மக்காச் சோளத்தை தனியார் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.
கோழி உட்பட பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகளுக்கு மக்காச் சோளத்தில் தயாரிக்கப்பட்ட தீவனம் முக்கிய உணவாக கொடுக்கப்படுகிறது. இதே போல் கால் நடைகளுக்கு தாயாரிக்கப்படும் தீவனத்திலும் மக்காச் சோளம் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மக்காச் சோளத்தை ஏற்றுமதி என்ற சாக்கில் பதுக்கி வைத்து, ஊக வணிகத்தில் ஈடுபடுகின்றனர். எனவே தனியார் நேரடியாக மக்காச் சோளத்தை ஏற்றுமதி செய்வதை முறைப்படுத்த வேண்டும் என்று தேசிய முட்டை ஒருக்கினைப்பு குழு ( (கோழிப் பண்ணை உரிமையாளர்கள்) கூறியுள்ளது.
இது குறித்து தேசிய முட்டை ஒருக்கினைப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்
பண்ணை தொழில் பாதிக்காமல் இருக்க மக்காச் சோளம் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். இதன் ஏற்றுமதியை முழுவதுமாக தடை செய்யும் படி நாங்கள் கேட்கவில்லை. இதை முறைப்படுத்த வேண்டும். தனியார் ஏற்றுமதி செய்யாமல், அரசு நிறுவனங்கள் மூலம் ஏற்றுமதி செய்ய வேண்டும். தனியார் நிறுவனஙகள் ஏற்றுமதி என்ற பெயரில் அளவுக்கு அதிகமாக இருப்பு வைத்துக் கொள்கின்றனர். இதை பயன்படுத்தி ஊக வணிகத்தில் ஈடுபட்டு செயற்கையாக விலையை உயர்த்துகின்றனர். இதனால் பண்ணை தொழிலில் ஈடுபட்டுள்ள 32 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாக வேண்டியதுள்ளது.
மக்காச் சோளத்தின் விலை கடந்த ஒரு வருடத்தில் 90 முதல் 100 விழுக்காடு வரை அதிகரித்து உள்ளது. 2005-06 ஆம் ஆண்டுகளில் 1 குவின்டால் மக்காச் சோளத்தின் விலை ரூ.500 முதல் ரூ.550 ஆக இருந்தது. இதன் விலை ரூ.800 முதல் ரூ.900 ஆக அதிகரித்துள்ளது. சில வட இந்திய மாநிலங்களில் ரூ.ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது. இந்த அளவு கடந்த 35 ஆண்டுகளில் விலை அதிகரித்தில்லை.
மக்காச் சோளத்தின் விலை உயர்வால், இதனை பயிர் செய்யும் விவசாயிகள் பலன் அடைந்தால், அதனை பற்றி பண்ணை தொழிலில் உள்ளவர்கள் எவ்வித புகாரும் தெரிவிக்க மாட்டோம். இந்த விலை உயர்வால் மக்காச் சோளம் பயிரிடும் சுமார் 2 கோடி விவசாயிகள் பலன் அடைந்தால், அவர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
இதன் சமீபத்திய விலை உயர்வால் நடுவில் உள்ள வியாபாரிகள் தான் பலன் அடைந்துள்ளனர். இவர்கள் குறைந்த விலையில் வாங்கி இருப்பு வைத்துக் கொள்கின்றனர். பிறகு முன் பேர சந்தையை பயன்படுத்தி விலையை உயர்த்துகின்றனர்.
ப்ராய்ல்ர கோழிப்பண்ணை தீவனத்திற்கு இன்றியமையாத மற்றொரு பொருள் சோயா பிண்ணாக்கு. இதன் விலை கடந்த மூன்று மாதங்களில் டன் ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.16,000 ஆக அதிகரித்து விட்டது. இதற்கு காரணம் சர்வதேச சந்தையில் இதன் பற்றாக்குறையும், இந்தியாவில் இருந்து அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுவதே.
பண்ணைத் தொழிலின் மொத்த செலவில், தீவனத்திற்கு மட்டும் 75 விழுக்காடு செலவாகிறது. இதன் காரணமாக தீவனத்திற்கு தேவைப்படும் பொருட்களின் விலை சிறிது உயர்ந்தால் கூட, பண்ணை தொழிலில் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தீவனத்தின் விலை 10 விழுக்காடு அதிகரித்தால், பண்ணைகளின் இலாபம் 87 விழுக்காடு குறையும்.
1 கிலோ எடையுள்ள ப்ராய்லர் கோழியின் உற்பத்தி செலவு முன்பு ரூ.27 முதல் 28 வரை ஆகும். தீவனத்தின் விலை உயர்வால், தற்போது 1 கிலோ எடையுள்ள ப்ராய்லர் கோழி உற்பத்தி செய்வதற்கான செலவு ரூ.33 முதல் ரூ.35 வரை அதிகரித்து விட்டது. இதே போல் முட்டையின் உற்பத்தி செலவும் 90 பைசாவில் இருந்து ரூ.1.45 பைசாவாக அதிகரித்து விட்டது.
தீவனம் தயாரிப்பதற்கான மக்காச் சோளம் பற்றாக்குறை, அத்துடன் இதன் விலை உயர்வும் சேர்ந்து பண்ணை தொழிலை நெருக்கடியில் தள்ளியுள்ளது என்று தேசிய முட்டை ஒருங்கினைப்பு குழு கூறியுள்ளது.