செல்பேசிகளைப் பயன்படுத்துவோர், ஒரு நிறுவனத்தின் சேவையிலிருந்து மற்றொரு நிறுவனத்தின் சேவைக்கு மாறும்போதும், அதே எண்ணைத் தொடர அனுமதிக்கும் வசதி நவம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆண்டிமுத்து ராசா கூறியுள்ளார்.
நமது நாட்டிலுள்ள 22 செல்பேசி வட்டங்களில் 11இல் இந்த வசதி வரும் நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வசதி கடந்த மார்ச் மாதம் முதலே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு, அந்த தொழில் நுட்ப வசதி பாதுகாப்புக் காரணங்களுக்காக தாமதப்படுவதாக கூறப்பட்டு இப்போது அறிமுகம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே அதிகமாக செல்பேசிகளை பயன்படுத்துவோர் மிகுந்த நாடாக உள்ள நமது நாட்டில், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1 கோடியே 80 இலட்சம் பேர் புதிதாக செல்பேசி இணைப்புகளைப் பெறுகின்றனர் என்று செல்பேசி நிறுவனங்களின் சங்கம் வெளியிட்ட புள்ளி விவரம் தெரிவிக்கிறது.