Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மத்திய விற்பனை வரி குறைப்பு!

Advertiesment
மத்திய விற்பனை வரி குறைப்பு!
, சனி, 31 மே 2008 (11:59 IST)
மத்திய விற்பனை வரி 3 விழுக்காட்டில் இருந்து 2 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விகிதம் நாளை (ஜூன்-1) மதல் அமலுக்கு வருகிறது.

ஒரு மாநிலத்தில் இருந்து அடுத்த மாநிலத்திற்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் மீது மத்திய விற்பனை வரி விதிக்கப்படுகிறது.

மத்திய விற்பனை வரியை 3 விழுக்காட்டில் இருந்து 2 விழுக்காடாக குறைத்துள்ளது. இதற்கான உத்தரவை மத்திய நிதி அமைச்சகம் வெள்ளிக்கிழமையன்று பிறப்பித்தது.

இனி மத்திய விற்பனை வரி துறையில் பதிவு செய்துள்ள வர்த்தகர்கள், படிவம் சி சமர்ப்பிக்கும் போது 2 விழுக்காடு வரி செலுத்தினால் போதும்.

மதிப்பு கூட்டு வரி அமல்படுத்தும் போது, மத்திய விற்பனை வரியை 2010ஆம் ஆண்டு மார்ச் 31ஆ‌ம் தேதிக்குள் முழுமையாக நீக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு முன் இதை படிப்படியாக குறைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதன்படி சென்ற வருடம் ஏப்ரல் 1ஆ‌ம் தேதி 4 விழுக்காட்டில் இருந்து 3 விழுக்காடாக குறைக்கப்பட்டது. இந்த ஏப்ரல் 1ஆ‌ம் தேதி 2 விழுக்காடாக குறைத்து இருக்க வேண்டும்.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்த போது கூட மத்திய விற்பனை வரி குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆனால் இரண்டு மாதம் தாமதமாக வரி குறைப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் மத்திய விற்பனை வரியை குறைக்கும் போது, அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் விதத்தில் மதிப்பு கூட்டு வரியை உயர்த்துவது புதிய இனங்கள் மீது வரி விதிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

மத்திய அரசு மதிப்பு கூட்டு வரியை 4 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக உயர்த்தவும், ஜவுளி பொருட்கள் மீதும் வாட் வரி விதிக்க வேண்டும் என கூறியது. இதற்கு மாநில அரசுகள் சம்மதிக்கவில்லை.

இதற்கு முன் மாநில அரசுகள் மதிப்பு கூட்டு வரி அதிகரிக்கவும், ஜவுளி மீது வரி விதிக்கவும் சம்மதித்து இருந்தன.

தற்போது பணவீக்கம் அதிக அளவில் இருப்பதாலும், சில மாநிலங்களில் நடக்க இருக்கும் தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலை மனதில் கொண்டு, மாநில அரசுகள் வரி உயர்த்ததவும், ஜவுளி மீது புதிதாக வரி விதிக்கவும் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது.

மத்திய விற்பனை வரியால் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட விழுக்காடு மாநில அரசுகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்படுகிறது.

இதன்படி இந்த நிதி ஆண்டில், மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ரூ.13,000 கோடி வழங்க வேண்டும்.

மத்திய விற்பனை வரியை குறைப்பதால், அதிலிருந்து மாநில அரசுகளுக்கு கிடைக்கும் பங்கும் குறையும். இந்த நஷ்டத்தை ஈடுகட்ட மாநில அரசுகளுக்கு சேவை வரி விதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புகையிலை மீதும் மதிப்பு கூட்டு வரி விதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் மூலம் மாநில அரசுகளுக்கு ரூ.3,400 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது போக மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ. 9,600 கோடி பகிந்தளிக்க வேண்டியதிருக்கும் என தெரிகிறது.

வாட் வரி விதிப்பை அமல்படுத்த, மேற்கு வங்க நிதி அமைச்சர் அசிம் தாஸ் குப்தை தலைமையில், மாநில நிதி அமைச்சர்களை கொண்ட உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது

இந்த குழு ஜூன் மாதம் கடைசி வாரத்தில் கூடி, இந்த பிரச்சனை பற்றி விவாதிக்க உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil