Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை விதி மீறிய நிறுவனங்கள்

Advertiesment
பங்குச் சந்தை விதி மீறிய நிறுவனங்கள்
புது தில்லி , புதன், 4 பிப்ரவரி 2009 (11:29 IST)
பங்குச் சந்தையில் பட்டியலிட்டுள்ள நிறுவனங்களில், விதிகளை மீறிய நிறுவனங்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. 1,317 நிறுவனங்கள், அவற்றின் அறிக்கையை பங்கு பரிவர்த்தனை மையத்திடம் (செபி) தாக்கல் செய்யவில்லை.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மிகப் பெரிய நிதி முறைகேடு நடந்துள்ள நிலையில் 1,317 நிறுவனங்கள் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.

தற்போது தொழில், வர்த்தக நிறுவனங்கள் இந்த நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான (அக்டோபர்-டிசம்பர்) இலாப-நஷ்ட கணக்கு அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. இவை முந்தைய காலாண்டுக்கான (ஜூலை-செப்டம்பர்) அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனஙகளில் 1,228 நிறுவனங்களும், தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுவற்றில் 89 நிறுவனங்களும் அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை.

இந்த அறிக்கையைத் தாக்கல் செய்யாத 89 நிறுவனங்களின் வர்த்தகத்தை தேசிய பங்குச் சந்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இது வரை மும்பை பங்குச் சந்தை எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அறிக்கையைத் தாக்கல் செய்யாதது சட்டப்படி விதிமீறிய நடவடிக்கையாகும். இது பங்குச் சந்தையில், பங்குகளைப் பட்டியலிடுவதற்கான விதிமுறைகளை மீறிய நடவடிக்கை என்று சாகர் அசோசியேட்ஸ் நிறுவனத் தலைவர் சோமசேகர் சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.

அந்தந்த காலாண்டு முடிந்த 15 தினங்களுக்குள் குறிப்பிட்ட நிறுவனங்களின் அதிகாரி கையொப்பமிட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் இரண்டாம் காலாண்டு முடிந்து நான்கு மாதங்கள் ஆன நிலையில் தாக்கல் செய்யப்படாதது விதிமீறலாகும்.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஏற்பட்ட சம்பவத்துக்குப் பிறகும் இத்தகைய விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது "செபி' கடுமையான நடவடிக்கை எடுக்காதது வியப்பளிப்பதாக பங்குச் சந்தை வல்லுநர் ஒருவர் தெரிவித்தார்.

ஆதித்யா பாலிமர்ஸ், ஆல்பிக் ஃபைனான்ஸ், பால்மர் லாரீ, பிஐஎல், சைபர்ஸ்பேஸ் இன்ஃபோசிஸ், டால்மியா இண்டஸ்ட்ரீஸ், டிஎஸ்க்யூ சாஃப்ட்வேர், டிஎஸ்க்யூ பயோடெக், யுரேகா இண்டஸ்ட்ரீஸ், ஐடிபிஐ வங்கி, இண்டியாபுல்ஸ், லான்கோ இண்டஸ்ட்ரீஸ், ரதி இஸ்பட், யுனைடெட் பிரூவரீஸ், வர்தமான் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அறிக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களில் முக்கியமானவையாகும்.

இந்த விஷயம் மும்பை பங்குச் சந்தை இயக்குநர் குழு கவனத்துக்கு வரவில்லை என்ற போதிலும் விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பங்குச் சந்தை தலைவர் ஜகதீஷ் கபூர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பங்குச் சந்தையில் பட்டியலிட்டுள்ள 138 நிறுவனங்கள் 40ஏ விதிமுறையைப் பின்பற்றவில்லை. இந்த நிறுவனத்தின் மொத்த பங்கில் 10 விழுக்காடு பொதுமக்கள் வசம் இருக்க வேண்டும். ஆனால் இந்நிறுவனங்கள் இந்த விதிமுறையை முற்றிலுமாக பூர்த்தி செய்யவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இவற்றின் மீது செபி, கம்பெனிகள் பதிவு இயக்குநரகம், மத்திய நிறுவன விவகார அமைச்சகம் ஆகியவை எடுக்கப் போகும் நடவடிக்கைகள் பற்றி, இனிமேல் தான் தெரியவரும்.

Share this Story:

Follow Webdunia tamil