கோபன்ஹெகனில் கூடும் வானிலை மாற்ற மாநாட்டில், உலக வெப்ப நிலையை உயர்த்தும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் அளவு நிர்ணயிக்கப்பட்டு இறுதி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
கோபன்ஹேகனில் அடுத்த வாரம் வானிலை மாற்ற மாநாட்டை ஐ.நா. கூட்டவுள்ளது. இம்மாநாட்டில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பது தொடர்பாக நிறைவேண்டிய ஒப்பந்தம குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் பிரதிநிதிகள் ஸ்டாக்ஹோமில் நேற்று பேசினர்.
இச்சந்திப்பிற்குப் பிறகு ஐ.ஒ. சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 2020ஆம் ஆண்டிற்குள் கரியமில வாயு (கார்பன் டை ஆக்ஸைட்) கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று வளரும் நாடுகளுக்கு இலக்கும் அளவும் நிர்ணயித்து ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
“1990ஆவது ஆண்டில் எந்த அளவிற்கு கரியமில வாயு வெளியேற்றம் இருந்ததோ அதைவிட 30 விழுக்காடு 2020ஆம் ஆண்டுக்குள் குறைக்கப்பட வேண்டும்” என்று ஐ.ஒ., அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கும், 15 முதல் 20 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்ற அளவை இந்தியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளுக்கும் இலக்கு நிர்ணயித்து ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும்” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
தங்களுடைய ஒட்டுமொத்த கரியமில வாயு வெளியேற்றத்தை 2020ஆம் ஆண்டிற்குள் 20 விழுக்காடு குறைக்க ஒப்புக்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், வளரும் நாடுகள் தங்களைப் பின்பற்றினால், 30 விழுக்காடு வரை குறைக்க தயார் என்று கூறியுள்ளன.
20 முதல் 25 விழுக்காடு குறைப்போம்: இந்தியா
கோபன்ஹேகன் மாநாட்டில் எந்ந அளவிற்கு கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த இந்தியா ஒப்புக் கொள்ளு்ம என்பதை மக்களவையில் கேட்க்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
“கோபன்ஹேகன் மாநாட்டில் விரிவான, சம அளவிலான ஒப்பந்தம் ஏற்பட்டால், அது தொடர்பாக இந்தியா அதிகமாகவே கரியமில வாயு வெளியேற்றத்தைத் தடுக்க தன்னிச்சையாகவே முயற்ச்சியெடுக்கும். 2005ஆம் ஆண்டில் நமது நாட்டில் எந்த அளவிற்கு கரியமில வாயு வெளியேற்றம் இருந்ததோ அந்த அளவிலிருந்து அடுத்த 15 ஆண்டுகளில் 20 முதல் 25 விழுக்காடு வரை குறைப்போம் என்று உலகிற்கு தெரிவிப்போம்” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
ஆனால் ஐ.ஓ. உள்ளிட்ட உலகின் வளர்ந்த நாடுகள் 1990ஆம் ஆண்டின் அளவை வைத்து கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க அளவு நி்ர்ணயிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பயணத்தின்போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் 30 முதல் 40 விழுக்காடு வரை கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க சீனா ஒப்புக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.