இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களின் ஒன்றான ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் அரபு நாடுகளில் 2,400 கோடி டாலரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முகேஷ் அம்பானி அரபு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் கடந்த திங்கட்கிழமை ஐக்கிய அரபு குடியபரசின் பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் முக்தம், மற்றும் பெட்ரோலியத் துறை உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
இதற்கு பின் கல்ப் நியுஸ் என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“துபாயில் உள்ள எங்களது சர்வதேச வர்த்தக நிறுவனத்தின் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க போகின்றோம். இந்த பகுதியில் அடுத்த பத்து ஆண்டுகளில் நான்கு கோடி டாலர் முதல் ஆறு கோடி டாலர் முதலீட்டில் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகளை அமைக்க போகின்றோம். இதற்கு மொத்தம் 20 முதல் 24 கோடி டாலர் தேவைப்படுகிறது.
நாங்கள் இந்த பிராந்தியத்தில் இருந்து 300 கோடி முதல் 400 கோடி டாலர் மதிப்புள்ள பெட்ரோலிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கின்றோம். அதை சுத்திகரித்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றோம். இதன் மதிப்பு 800 கோடி டாலர்.
நாங்கள் இந்திய சந்தையை அரபு பிரதேசத்தில் அறிமுகப்படுத்த போகின்றோம். இந்த பிராந்தியத்தில் பல்வேறு வளங்கள் உள்ளன. இது எங்களுக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கின்றது. எதிர்காலத்தில் இந்தியா, சீனா, அரபு பிரதேசங்களிலேயே வர்த்தம் இருக்கும். அதனால் தான் அரபு தலைவர்கள் தங்கள் கவனத்தை அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு பதிலாக இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் பக்கம் திருப்ப வேண்டும். இதற்கு அரபு பிரதேசம் தயாராக இருந்தால் எதிர்காலத்தில் இந்த பிராந்தியத்தின் வளர்ச்சிக்கான உதவி இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து கிடைக்கும்” என்று கூறினார்.