உருக்கு உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பிரச்சனைகளை ஆராய உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்று உருக்கு துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.
உருக்கு உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் திங்கட் கிழமை ராம்விலாஸ் பஸ்வான் புது டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உள்நாட்டு உருக்கு உற்பத்தி ஆலைகள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ளது. இந்த ஆலைகள் விரிவு படுத்துவதற்கு உள்ள தடைகளை நீக்க பிரதமரின் தலையீடு வேண்டும் என்று கேட்டுக் கொள்வோம்.
உருக்கு உற்பத்தி நிறுவனங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, உருக்கு அமைச்சகம் உருக்காலைகள் விரிவு படுத்துவதற்கு தடையாக உள்ள பிரச்சனை பற்றி ஆராய உயர்மட்ட குழு அமைக்கும்.
உள்கட்டமைப்பு, வாகன உற்பத்தி, கட்டுமானத்துறையின் தேவையால் கடந்த இரண்டு வருடங்களில் உருக்கு, இரும்பு பொருட்களின் தேவை 13 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவற்றின் தேவை அடுத்து வரும் வருடங்களில் 14 முதல் 16 விழுக்காடாக அதிகரிக்கும்.
ஆனால் உருக்கு உற்பத்தி வருடத்திற்கு 7 விழுக்காடு மட்டுமே அதிகரிக்கிறது. இதனால் எதிர்காலத்தில் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.
இத்துறையின் வளர்ச்சிக்கு தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துதல், மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து சுற்றுச்புறச் சூழல் அபாயம் இல்லை என்ற அனுமதி பெறுதல், துறைமுகங்களில் நெருக்கடி, இரும்பு தாது சுரங்கங்களை ஒதுக்குதல், கூடுதல் ரயில்வே இருப்பு பாதைகளை அமைத்தல் ஆகியவை பிரச்சனையாக உள்ளன.
ரயில்வே இருப்பு பாதைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரிவுபடுத்த சில உருக்கு நிறுவனங்கள் நிதி அளிப்பதாகவும், இதை ரயில்வே சரக்கு கட்டணத்தில் கழித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தன.
உருக்கு தொழிற்சாலைகளை விரிவுபடுத்த நிலம் கையகப்படுத்துவது பல மாநிலங்களி்ல பெரும் பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக பிரச்சனையாக உள்ளது. ஒரிசா,சத்தீஷ்கர்,மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் பிரச்சனைகள் உள்ளன.
மத்திய பட்ஜெட்டில் மத்திய மதிப்பு கூட்டு வரி 2 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உருக்கு விலை டன்னுக்கு ரூ.500 குறைக்க உருக்கு உற்பத்தி நிறுவனங்கள் சம்மதித்து உள்ளனர் என்று பஸ்வான் தெரிவித்தார்.