சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரிப்பதற்கு இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
புது டெல்லியில் இந்திய - ஆப்பிரிக்கா பெட்ரோலிய வளங்கள் பற்றிய கருத்தரங்கு நடைபற்று வருகின்றது. இந்த கருத்தரங்கை பெட்ரோலிய அமைச்சகமும், ஃபிக்கி என்று அழைக்கப்படும் இந்திய வர்த்தக தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இதில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பது எல்லா வளரும் நாடுகளுக்கும் கவலை அளிக்கும் விடயமாகும். இதன் விலை உயர்வால் வளரும் நாடுகளின் பொருளாதாரம் பாதிப்படையும். இது பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளையும், அதை பயன்படுத்தும் நாடுகளையும் பாதிக்கும்.
வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியால், அவைகளுக்கு பெட்ரோலிய பொருட்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் தேவைக்கு அதிகமாக பெட்ரோலிய உற்பத்தி இருந்தாலும், இதன் வர்த்தகத்தில் உள்ள ஈடுபட்டுள்ள ஊக வணிக நிறுவனங்களால், இவை பயனற்று போகின்றன.
இந்த நெருக்கடியான நிலைமையில் ஆப்பிரிக்க கண்டத்தில் அபரிதமாக உள்ள பெட்ரோலிய வளம் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இந்தியாவிற்கும், பெட்ரோலிய வளம் அதிகளவு உள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்கம் இடையே ஒத்துழைப்பு மிக அவசியம் என்று முரளி தியோரா கூறினார்.
இந்தியா ஆப்பிரிக்க நாடுகளான நைஜிரியா, சூடான், எகிப்து ஆகிய நாடுகளில் கச்சா எண்ணெய் துரப்பண வயல்களை குத்தகைக்கு எடுத்து, இந்தியாவிற்கு பெட்ரோலிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.