விவசாயிகளுக்கான பயிர் நிவாரணத் தொகை வழங்கப்படும் போது, பிடித்தம் செய்த சேவை வரி திருப்பி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் தெரிவித்தார்.
நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஆட்சியர் மு. ஜெயராமன் தலைமை வகித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அண்ணாதுரை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் எஸ். சந்திரமோகன், வேளாண் இணை இயக்குநர் கருணாகரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஸ்வநாதன், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், பல்வேறு பிரச்சனை குறித்து பேசினார்கள்.
இயற்கை வேளாண் ஆர்வலர் அ. அம்பலாணன் பேசும் போது, வைக்கோல் பற்றாக்குறையால், கால்நடைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. எனவே, விவசாயத்தின் துணைத் தொழிலாக கால்நடை வளர்ப்புக்கும் முக்கியத்தும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கடைமடை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ. அலெக்ஸôண்டர் பேசும் போது, பயிர் நிவாரணத் தொகை வழங்கும் போது, கூட்டுறவு வங்கிகளில் ரூ. 5 ஆயிரத்துக்கு ரூ. 100 வீதம் சேவை வரியாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிடித்தம் அரசு அனுமதித்ததா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு குடந்தை மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் ஜெ. நடராஜன் பதிலளிக்கையில், பயனாளிகள் பட்டியலை நகலெடுத்தது, ரசீது புத்தகங்கள் தயாரித்தது ஆகிய செலவினங்களை ஈடுகட்ட, சேவை வரி பிடித்தம் செய்யுமாறு மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு வங்கிகளுக்கு வாய்மொழி உத்தரவு அளித்தது என்று தெரிவித்தார்.
விவசாயி ராமமூர்த்தி வர்மா, விதை நேர்த்தி மையங்கள் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு வேளாண் இணை இயக்குநர் கருணாகரன் பதிலளிக்கையில், விதை நேர்த்தி மையம் அமைக்க முன்வரும் தனியாருக்கு மானியம் வழங்கும் திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், விரைவில் விதை நேர்த்தி மையங்கள் அமையும் என்று தெரிவித்தார்.
விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் வி. சுப்பிரமணியன் பேசுகையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டைக்கு அரசு நிர்ணயித்த எடையைவிட சுமார் ஒரு கிலோ அதிகமாக விவசாயிகளிடமிருந்து நெல் பிடிக்கப்படுகிறது. மேலும், ஒரு மூட்டைக்கு ரூ. 10 வீதம் கையூட்டுப் பெறப்படுகிறது என்ற குற்றம் சாட்டடினார்.
விவசாயி குரு. கோபி கணேசன் ஆகியோர், வெள்ள நிவாரணப் பணிகளைத் துறைவாரியாக விளம்பரப்படுத்த வேண்டும் என்று கூறினார்கள்.
காவிரி பாதுகாப்பு விவசாயிகள் சங்க பொதுச் செயலர் தனபாலன் பேசுகையில், நாகை மாவட்டத்தை இயற்கைப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
விவசாயி முஜிபு ஷரீப் பேசுகையில், புஷ்பவனம் கிராமத்தில் கட்டப்பட்ட முந்திரி உடைப்பு ஆலை எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று கேட்டார்.
இதற்கு தோட்டக்கலைத் துறை அலுவலர் பதிலளிக்கையில், முந்திரி உடைப்பு குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டு, முந்திரி உடைப்பு ஆலை விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று பதிலளித்தார்.
விவசாயி சோமு. இளங்கோ ஆகியோர், அரிச்சந்திரா நதி- முதலியப்பன்கண்டி வரை தாற்காலிக மண் தடுப்பனைகள் கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
ஆட்சியர் மு. ஜெயராமன் பேசுகையில், பயிர் நிவாரணத் தொகையில் ஒரு பைசா கூட குறையாமல் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என முதல்வர் அறிவித்துள்ளார். பயிர் நிவாரணத் தொகை வழங்கல் பணிக்கு ஏற்பட்ட செலவினங்களுக்கு, விவசாயிகளிடம் சேவை வரியாக வசூலித்தை ஏற்க முடியாது.
விவசாயிகளின் பயிர் நிவாரணத் தொகையில் பிடித்தம் செய்யப்பட்ட சேவை வரித் தொகையைக் கூட்டுறவு வங்கிகள் உடனடியாக விவசாயிகளுக்குத் திருப்பி அளிக்க வேண்டும்.
கையூட்டுப் பெறும் கொள்முதல் ஊழியர்களுக்கு நிகழ்ப் பருவம் முழுவதிலும் பணி வாய்ப்பு மறுக்கப்படும்' கூடுதல் எடை வைத்து நெல் பிடிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆறுகளைத் தாற்காலிக சீரமைக்க அரசு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று கூறினார்.
முதல்வரின் அறிவுறுத்தலை உதாசீனப்படுத்தி, பயிர் நிவாரணத் தொகையில், சேவை வரி பிடித்தம் செய்த அதிகாரிகள் மீது தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் எடுக்கப்போகும் நடவடிக்கை பற்றி அறிந்து கொள்ள விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். சேவை வரி பிடித்தம் செய்ய வாய்மொழி உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?