Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம்!

பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம்!

Webdunia

, வெள்ளி, 6 ஜூலை 2007 (20:22 IST)
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய சிறப்பு பொருளாதார மண்டலத்தை இணைந்து உருவாக்க உள்கட்டுமான மேம்பாட்டில் முன்னணியில் உள்ள ஜி.வி.கே. குழுமத்துடன் தமிழக அரசின் டிட்கோ ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது!

3,000 ஏக்கர் நிலப்பரப்பில் ஜவுளி, ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள், இயந்திரங்கள், மருந்து தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம், எஃகு மற்றும் உலோகம், உரம், இரசாயனம், மின்னணு தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளை நிறுவி இயக்க தேவைப்படும் உள்கட்டுமானத்தை உருவாக்க உலகளாவிய அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரி அதன் அடிப்படையில் ஹைதராபாத்தை மையமாக வைத்து இயங்கும் ஜி.வி.கே. குழுமத்தை தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் தேர்வு செய்தது.

தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான பெரம்பலூரில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ள இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்திடப்பட்டது.

டிட்கோ சார்பாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராமசுந்தரமும், ஜி.வி.கே. குழுமத்தின் தலைவர் கிருஷ்ணா ரெட்டியும் கையெழுத்திட்டனர். மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசா, தமிழக மின்துறை அமைச்சர் வீராசாமி, தொழில்துறைச் செயலர் சக்தி காந்திதாஸ், ஜி.வி.கே. குழுமத்தின் துணைத் தலைவர் சஞ்சய் ரெட்டி, நிர்வாக இயக்குநர் சாம் பூபால் ஆகியோர் உடனிருந்தனர்.

திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துதல், சாலை, தொழிற்சாலைகளுக்கான கட்டடங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், தனி மின்சார நிலையம் அமைத்தல், பொது கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் ஆகியவற்றிற்காக ரூ.1,500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த 7 ஆண்டுகளில் இங்கு ரூ.5,000 கோடி அளவிற்கு முதலீடுகள் வரும் என்றும், 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருந்து ரூ.6,000 கோடி வரை ஏற்றுமதியாகும் வாய்ப்புள்ளது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil