பி.எஃப் கணக்கு விவரம் அக்டோபர் 1 முதல் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்
, செவ்வாய், 3 செப்டம்பர் 2013 (15:18 IST)
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இம்மாதம் 6 ஆம் தேதியிலிருந்து அன்றைய நிலவரப்படி சந்தாதாரர்கள் கணக்கில் உள்ள தொகை குறித்த முழு விவரங்களையும் வெளியிட ஆயத்தமாகி வருகிறது என வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் கே.கே.ஜலான் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலையில், பி.எஃப். சந்தைதாரர்களுக்கு அவர்கள் பணி புரியும் நிறுவனங்கள் வாயிலாக பி.எஃப். சிலிப் வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக முந்தைய நிதி ஆண்டிற்கான விவரத்தை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.புதிய திட்டத்தால் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு விவரத்தை மாதந்தோறும் தெரிந்து கொள்ளலாம். இதற்காக ஆன்லைனிலிருந்து பதிவிறக்கம் செய்து பிரதி எடுத்துக்கொள்ளலாம். இதன் வாயிலாக 5 கோடி சந்தாதாரர்கள் பயன் பெறுவார்கள்.ஒவ்வொரு சந்தாதாரருக்கும் வங்கி கணக்கு எண் போன்று பொதுவான எண் ஒன்றை ஒதுக்கவும் பி.எஃப். அமைப்பு முடிவு செய்துள்ளதாக ஜலான் தெரிவித்தார். இந்த திட்டத்தால் பணியாளர் வேறு நிறுவனத்துக்கு மாறும்போது அவரது கணக்கை உடனடியாக மாற்ற முடியும். இந்த திட்டம் நடப்பு நிதி ஆண்டிற்குள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.சந்தாதாரர்கள் நலன் கருதி வருங்கால வைப்பு நிதி அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வருங்கால வைப்பு நிதியிலிருந்து 40 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். கம்ப்யூட்டர் வாயிலாக இவர்களின் கணக்குகளையும் ஒருங்கிணைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஓய்வூதியதாரர்கள் மாதத்தின் முதல் தேதி அன்றே ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கே.கே.ஜலான் தெரிவித்துள்ளார்.