அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் பவர் நிறுவனம் பங்குகளை வெளியிட்டு ரூ.11 ஆயிரத்து 700 கோடி திரட்ட உள்ளது.
அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனம் ரிலையன்ஸ் எனர்ஜி. இது நாட்டின் பல மாநிலங்களில் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க உள்ளது. இதற்காக முதலீடு திரட்டுவதற்கு 26 கோடி பொதுப் பங்குகளை வெளியிடுகிறது.
இதன் மூலம் ரூ.11,700 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதன் பங்கு விலை ரூ.405 முதல் ரூ.450 க்குள் இருக்கும். மொத்த பங்குகளில் 5 விழுக்காடு சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படும்.
பங்குகளை வாங்குவதற்கு சிறு முதலீட்டாளர்களுக்கு சலுகை வழங்கப்படும் என தெரிகிறது. இதன்படி சிறுமுதலீட்டார்கள் விண்ணப்பிக்கும் போது, அவர்கள் விண்ணப்பிக்கும் மொத்த பங்குகளின் விலையில் 25 விழுக்காடு பணம் செலுத்தினாலே போதும். மீதம் உள்ள பணம் பங்குகள் ஒதுக்கீடு செய்த பிறகு செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
தற்போது பொது பங்கு வெளியிட்டின் போது, பங்குகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதி பெற்ற நிறுவன முதலீட்டாளர்களுக்கு சலுகை வழங்கப்படுகின்றன. இதன் படி இவை பங்குகளுக்கு விண்ணப்பிக்கும் போது, அவை விண்ணப்பிக்கும் பங்குகளின் மொத்த தொகையில் 10 விழுக்காடு மட்டும் விண்ணப்பிக்கும் போது செலுத்தினால் போதும். மீதம் உள்ள தொகையை பங்குகள் ஒதுக்கீடு செய்த பிறகு செலுத்தலாம் என்ற சலுகை உள்ளது. இந்த மாதிரி சலுகைகள் சமீபத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனங்கள் பங்குகளை வெளியிட்ட போது வழங்கப்பட்டன.
இதே போல் தற்போது ரிலையன்ஸ் எனர்ஜி பங்கு வெளியீட்டிற்கு சிறு முதலீட்டாளர்களுக்கு சலுகை வழங்கப்படும் என்று தெரிகிறது.
தற்போது வெளியிடப்பட உள்ள ரிலையன்ஸ் பங்குகளில் ஜனவரி 15 ந் தேதி முதல் 18 ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுவதாக பங்குச் சந்தை புரோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பங்கு வெளியீட்டை முதலீடு ஆய்வு நிறுவனமான கிரிசல் 4-5 என்ற குறியீடு வழங்கியுள்ளது. இதன் பொருள் இந்த பங்கு வெளியீட்டு அம்சங்கள் சராசரியை விட. அதிகம் என்பதே.