மேற்கு வங்க மாநிலத்தின் வட பிராந்தியத்தில் உற்பத்தியாகும் தேயிலையை ஈரான், எகிப்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஜல்பய்குரி அருகில் உள்ள ஹசிமாரா என்ற நகரில் நேற்று மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசும் போது, “பாகிஸ்தான், ஈரான், எகிப்து ஆகிய நாடுகளில் தேயிலை தேவை அதிகரித்து வருகிறது.
மேற்கு வங்கத்தின் வட பிராந்தியங்களில் உள்ள தேயிலை தோட்டங்களில் உற்பத்தியாகும் தேயிலையை, மத்திய அரசு இந்த நாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யும் முயற்சிகளில் ஈடுபடும்.
இந்த பிராந்தியத்தில் வருடத்திற்கு 25 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் மிக குறைந்த அளவு தேயிலை மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. டார்ஜிலிங் பகுதியில் உற்பத்தியாகும் தேயிலையில் 9 விழுக்காடு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
கதல்குரி, ராம்ஜிகோரா ஆகிய பகுதிகளில் மூடப்பட்டுள்ள தேயிலை தோட்டங்கள் இரண்டரை மாதங்களில் திறக்கப்படும்” என்று கூறினார்.
மத்திய அரசு இந்த பிராந்தியத்தில் உள்ள முன்னூறு தேயிலை தோட்டங்களை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடும். அத்துடன் ஏற்றுமதியை அதிகரிக்க இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் தேயிலை வாரிய அதிகாரிகள் பாகிஸ்தான், ஈரான், எகிப்கு ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வார்கள்.