பொருளாதாரப் பின்னடைவால் வேலையிழந்த பல இலட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு வேலை பெற நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதே எனது தலையாய பணி என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திலிருந்து அமெரிக்க மக்களுக்கு 18 நிமிட நேரம் உரையாற்றிய ஒபாமா, ஈராக்கிலிருந்து அமெரிக்கா வெளியேறுவிட்டது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
“நமது நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதே மிக அவசர அவசியமான பணி. அதுமட்டுமல்ல, வேலையிழந்த பல இலட்சக்கணக்கான அமெரிக்கர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதும், நடுத்தட்டு மக்களின் வாழ்க்கையை பலப்படுத்துவதுமாகும். நமது குழந்தைகளுக்கு அவர்களுக்கு உரிய கல்வியை வழங்கிட வேண்டும். அதன் மூலம் உலக பொருளாதாரத்தில் போட்டியிட்டு முன்னேறும் திறனை அவர்களுக்கு அளிக்க வேண்டும்” என்று ஒபாமா பேசினார்.
“அந்நிய நாட்டு எண்ணெய் இறக்குமதியைக் கொண்டு நமது தேவைகளை நிறைவு செய்துகொள்ளும் நிலை மாறவேண்டும். புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு புதிய புதிய பொருட்களை உருவாக்க வேண்டும். புதிய சிந்தனைகளின் மூலம் புதுமையான வணிகத்தை நாம் உருவாக்க வேண்டும். வேலை வாய்ப்பை உருவாக்கும் தொழிலகங்களை உருவாக்க வேண்டும்” என்றும் ஒபாமா பேசினார்.