாட்டில் இருக்கும் சமயத்தில் அவர்களை தாக்கி டைரி எழுத அனுமதிப்பார்களா? என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. உயிருக்குப் பயந்து இருக்கும் சமயத்தில் நாகப்பாவின் மனநிலை டைரி எழுதும் அளவிற்கு இருந்திருக்குமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

அடுத்து சாதாரணமாக காட்டுக்குள் ஒருவர் இறந்துகிடந்தால் அவர்கள் எப்படி இறந்தார்கள்? ஏதேனும் விஷம் அருந்தி தற்கொலை செய்தார்களா, ஏதாவது கடிதமோ அல்லது விஷபாட்டிலோ சுற்றுப் பகுதியில் உள்ளதா என தீவிர விசாரணை செய்யும் காவல்துறையினர், நாகப்பாவின் உடல் இருந்த பகுதியைச் சுற்றிலும் தேடவில்லையா அல்லது அவர்கள் கண்களுக்கு சிக்காத 27 குண்டுகளும், டைரியும் நாகப்பாவின் உறவினர்களுக்குக் கிடைத்ததா? என்ற சந்தேகமும் எழுகிறது.

நாகப்பாவின் உடல் இருந்த இடத்திற்கு அருகிலேயே மேலும் ஒரு பிணம் இருந்தது என கூறப்பட்ட தகவல் குறித்து முழுமையாக தெரியப்படுத்தவில்லை. அதையடுத்து வீரப்பனிடமிருந்து நாகப்பாவின் சாவு குறித்து 35 நிமிடம் பேசிய ஏழாவது கேசட் வந்துள்ளதாக கூறப்பட்ட தகவலை முதல்வர் கிருஷ்ணா மறுத்தது மட்டுமின்றி கர்நாடக அமைச்சர் ராஜீ கவுடாவை மறுக்க வைத்ததின் மர்மம் என்ன?

கர்நாடக அதிரடிப்படை திடீர் தாக்குதல் நடத்தினால் வீரப்பன் நாகப்பாவை விட்டு சென்றுவிடுவான். அவரை உயிரோடு பத்திரமாக மீட்டுவந்தால் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்ற முடிவில், கர்நாடக அதிரப்படை தாக்குதல் நடத்தியிருப்பதாகத் தெரிகிறது. இதனால் கோபம் கொண்ட வீரப்பன் நாகப்பாவை கொன்றுவிட்டு தப்பி விட்டான். நாகப்பா இறந்து விட்டதால் வீரப்பனைப் பிடித்தாலும் நாகப்பா இறப்பு தான் முன்நிறுத்தி பேசப்படும் என்பதால் கண்டு கொள்ளாமல் கர்நாடக அதிரடிப்படை திரும்பி வந்து விட்டது என காமக்கரே மக்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இது உண்மையா?

அல்லது தங்களுடைய எல்லையை மீறிச் சென்று வீரப்பன் கூறியிருப்பது போல் தமிழ்நாடு அதிரடிப்படையினர் நாகப்பாவை கொன்றார்களா? அப்படியானால் வீரப்பன் சுட்டதாக கூறப்படும் இரண்டு தமிழ்நாடு அதிரடிப்படை போலீசாரின் உடல்கள் எங்கே? என்ற கேள்வியும் எழுகிறது.

அப்படியே வீரப்பன்தான் கொன்றதாக வைத்துக் கொண்டாலும் இதுவரை தான் செய்த கொலைகளை ஏற்றுக் கொண்ட வீரப்பன், நாகப்பாவின் கொலையை மட்டும் மறுப்பது ஏன்?

மொத்தத்தில் நாகப்பாவின் கொலையில் முழுமையான நிலை மறைக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. உண்மையான நிலையை அறிய சி.பி.ஐ. விசாரணை தேவை என கர்நாடகத்தில் சில அமைப்புகள் கோருவது நியாயமாகவே தெரிகிறது?

Share this Story:

Follow Webdunia tamil