மாய்டாஸ் இன்ப்ராக்சர் நிறுவனத்திற்கு கொடுத்த கட்டுமான பணிகள் மறு பரிசீலணை செய்யப்படும் என்று ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி தெரிவித்தார்.
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நடந்த ரூ.7 ஆயிரம் கோடி முறைகேடு நடந்ததாக இதன் சேர்மன் ராமலிங்க ராஜு பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
இவரின் மகன்களுக்கு சொந்தமாக மாய்டாஸ் இன்ப்ராக்சர், மாய்டாஸ் ரியல்எஸ்டேட் என்ற இரண்டு நிறுவனம் உள்ளது.
இதில் மாய்டாஸ் இன்ப்ராக்சர், அரசு கட்டுமான பணிகளை செய்யும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நடைபெறுகின்ற அயல்வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பங்கேற்ற ராஜசேகர ரெட்டி செய்தியாளர்களிடம் பேசும் போது. சி.பி-சி.ஐ.டி பிரிவு சத்யம் கம்ப்யூட்டரில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை விசாரிக்கும். இதில் தவறு கண்டுபிடிக்கப்பட்டால், ராமலிங்க ராஜு கைது செய்யப்படுவார் என்று கூறினார்.
அவரிடம் மாய்டாஸ் இன்ப்ராக்சர் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள கட்டுமான பணிகள் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா என்று கேட்டதற்கு, கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற எல்லா சம்பவங்களையும் பரிசீலித்து வருகிறோம். இந்த சம்பவம் துரதிஷ்டமானது. யாருமே இப்படி நடக்கும் என்று எதிரிபார்க்கவில்லை. மத்திய அரசு நெருக்கடியை தீர்க்கும் முயற்சியை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.