தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்ற சட்டம் குறித்து விரிவான பொது விவாதம் தேவை என்று பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் இல.கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக அரசு சமீபத்தில், தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்ற சட்டம் என்கின்ற சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது. இந்த சட்டம் குறித்து விரிவான பொது விவாதம் தேவை.
மக்கள் மத்தியில் சமீபகாலமாக இயற்கை வேளாண்மை பிரபலமாகி வருகிறது. அதன் காரணமாக விவசாயிகளும் கூட அனுபவ ரீதியில் பயன்பெற்று வருகிறார்கள். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், விவசாயிகள் மத்தியில் இதன் காரணமாகவே வரவேற்பை பெற்றிருக்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட, தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்ற சட்டத்தின் 4-வது அத்தியாயத்தில் 29 வது பிரிவில் ஒரு ஆபத்தான ஷரத்து சேர்க்கப்பட்டு இருக்கிறது.
வேளாண்மை துறையில் ஆலோசனைகள் சொல்வதோ அல்லது வேளாண்மை பணிகளை ஆற்றுவதோ அரசாங்கத்தின் விதிகளின்படி பதிவு செய்யப்பட்டவர்களே, இதனை செய்ய வேண்டும். பதிவேட்டில் இடம் பெறாத எவரும் தமிழகத்தில் வேளாண்மை ஆலோசகராகவோ வேளாண்மை பணி ஆற்றுபவராகவோ செயல்படக்கூடாது என்று அந்த ஷரத்து தெரிவித்துள்ளது.
இந்த ஷரத்து குறித்து பொது விவாதம் தேவை. செயற்கை உரங்களை தயாரிக்கிற நிறுவனங்கள், இயற்கை வேளாண்மை பரவுவதை தடுப்பதற்காக தங்களது செல்வாக்கை பயன்படுத்தி அரசாங்கத்தின் மூலம் செய்கின்ற முயற்சியாக இருக்குமோ என்று சந்தேகம் எழுகிறது.
இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். அதே நேரத்தில் விவசாயிகளும் விழிப்புணர்வுடன் இருந்து, இத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.