சைக்கிள் விற்பனையில் முன்னணி நிறுவனமான அட்லஸ், சைக்கிள் விலையை மீண்டும் உயர்த்த முடிவு செய்துள்ளது.
இந்த நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் சைக்கிள் விலையை 20 முதல் 25 விழுக்காடு வரை உயர்த்தியது.
இது குறித்து இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் அங்காட் கபூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சைக்கிள் தயாரிக்க தேவையான உருக்கு, இரசாயணப் பொருட்கள், டயர், டியூப் போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளது. இந்த கூடுதல் செலவை எங்களால் சரிப்படுத்த முடியவில்லை. எனவே ஜூன் மாதத்தில் ஒரு சைக்கிளுக்கு ரூ.35 முதல் 40 வரை அதிகரிக்கலாம் என்று எண்ணியுள்ளோம்.
சைக்கிள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு 3 முதல் 4 விழுக்காடு இலாபமே கிடைக்கின்றது. இந்த நிதி ஆண்டில் 600 கோடி அளவிற்கு வர்த்தகம் நடக்கும் என எதிர்பார்க்கின்றோம் என்று கூறினார்.
அட்லஸ் நிறுவனம் சென்ற நிதி ஆண்டில் ரூ.585 கோடி அளவிற்கு வர்த்தகம் செய்துள்ளது. இந்த வருடம் இதை விட 2.54 விழுக்காடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றது.
அட்லஸ் நிறுவனம் விலையை உயர்த்தியதால், இதன் சைக்கிள் விற்பனை கடந்த சில மாதங்களில் 10 விழுக்காடு குறைந்துள்ளது. இருப்பினும் மீண்டும் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது.