அரிசி பற்றாக்குறையை போக்க, இந்தியாவின் உதவியை சவுதி அரேபியா கோரியுள்ளது.
உலக அளவில் அதிக அளவு அரிசி இறக்குமதி செய்யும் நாடான சவுதி அரேபியாவில், அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் இதன் விலைகளும் அதிகரித்து விட்டன.
இந்தியாவில் அரிசி விலை அதிகரித்தால், மத்திய அரசு பாசுமதி தவிர மற்ற ரக அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது. அத்துடன் பாசுமதி அரிசியின் ஏற்றுமதி மதிப்பை 1 டன்னுக்கு 1,200 டாலராக அதிகரித்துள்ளது. இந்த விலையின் அடிப்படையில் ஏற்றுமதி வரி விதிக்கப்படும். இதனால் சவுதி அரேபியாவில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாசுமதி அரிசியின் விலை அதிகரித்துள்ளது.
இதனால் அரிசி ஏற்றுமதி தடையை நீக்குவது உட்பட, அரிசி பற்றாக்குறையை நீக்க இந்தியாவின் உதவியை, சவுதி அரேபியா எதிர்பார்க்கிறது.
இது குறித்து ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் துணை தலைமை அதிகாரி ராஜூவ் சகாரி கூறியதாவது: இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்வது தொடர்பாக, சவுதி வர்த்தக மற்றும் தொழில் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், இந்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில் சவுதி அரேபியாவிற்கு வந்த திட்ட குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவுடன், அரிசி ஏற்றுமதி தொடர்பான பிரச்சனை விவாதிக்கப்பட்டது.
இந்தியாவில் இருந்து வருடத்திற்கு 5 முதல் 6 லட்சம் டன் அரிசி, சவுதி அரேபியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் பாசுமதி அரிசி அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று கூறினார்.
உலக அளவில் அதிக அளவு அரிசி இறக்குமதி செய்யும் நாடுகளில் சவுதி அரேபியா ஆறாவது இடத்தில் உள்ளது. இது சென்ற வருடம் மொத்தம் 9 லட்சத்து 60 ஆயிரம் டன் அரிசி இறக்குமதி செய்தது.
சவுதி அரேபியா இறக்குமதி செய்யும் அரிசியில், 70 விழுக்காடு வரை, இந்தியாவில் இருந்து, குறிப்பாக பாசுமதி ரக அரிசி இறக்குமதி செய்கிறது. தாய்லாந்தில் இருந்து 10 விழுக்காடு இறக்குமதி செய்கிறது.
இந்தியா அரிசி ஏற்றுமதியை தடை செய்துள்ளதால் இப்போது சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு குடியரசும் தாய்லாந்தில் இருந்து அதிக அளவு அரிசி இறக்குமதி செய்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.