கோவையைச் சேர்ந்த எஸ்.பி.அப்பரல்ஸ் நிறுவனம் நூற்பாலையை வாங்கி உள்ளது.
கோவையைச் சேர்ந்த எஸ்.பி.அப்பரல்ஸ் லிமிடெட் ஆயத்த ஆடை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறது. அத்துடன் சில்லரை விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது. இது தற்போது சேலம் மாவட்டத்தில் வாழப்பாடியில் உள்ள ஸ்ரீ பாலாஜி பைகம் ஸ்பின்னிங் மில்லை வாங்கி உள்ளது. இந்த நூற்பாலையில் 12,672 கதிர்கள் உள்ளன. புதிதாக வாங்கியிருக்கும் இந்த நூற்பாலை, எஸ்.பி.அப்பரல்ஸ்சின் துணை நிறுவனமாக இயங்கும். இதனால் இந்நிறுவனத்தின் வர்த்தகம் 11 கோடி அதிகரிக்கும்.
இது குறித்து எஸ்.பி.அப்பரல்ஸ்சின் செயல் இயக்குநர் பி.சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் இந்த நூற்பாலையை வாங்கியிருப்பதன் மூலம் எங்கள் நிறுவனம் எல்லா பிரிவுகளும் அடங்கிய ஆடை தயாரிப்பு நிறுவனமாக வளர்நதுள்ளது. நூற்பாலையில் இருந்து ஆடைகள் தயாரித்து விற்பனை செய்யும் வரை எல்லா பிரிவுகளையும் உள்ளடக்கிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. நாங்கள் முன்பு நூற்பாலையை தொடங்குவதகாக திட்டமிட்டிருந்தோம். ஆனால் இந்த நூற்பாலையை வாங்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை ரூ.26 கோடி விலைக்கு வாங்கியுள்ளோம்.
இதற்கான நிதி நிறுவனத்தின் உபரி நிதி மூலமாக திரட்டப்பட்டுள்ளது. நூற்பாலைக்கு வங்கிகளில் இருந்த கடன் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய நூற்பாலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் முழு அளவில் இயங்க தொடங்கியது. இதில் 150 ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.
இந்த நூற்பாலை மூலம், தற்போது எங்களுக்கு தேவைப்படும் நூலில் 10 விழுக்காடு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.