உருக்கு ஏற்றுமதி வரியை ரத்து செய்வது பற்றி முடிவு எடுக்கவில்லை என்று மத்திய உருக்குத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க உருக்கு ஆலைகள் சென்ற மே 7ஆம் தேதி, உருக்கு மற்றம் இரும்பு பொருட்களின் தகடு, பட்டை ஆகியவற்றின் விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரமும், கட்டுமான இரும்பு கம்பிகளின் விலையை டன்னுக்கு ரூ.2 ஆயிரமும் குறைத்தன.
இந்த விலை குறைப்புக்கு முன், பொதுத்துறை, தனியார் உருக்கு ஆலைகளின் நிர்வாகிகள் பிரதமர் மன்மோகன் சிங், உருக்கு துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோரை சந்தித்து பேசினார்கள். அப்போது சில வகை உருக்கு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதித்து இருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுவரை உருக்கு ஏற்றுமதி வரி ரத்து செய்யப்படவில்லை.
இது குறித்து நேற்று மத்திய உருக்கு துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“உருக்கு ஆலைகளின் 13 அம்ச கோரிக்கையை பிரதமர் அலுவலகத்திடமும் நிதி அமைச்சகத்திடமும் சமர்பித்துள்ளோம். இதில் ஒன்று, உருக்கு ஆலைகள் விலையை குறைக்க சம்மதித்த போது ஏற்றுமதி வரி ரத்து செய்யப்படும் என்பதும் அடங்கும். இது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.
நிதி அமைச்சகம்தான் உருக்கு மீது ஏற்றுமதி வரி விதிக்கும் முடிவை எடுத்தது. இது பற்றி உருக்கு அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் செயலாளர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
உலக அளவில் அதிக அளவு கச்சா இரும்பு உற்பத்தி செய்யும் நாடுகளுடன் ஒப்பிடும் போது 2003ஆம் ஆண்டில் இந்தியா கச்சா இரும்பு உற்பத்தியில் எட்டாவது இடத்தில் இருந்தது. 2006இல் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அத்துடன் இந்தியா உலக அளவில் மென் இரும்பு உற்பத்தி செய்வதில் முதல் இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் எல்லா பகுதிகளிலும் இரும்பு, உருக்கு பொருட்கள் பரவலாக கிடைக்க, மத்திய அரசு 12 இடங்களில் தொழிற்சாலைகளை அமைக்க முடிவெடுத்துள்ளது என்று பாஸ்வான் தெரிவித்தார்.
உள்நாட்டில் உருக்கு, இரும்பு பொருட்களின் விலை அதிகரித்ததால், வாகன உற்பத்தி, இயந்திர தொழில்கள், கட்டுமான தொழில்கள் உட்பட பல தொழில்கள் பாதிக்கப்பட்டன. அத்துடன் பணவீக்கமும் அதிகரித்தது.
உள்நாட்டு தொழில்களை பாதுகாக்கவும், உருக்கு, இரும்பு போன்றவை தாராளமாக கிடைப்பதற்காகவும் மத்திய அரசு மே 10ஆம் தேதி உருக்கு பொருட்களுக்கு 5 முதல் 15 விழுக்காடு வரை ஏற்றுமதி வரி விதித்தது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று உருக்கு நிறுவனங்கள் கோரி வருகின்றன.
இந்நிலையில், இந்த ஏற்றுமதி வரியை, மத்திய அரசு தவறாக விதித்துள்ளதாக பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு (இன்ஜினியரிங் எக்ஸ்போர்ட் பிரமோசன் கவுன்சில்) கூறியுள்ளது.
இது தொடர்பாக இதன் தலைவர் ராகேஷ் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் மத்திய அரசை பல்வேறு பொருட்களை தயாரிக்க கச்சா பொருளாக பயன்படுத்தும் உருக்கு பொருட்களுக்கும், உருக்கு உற்பத்தி தேவைப்படும் கச்சா பொருட்கள் மீது, சீனாவை போல், ஏற்றுமதி வரி விதிக்கும் படி கேட்டுக் கொண்டாம்.
(சீனாவில் உள்நாட்டு பொறியியல் தொழில்களுக்கு தேவையான கச்சாப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமலும், நியாயமான விலையிலும் கிடைக்க, இவை பயன்படுத்தும் உருக்கு பொருட்களை ஏற்றுமதி செய்தால், அதற்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படுகிறது).
ஆனால் மத்திய அரசு ஏற்றுமதி வரி விதிக்க வெளியிட்டுள்ள உத்தரவு குழப்பம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இந்த உத்தரவில் எந்த வகையான பொருட்களுக்கு ஏற்றுமதி விதிக்கப்படுகிறது என்பதை குறிக்கும் ஐ.டி.சி. ஹெச்.எஸ். குறியீட்டு எண்கள் கூறப்படவில்லை. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மீது ஏற்றுமதி வரி விதிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இது பொறியியல் தொழில் சாலைகள் உற்பத்தி செய்யும் ஏற்றுமதியை பாதிக்கும்.
எனவே மத்திய அரசு ஏற்றுமதி வரி விதிக்கப்படும் பொருட்களை பற்றி, அதன் குறியீட்டு எண்களை குறிப்பிட்டு தெளிவான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ராகேஷ் ஷா கூறியுள்ளார்.