ஏப்ரல் மாதத்தில் நமது நாட்டின் தொழிலக உற்பத்தி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 13.6 விழுக்காடு அதிகரித்துள்ளது!
கடன்களின் மீதான வட்டி விகிதம் உயர்ந்துள்ளதன் காரணமாக இந்த ஆண்டில் தொழிலக உற்பத்தி குறையும் என்று அளிக்கப்பட்ட கணிப்புகளைத் தாண்டி கடந்த ஆண்டு ஏப்ரலில் 9.9 விழுக்காடாக இருந்த தொழிலக உற்பத்தி இந்த ஏப்ரலில் மேலும் 3.7 விழுக்காடு கூடுதலாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள தொழிலக உற்பத்திக்கான குறியீடு கூறுகிறது.
இதேபோல, ஒட்டுமொத்த உற்பத்தி 15.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் 5.9 விழுக்காடாக அதிகரித்திருந்த மின் உற்பத்தி இந்த ஆண்டு 8.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஆனால் சுரங்க உற்பத்தி 3.4 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளது. தொழிலக உற்பத்தி நன்கு உள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் என்று பொருளாதார நிபுணர் ஓம்கார் கோஸ்வாமி கூறியுள்ளார். (பி.டி.ஐ.)