Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருப்புப் பண விவரங்களை வெளியிட இயலாது: பிரணாப் முகர்ஜி

கருப்புப் பண விவரங்களை வெளியிட இயலாது: பிரணாப் முகர்ஜி
, செவ்வாய், 25 ஜனவரி 2011 (17:11 IST)
FILE
சுவிட்சர்லாந்து உள்ளிட்ட அயல் நாட்டு வங்கிகளின் இரகசிய கணக்குகளில் தங்களது கருப்புப் பணத்தை போட்டு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களை வெளியிடுவதற்கு சட்ட வரையறை ஏதுமில்லாததால், அந்த விவரங்களை அரசால் வெளியிட இயலாது என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

அயல் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள கருப்புப் பணத்தை வெளிக்கொண்டுவருவது தொடர்பாக மத்திய அரசின் திட்டம் என்ன என்பதை விளக்க டெல்லியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய பிரணாப் முகர்ஜி இவ்வாறு கூறியுள்ளார்.

அயல் நாடுகளின் வங்கிகளிடமிருந்து பெற்ற கருப்புப் பண விவரங்களை வெளியிட்டால் மத்திய அரசு கவிழ்ந்துவிடும் என்பதாலேயே, அந்த விவரங்களை மத்திய அரசு வெளியிடத் தயங்குகிறது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றனவே என்று செய்தியளார்கள் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி, “முதலில் இப்பிரச்சனையை புரிந்துகொள்வோம். நாம் பெற்றுள்ள தகவல்களை வெளியிடுவதற்கான சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு சட்ட வரையறை (Legal Framework) இல்லை. இரகசியத்தை காப்போம் என்கிற நிபந்தனைகளின் அடிப்படையில்தான் இந்த (கருப்புப் பண) விவரங்களை பெற்றுள்ளோம். அவ்வாறு உறுதியளித்துவிட்டு, இப்போது விவரங்களை நாம் வெளியிட்டால், நாளைக்கு நாம் மற்ற நாடுகளிடமிருந்து எந்த விவரத்தைக் கேட்டாலும், இரகசிய நிபந்தனையை ஏற்றுக்கொண்டு, பிறகு அதனை காப்பாற்றாத காரணத்தைக் காட்டி, நமக்கு எந்த தகவலும் தரமாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

இந்தியர்களின் கருப்புப் பண விவரங்கள் அனைத்தையும் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் (Double Taxation Avoidance Agreement - DTAA) அடிப்படையிலும், வரி விதிப்பு தொடர்பான தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தின் (Exchange of Taxation Information Agreement - ETIA) அடிப்படையிலும் பெற்றுள்ளோம். இந்த இரண்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில்தான் பல்வேறு நாடுகளின் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பண விவரங்களை பெறும் ஒப்பந்தங்களை 23 நாடுகளுடன் செய்துகொண்டுள்ளோம் என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

ஆயினும் விவரங்களை நீங்கள் அறியலாம்!

மத்திய அரசின் வசம் கருப்புப் பண பட்டியல் விவரங்களை நாட்டு மக்கள் அறிந்துகொள்வதற்கு ஒரு வழி உள்ளது என்று கூறிய அமைச்சர் பிரணாப், இந்த கருப்புப் பணங்கள் மீது வருமான வரி்த்துறை வரி விதித்து வசூல் செய்ய வழக்குத் தொடரும்போது அந்த விவரங்களை அறியலாம் என்று கூறிய பிரணாப் முகர்ஜி, வருமான வரித்துறையின் நிர்வாகத்தை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றும், எனவே அவர்கள் விவரங்களை வெளியிடும் போது தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

“கருப்புப் பணத்தை அயல் நாட்டு வங்கிகளில் போட்டு வைத்திருப்பவர்களின் பெயரை அறிந்துகொள்ளும் எண்ணமோ, அதிகாரமோ எனக்கு இல்லையென்றாலும், வருமான வரித்துறையினர் மேற்கொள்ளும் சட்ட ரீதியான நடவடிக்கைகளில் என்னால் தலையிட முடியாது. ஏனெனில் நிதியமைச்சகத்தின் நிர்வாக அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது வருமான வரித்துறையின் செயல்பாடு” என்று பிரணாப் கூறியுள்ளார்.

கருப்புப் பணத்தின் சரியான மதிப்பு தெரியாத

நாட்டிற்குள்ளேயும், நாட்டிற்கு வெளியேயும் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் அளவு எவ்வளவு என்பதற்கு எந்த அதிகாரப்பூர்வமான மதிப்பீடு ஏதும் இல்லை என்று கூறிய பிரணாப் முகர்ஜி, உலக நிதி நேர்மை அமைப்பு (Global Financial Integrity ) இந்தியாவில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்ட பணத்தின் அளவு 462 பில்லியன் டாலர்கள் (ஒரு பில்லியன் = 100 கோடி) என்று மதிப்பிட்டுள்ளதற்கு நம்பத்தகுந்த எந்த அடிப்படையும் இல்லை என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil