19 ஆம் தேதி முதல் சமையல் கேஸ் சப்ளை நிறுத்தம் - எண்ணெய் நிறுவனங்கள் கெடுபிடி
, புதன், 8 ஜனவரி 2014 (10:38 IST)
எண்ணெய் நிறுவனங்கள் கெடுபிடி செய்வதாகவும், எனவே வருகிற 19 ஆம் தேதி முதல் சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளையை நிறுத்தப்போவதாகவும் வினியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் 15 கோடி குடும்பங்கள் சமையல் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்துகின்றன.மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கழகம், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை சமையல் கேஸ் சிலிண்டர்களை தயாரித்து பயன்பாட்டுக்காக வழங்குகின்றன.எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து சமையல் கேஸ் சிலிண்டர்களை பெற்று வீடுகளுக்கும், வர்த்தக பயன்பாட்டுக்கும் ‘சப்ளை’ செய்வதற்காக சுமார் 12 ஆயிரத்து 600 வினியோகஸ்தர்கள் (டீலர்கள்) இருக்கிறார்கள்.வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அதற்கு மேல் தேவைப்படும் சிலிண்டர்களை சந்தை விலையில்தான் வாங்க வேண்டும்.ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் பயன்படுத்துவதற்காக 19 கிலோ எடையில் வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வர்த்தக சிலிண்டர்களுக்கு மானியம் கிடையாது. இவற்றின் விலை அதிகம் என்பதால், வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் சிலிண்டர்களை வினியோகஸ்தர்களின் ஒத்துழைப்புடன் சில ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகள் வாங்கி வருவதாக புகார்கள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து, வீடுகளுக்கான சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க எண்ணெய் நிறுவனங்களில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்பிரிவை சேர்ந்த அதிகாரிகள் ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்டு அறிய அவ்வப்போது அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
அப்படி வீடுகளுக்கான சிலிண்டர்கள் உபயோகப்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஹோட்டல், டீக்கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. சில சமயங்களில் சிறைத்தண்டனையும் கிடைக்கிறது. சம்பந்தப்பட்ட சமையல் கேஸ் வினியோகஸ்தருக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, சில சமயங்களில் வினியோக உரிமையும் ரத்து செய்யப்படுவது உண்டு.
மேலும் கள்ளச்சந்தையில் வீடுகளுக்கான சிலிண்டர் விற்கப்படுவதை தடுக்க கடுமையான விதிமுறைகளையும் எண்ணெய் நிறுவனங்கள் வகுத்துள்ளன.
இதற்கிடையே, கிராமப்புறங்களில் வர்த்தக சிலிண்டர்களின் தேவை குறைவாக இருந்த போதிலும் அவற்றை அதிக அளவில் விற்பனை செய்யுமாறு தங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக வினியோகஸ்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அத்துடன், எண்ணெய் நிறுவனங்களில் இருந்து தங்களுக்கு அனுப்பப்படும் சிலிண்டர்களில் சில எடை குறைவாக இருப்பதாகவும், சில சமயங்களில் காலாவதியான சிலிண்டர்கள் வந்து விடுவதாகவும் அவர்கள் குறை கூறுகிறார்கள்.
இந்த குறைகளை நிவர்த்தி செய்யக் கோரியும், கடுமையான விதிமுறைகளை தளர்த்தக்கோரியும், எண்ணெய் நிறுவனங்களின் கெடுபிடிகளை கண்டித்தும் வருகிற 15-ந் தேதி முதல் ஒத்துழையாமை போராட்டம் நடத்த இந்திய சமையல் கேஸ் வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பவன் சோனி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 600 வினியோகஸ்தர்களும் வருகிற 15-ந்தேதி முதல் வர்த்தக சிலிண்டரின் விற்பனையை நிறுத்துவோம். வீடுகளுக்கு சிலிண்டர்களை ‘சப்ளை’ செய்யமாட்டோம். வீட்டு உபயோக சிலிண்டர் தேவைப்படுபவர்கள், எங்கள் கிடங்கிக்கு வந்து சிலிண்டர்களை பெற்றுச் செல்லலாம்.
அதன்பிறகும் எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் 19-ந்தேதி முதல் அனைத்து சிலிண்டர்கள் விற்பனையையும் ஒட்டுமொத்தமாக நிறுத்திவிடுவோம் என்று பவன் சோனி கூறினார்.
ஆனால் வினியோகஸ்தர்கள் கூறும் புகார்களை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் மறுத்து உள்ளனர்.
இதுபற்றி ஓர் அதிகாரி கூறுகையில்; நேர்மையான வினியோகஸ்தர்கள் எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளை கண்டு பயப்படவேண்டிய அவசியம் இல்லை என்றும், அந்த விதிமுறைகளை தளர்த்தும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார்.
வினியோகஸ்தர்கள் ஒரு நாள் சிலிண்டர் சப்ளை செய்யாவிட்டாலே, லட்சக்கணக்கான சிலிண்டர்கள் தேங்கிவிடும். இதன் விளைவாக சில வாரங்களுக்கு சிலிண்டர் வினியோகத்தில் குழப்பம் ஏற்பட்டு வீடுகளுக்கு உரிய நேரத்தில் சிலிண்டர் கிடைக்காது. இந்த நிலையில், வினியோகஸ்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது.