காவிரி , அதன் கிளை ஆறுகளில் கழிவுகள் கலப்பதை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது என்று மத்திய சுற்றுச்சூழல்- வனத்துறை இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் நேற்று கனிமொழி எம்.பி கேட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது, காவிரி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதற்கு முன்பாக அவற்றை சுத்திகரிப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. கழிவுகளை சுத்திகரிப்பதற்கான ஆலை மற்றும் மறு சுழற்சி முறையிலான கழிவுகள் சுத்திகரிப்பு போன்ற வசதிகளை, தமிழ்நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் கொண்டுள்ளன. சுத்திகரிக்கப்பட்ட கழிவுகள் தோட்ட வேலைக்கும், நீர்ப்பாசனத்திற்கும், குளிர்ச்சிப்படுத்துவதற்கும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. அல்லது அவை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த தர நிர்ணய அளவுகளில் உள்ளூர் நீர் நிலைகளில் விடப்படுகின்றன.
கர்நாடகாவில் காவிரி ஆறு தோன்றுகிறது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தகவலின்படி கர்நாடகாவில் உள்ள எந்த ஒரு தொழிற்சாலையும் தனது கழிவுகளை காவிரி ஆற்றில் கலக்கவிடுவதில்லை என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.