வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று கடந்த 13 மாதமாக இல்லாத அளவுக்கு குறைந்தது.
இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி பின்தங்கிய நிலையில் இருப்பதால், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய தயக்கம காட்டி வருகின்றனர். அத்துடன் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களினால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த போது, இந்திய ரூபாய்க்கு நிகரான 1 டாலரின் மதிப்பு ரூ.42.35/ 42.36 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி விலையை விட 25 பைசா குறைவு.
நேற்றை இறுதி விலை 1 டாலர் ரூ. 42.10/42.12.
நேற்று அந்நியச் செலவாணி சந்தையின் இறுதியி்ல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசா குறைந்தது. அதே போல் யூரோவுக்கு நிகரான மதிப்பும் 21 பைசா குறைந்தது.
ஆனால் பிரிட்டன் ஃபவுண்ட் நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 35 பைசா அதிகரித்தது.
இன்று வர்த்தகம் நடைபெறும் நேரத்தில், 1 டாலர் ரூ. 42.33/42.35 என்ற அளவில் விற்பனையானது.
இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் இருப்பதால், வங்கிகளும், தொழில் வர்த்தக நிறுவனங்களும் அதிக அளவு டாலர் வாங்குகின்றனர். இதனால் தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து டாலரின் மதிப்பு அதிகரித்து வருகிறது.
நேற்று நியுயார்க் சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 1 பீப்பாய் 126 டாலராக அதிகரித்தது.
அத்துடன் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை திரும்பப் பெறுகின்றன. மே 8 ந் தேதியில் இருந்து கடந்த மூன்று நாட்களில் மட்டும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 22 கோடி டாலர் முதலீட்டை திரும்பப் பெற்றுளளன.