Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சத்யம்-ரூ.7 ஆயிரம் கோடி முறைகேடு

சத்யம்-ரூ.7 ஆயிரம் கோடி முறைகேடு
ஹைதராபாத் , வியாழன், 8 ஜனவரி 2009 (17:28 IST)
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் கணக்குகளில் ரூ.7,136 கோடி முறைகேடாக காண்பிக்கப்பட்டுள்ளது என்று ராமலிங்க ராஜு நேற்று ஒத்துக் கொண்டார்.

இந்தியாவின் மென்பொருள் வடிவமைப்பு நிறுவனங்களில் நான்காவது இடத்தில் இருக்கும் சத்யம் கம்யூட்டரின் நிறுவனரும் சேர்மனுமான ராமலிங்க ராஜூ நேற்று சேர்மன் பதவியை ராஜினமா செய்தார்.

இதன் இயக்குநர்கள் குழு கூட்டம் வருகின்ற 10 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நேற்று ராமலிங்க ராஜூவும், அவரது தம்பியும் மேலாண்மை இயக்குநருமான ராம ராஜூவும் பதவியை ராஜினமா செய்தார்.

தனது பதவி விலகல் குறித்து ராமலிங்க ராஜு இயக்குநர்களுக்கும், பங்குச் சந்தைகள், பங்குச் சந்தையை கண்காணிக்கும் செபிக்கு எழுதிய கடிதத்தில், சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் கணக்குகளில் செயற்கையாக வருவாய், இலாபத்தை காண்பித்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்த கணக்குகளில் வங்கிகளிலோ அல்லது ரொக்கமாகவோ இல்லாமல், ரூ.5,040 கோடி இருப்பில் இருப்பதாக காண்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ.1,230 கோடி வரவு வர வேண்டிய பாக்கி, கடன் கொடுக்க வேண்டியது ரூ.490 கோடி என்று காண்பிக்கப்பட்டுள்ளது. ( உண்மையான கடன் ரூ.2,651 கோடி ).

கடந்த காலங்களில் உண்மையான இலாபத்தை விட பல மடங்கு (இலாப-நஷ்ட கணக்கு) இலாபம் அடைந்திருப்பாதக காண்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிக இலாபம் பெற்று இருப்பதாக செயற்கையாக கணக்கில் காண்பிக்க நிறுவனம் பல மடங்கு வளர்ச்சி அடைந்திருப்பதாக பொய்யான தகவல் கூறப்பட்டது என்று கூறியுள்ளார்.

இந்த கணக்கில் உள்ள முறைகேடுகளை சமாளிக்க, ராமலிங்க ராஜு, ரியல் எஸ்டேட் துறையில் உள்ள அவரது மகன்களின் நிறுவனமான மாய்டாஸ் ரியல் எஸ்டேட், மாய்டாஸ் இன்ப்ராவின் 51% பங்கு வாங்கியதாக கணக்கு காண்பித்து, அதற்கு சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் கணக்குகளில் செயற்கையாக காண்பித்துள்ள வருவாயை கொடுத்ததாக கூறி கணக்கை சரி செய்து விடலாம் என்று கருதினார்.

இதற்கான ஒப்புதலை பெறுவதற்காக, சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம், கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இரண்டு நிறுவனங்களையும் 1.6 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கான ஒப்புதல் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு இயக்குநர் குழுவில் இடம் பெற்றுள்ள, நிறுவனத்தைச் சாராக இயக்குநர்கள், உள்நாட்டு, அந்நிய முதலீட்டு நிறுனங்கள், சிறு முதலீட்டாளர்கள் ஆகிய தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுது.

சத்யம் நிறுவனத்தின் ரூபாயில், வாங்குவதாக தீர்மானித்த மாய்டாஸ் புராபர்ட்டிஸ் (ரியல் எஸ்டேட்) நிறுவனத்தின் பங்குகளில் 35%, ராமலிங்க ராஜு, சத்யம் கம்ப்யூட்டரின் முக்கிய பிரமுகர்கள் வசம் உள்ளது.

இதே போல் மாய்டாஸ் இன்ப்ராக்சர் நிறுவனத்தின் மொத்த பங்குகளில், 36% பங்கு ராமலிங்க ராஜு, அவரைச் சேர்ந்தவர்கள் வசம் உள்ளது.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் ஈடுபட்டுள்ள தொழிலுக்கு எவ்வித தொடர்பும் இல்லாத ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விக்கு, ராமலிங்க ராஜு, அவரைச் சேர்ந்தவர்களிடம் இருந்து உரிய விளக்கம் அளிக்கப் படவில்லை.

அத்துடன் ரியல் எஸ்டேட் துறை விளிம்பு நிலையை நோக்கி போய் கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மென்பொருள் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள சத்யம் போன்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்டடுள்ளன.

இந்த சூழ்நிலையில் ரியல் எஸ்டேட், உள்கட்டுமான நிறுவனங்களை வாங்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியவில்லை.

இந்நிலையில் நியுயார்க், மும்பை, தேசிய பங்குச் சந்தையில், சத்யம் நிறுவனத்தின் பங்குவிலை சரிந்தது. இந்த நெருக்கடியான நிலைமையை புரிந்து கொண்ட ராமலிங்க ராஜு, அடுத்த நாளே மாய்டாஸ் நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் முடிவை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.

இந்த பிரச்சனையே முடிவடையாத நிலையில், உலக வங்கி சத்யம் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தது. இந்த நிறுவனம் உலக வங்கியின் மென் பொருள் வடிவமைப்பு உட்பட சில பணிகளை செய்து கொடுத்து இருந்தது. இதில் உள்ள தகவல்கள், வெளி ஆட்களுக்கு கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், அத்துடன் லஞ்சம் கொடுத்து இருப்பதாகவும் குற்றம் சாட்டியது.

இந்த குற்றச்சாட்டு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் ஆகி விட்டது.

இதை தொடர்ந்து சத்யம் நிறுவத்தின் பங்குகளின் விலை சரிய துவங்கியது.

ராமலிங்க ராஜுவும், அவரைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான பங்குகளை, பல நிதி, வங்கி நிறுவனங்களில் ஈடாக வைத்து கடன் வாங்கி இருந்தனர். இந்த நிதி நிறுவனங்கள், அவற்றின் வசம் ஈடாக இருந்த பங்குகளை விற்க ஆரம்பித்தன. இதனால் மேலும் பங்கு விலை சரிந்தது.

அத்துடன் சத்யம் கம்ப்யூட்டரில், ராமலிங்க ராஜு வசம் இருந்த பங்குகளின் அளவும் 26 விழுக்காட்டில் இருந்து 3 விழுக்காடாக குறைந்தது.

இந்நிலையில் நேற்று ராமலிங்க ராஜு செபி, மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை, நியுயார்க் பங்குச் சந்தை, இதன் இயக்குநர்களுக்கு எழுதியுள்ள 5 பக்க கடிதத்தில், ரூ.7 ஆயிரம் கோடி முறைகேடு பற்றி விளக்கியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil