அமெரிக்க நிதி நெருக்கடி உருவாக்கிய பொருளாதார சரிவிற்கு பல துறைகளும் பாதிக்கப்பட்டாலும், இந்திய தகவல் தொழில் நுட்பத் துறை பாதிப்படையவில்லை என்று இந்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைப்பான நாஸ்காம் தெரிவித்துள்ளது.
"பொருளாதார வீழ்ச்சியால் தகவல் தொழில் நுட்பத்துறை சற்றே மந்தமடைந்திருந்தாலும், நிறுவனங்கள் அடுத்த காலாண்டிற்காக இப்போதே பணியாளர்கள் தேர்வுகளை தொடங்கி விட்டன" என்று நாஸ்காம் தலைவர் சோம் மிட்டல் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் இந்த துறையில் ஏற்கனவே உள்ள பணி ஒப்பந்தங்களில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்று நாஸ்காம் கூறுகிறது.
மேலும் இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு புதிய முதலீட்டு வாய்ப்பாக ஜப்பான் அமைந்து வருகிறது என்று அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது ஜப்பானுக்கான தகவல் தொழில் நுட்ப ஏற்றுமதி 2 பில்லியன் டாலர்களுக்கு குறைவாக இருந்தாலும், வரும் காலங்களில் ஜப்பானில் இந்திய தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நாஸ்காம் அறிக்கை கூறுகிறது.
ஜப்பானின் தகவல் தொழில் நுட்ப ஒட்டுமொத்த சந்தை தற்போதைய நிலவரப்படி 108.6 பில்லியன் டாலர்களாக உள்ளது. இதில் 8- 10 விழுக்காடே அவுட் சோர்ஸிங் செய்யப்படுகிறது. ஆனாலும் ஜப்பானில் மனிதவளப்பிரிவில் ஏற்பட்டுள்ள தொய்வால் இந்திய நிறுவனங்களுக்கான வாய்ப்பு அங்கு அதிகரித்துள்ளது என்று நாஸ்காம் கூறியுள்ளது.
இருப்பினும் உலகின் தற்போதைய நிதி நெருக்கடிகளுக்கு ஜப்பான் ஒரு தீர்வாகாது என்றாலும், இந்திய தகவல் தொழில் நுட்பத் துறையைப் பொறுத்தவரை நீண்ட நாளைய முதலீட்டிற்கான ஒரு சந்தையாக ஜப்பான் எதிர்காலத்தில் விளங்கும் என்று நாஸ்காம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.