டெல்லியில் நடைபெறும் 9வது அகில இந்தியா வாகன கண்காட்சியில், வாகன உற்பத்தி துறைக்கு பயனளிக்கும் ரோபோ கண்காட்சிக்கும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
நாட்டின் வேகமான வளர்ச்சியில், கடந்த சில ஆண்டுகளாக மோட்டார் வாகனத்துறை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. நாட்டின் வளர்ச்சியில் தொடர்ந்து இத்துறை முன்னணியில் இருந்து வருகிறது. தற்போது இந்திய மோட்டார் வாகனச் சந்தையில் ரூ.56,000 கோடி அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்டு வருகிறது.
ரோபோக்களைப் பயன்படுத்தும் போது தற்போதைய மோட்டார் வாகன உற்பத்தி துறை புதுப்பொலிவைப் பெறும். வாகன உற்பத்தியைப் பொறுத்தமட்டில் பாதுகாப்பு, உற்பத்தி, தரம் ஆகிய மூன்றை எட்ட இந்த ரோபோக்கள் பயன்படும் என இத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். இன்றைய நிலையில் இந்திய வாகன உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு ரோபோக்களும், தானியங்கி இயந்திரங்களும் இன்றியமையாததாக உள்ளது.
ரோபோக்களில் பயன்படுத்தப்படும் கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பம் இந்திய வாகன உற்பத்தி துறை பாதுகாப்பு, தரம், திறன் ஆகியவற்றில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க உதவும். இந்திய வாகன சந்தையின் தேவையை உணர்ந்து இந்திய தொழில் கூட்டமைப்பு நாட்டில் முதல் முறையாக ரோபோ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் 9வது அகில இந்திய வாகன கண்காட்சி 10 முதல் 17 ஆம் தேதி வரை நடைப்பெறவுள்ளது. இதில் நாட்டில் முதன் முறையாக 14, 15 ஆகிய தேதிகளில் ரோபோ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சி, இந்திய உற்பத்தி துறையினர் தங்களின் உற்பத்தி திறனையும், வர்த்தகத்தையும் அதிகரித்துக் கொள்ளவும், புதிய தொழில்நுட்பம், இயந்திரமயமாக்கல் பணிகளை மேற்கொள்வதுடன் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக வளர ஒரு அடிப்படையாக அமையும். இந்த கண்காட்சியில் உலகின் தலைச்சிறந்த ரோபோ மற்றும் தானியங்கி இயந்திரங்களின் புதிய தொழில் நுட்பங்கள் இடம் பெறுகின்றன.