ஐ.என்.ஜி பரஸ்பர நிதி நிறுவனம் சர்வதேச அளவில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வதற்கு நிதி திரட்ட பரஸ்பர யூனிட்டுகளை வெளியிட்டுள்ளது.
இதில் நவம்பர் 20 ந் தேதி முதல் டிசம்பர் 14 ந் தேதி வரை முதலீடு செய்யலாம். ஒரு யூனிட் மதிப்பு ரூ.10. குறைந்தபட்சம் ரூ.5,000 முதலீடு செய்ய வேண்டும். அதற்கு பின் ரூ.1,000 மடங்கில் முதலீடு செய்யலாம். இது பட்டியலிடப்பட்ட பிறகு, அன்றைய தேதி மதிப்பில் விற்பனை செய்யலாம். விற்பனை செய்வதற்கும் மீண்டும் வாங்குவதற்கும் குறைந்தபட்ச கால வரம்பு இல்லை.
இந்த யூனிட்டை அறிமுகப்படுத்தி செய்தியாளர்களிடம் ஐ.என்.ஜி இன்வெஸ்ட்மென்ட் இந்தியா நிறுவனத்தின் மேலான்மை இயக்குநர் வினித் வோக்ரா கூறியதாவது:
“இந்த யூனிட்களை வெளியிடுவதன் நோக்கம் இதில் முதலீடு செய்பவர்களுக்கு நிரந்தர வைப்பு நிதிகளில் கிடைக்கும் வருவாயை விட அதிகமாக கிடைக்க வேண்டும். அதே நேரத்தில் பங்கு சந்தையின் இழப்பு இல்லாமல் வருவாய் கிடைக்கு வேண்டும்.
தற்போது இந்திய பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலை அதிகளவு மாறுகின்றது. பங்குகள், கடன் பத்திரங்களின் மதிப்பு அடிக்கடி குறைகின்றது. இதன் பாதிப்பு இல்லாமல் சிறு முதலீட்டாளர்களுக்கு வருவாய் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் யூனிட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் இருந்து திரட்டப்படும் மூலதனம் 21 நாடுகளில் அலுவலகம், வர்த்தக மையங்கள், மருத்துவமனைகள், உடல் ஆரோக்கிய மையங்கள், நட்சத்திர விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவைகளில் முதலீடு செய்யப்படும்” என்று கூறினார்.