பணக்கார நாடுகள் விவசாய துறைகளுக்கு வழங்கும் மானியத்தை குறைப்பதன் மூலம், வளரும் நாடுகளுக்கு உதவி செய்ய வேண்டும். இதனால் உலக வர்த்தக நிறுவனத்தின் தோகா பேச்சு வார்த்தையின் முடிவுகளால் ஏழை நாடுகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிபடுத்த முடியும் என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
உகாண்டா நாட்டில் கம்பாலாவில் காமன்வெத் நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகின்றது. இதை ஓட்டி காமன்வெல்த் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடையே சர்வதேச வர்த்தகம் குறித்த கலந்துரையாடல் நடந்தது. இதில் பங்கேற்று பேசும் போது பிரணாப் முகர்ஜி மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் பேசுகையில், தோகா பேச்சுவார்த்தையில் விவசாயத்துறை முக்கிய இடத்தில் உள்ளது. பணக்கார நாடுகள் விவசாயத் துறைக்கு வழங்கும் மாணியத்தால் ஏற்படும் வர்த்தக சீர்குலைவை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்போது நடைபெறும் உலக வர்த்தக நிறுவனத்தின் பேச்சு வார்த்தையில் நியாயமான முடிவுகளை எட்ட பணக்கார நாடுகள் இதை ( மானியம் குறைப்பு) கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். தோகாவில் அடுத்த முறை நடைபெறும் பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படுவது அவசியம். இது வளரும் நாடுகள் உலக வர்த்தகத்துடன் இணைவதற்கு வசதியாக இருக்க வேண்டும்.
சர்வதேச அளவில் வர்த்தகத்தில் பங்கேற்பதற்கு உரிய பலம் பெறுவதற்கு பல வளரும் நாடுகளுக்கு உதவிகள் தேவைப்படுகிறது. பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அதிகளவு ஏழ்மையாக உள்ள நாடுகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். அவைகள் வர்த்தகத்தில் பங்கேற்பதிலும், உலக வர்த்தக அமைப்புடன் இனைவதிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.
உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தை குவாட்டர் நாட்டின் தோகா நகரில் 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு பல்வேறு சுற்று பேச்சு வார்ததைகள் நடைபெற்றன. அமெரிக்காவின் தலைமையிலான வளரும் நாடுகளுக்கும், இந்தியா, பிரேஜில் ஆகியவற்றின் கலைமையில் உள்ள வளரும நாடுகளுக்கும் இடையில் விவசாய துறைக்கு பணக்கார நாடுகள் வழங்கும் மாணியத்தை குறைப்பது, இயந்திரம் உட்பட தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரி குறைப்பது தொடர்பாக கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. இதனால் தோகா பேச்சு வார்த்தையில் எவ்வித உடன்பாடும் காணமுடியவில்லை.