ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது சில விதிமுறைகளுக்கு உட்பட்டு ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. இதன்படி முதலீடு செய்யப்படும் தொகை முன்று வருடங்கள் நாட்டை விட்டு கொண்டு செல்லக் கூடாது. குறைந்த பட்சம் 50 இலட்சம் டாலர் முதலீடு செய்ய வேண்டும். இந்த விதிகளுக்கு உட்பட்டு இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் செய்யப்படும் முதலீடு, யாருடைய அனுமதி பெறாமல் கொண்டு வரலாம்.
ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி, மத்திய அரசு, அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்கள் உட்பட யாருடைய அனுமதியையும் பெறத் தேவையில்லை.
இந்த விதியால் ரியல் எஸ்டேட் துறை மூலமாக அதிகளவு அந்நிய செலவாணி நாட்டிற்குள் கொண்டு வரப்படுவதால் ரிசர்வ் வங்கி கவலை அடைந்துள்ளது. எந்த அமைப்பிடமும் முன் அனுமதி பெறாமல், முதலீட்டை அனுமதிக்கும் பட்டியலில் இருந்து ரியல் எஸ்டேட் துறையை நீக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி விரும்புகிறது.
ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்ற பிறகே, முதலீடு செய்ய வேண்டும் என்ற விதியை கொண்டுவர வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறுகிறது.
இந்த நிதியாண்டில் முதல் நான்கு மாதத்தில் (ஏப்ரல் முதல் ஜூலை வரை ) ரியல் எஸ்டேட் துறையில் 6,270 லட்சம் டாலர் முதலீடு வந்துள்ளது. இந்த முதலீடு 2005 - 06 நிதியாண்டில் 380 லட்சம் டாலராகவும், 2006-07 நிதியாண்டில் 4,670 லட்சம் டாலராக மட்டுமே இருந்தது. இந்த வருடம் நான்கு மாதத்திலேயே மிக அதிகளவிற்கு ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது.
தற்போது ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அயல்நாடுகளில் கடன் பத்திரங்களை வெளியிட்டு கடன் திரட்ட அனுமதிக்கப்படுவதில்லை. சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், பங்குகளாக மாற்றும் கடன் பத்திரங்கள், சிறப்பு நிதி திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் நிதியை திரட்டி, அதை அந்நிய நேரடி முதலீடாக கொண்டு வருகின்றதா என்ற சந்தேகம் உள்ளது.
சென்ற வருடமும் ரிசர்வ் வங்கி தனது கவலையை மத்திய அரசுக்கு தெரிவித்து கடிதம் எழுதியது. ஆனால் அப்போது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எந்த ஆலோசனையையும் கூறவில்லை.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பார்டிசிபேட்டரி நோட் எனப்படும் பங்கேற்பு பத்திரங்கள் மூலம் முதலீடு செய்கின்றன. இதை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் (செபி) கட்டுப்படுத்த சில விதிமுறைகளை அறிவிப்பதாக அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு மத்திய அரசும் ஆதரவுக் கரம் நீட்டியது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதற்கு மத்திய அரசு சாதகமான முடிவுகளை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.