புது டெல்லி: பிஸ்கட்டிற்கு விதிக்கப்படும் வாட் வரியை 4 விழுக்காடாக (மதிப்பு கூட்டு வரி) குறைக்க வேண்டும் என்று பிஸ்கட் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது பிஸ்கட்டிற்கு 12.4 விழுக்காடு வாட் வரி விதிக்கப்படுகிறது.
இந்திய பிஸ்கட் உற்பத்தியாளர்கள் சங்க [Indian Biscuit Manufacturrers Association (IBMA)] தலைவர் பி.பி.அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்ற வருடத்திற்கு முந்தைய ஆண்டுகளில் பிஸ்கட் தொழில் துறை 14 விழுக்காட்டிற்கும் மேல் வளர்ச்சி இல்லாமல் இருந்தது.
2007-08 ஆம் ஆண்டு 1 கிலோ அதிகபட்ச சில்லரை விலையாக ரூ.100 வரை உள்ள பிஸ்கட்டிற்கு உற்பத்தி வரி நீக்கப்பட்டது. இதனால் பிஸ்கட் தொழில் வளர்ச்சி 17 விழுக்காடாக அதிகரித்தது.
பிஸ்கட் தயாரிப்பில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தை வகிக்கிறது. இந்தியாவில் வருடத்திற்கு 19.5 லட்சம் டன் பிஸ்கட் உற்பத்தி செய்யப்படுகிறது. ( முதல் இரண்டு இடங்களில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் உள்ளன).
உணவு பதப்படுத்தும் தொழில் பிரிவில் உள்ள பிரட், சேமியா, நொறுக்கு தீனி, ஜாம், ஜெல்ில, பழரசம் ஆகியவைகளக்கு 4 விழுக்காடு வாட் வரி விதிக்கப்படுகிறது. இவைகளுக்கு சில மாநிலங்களில் வாட் வரி விதிக்கப்படுவதில்லை.
இந்நிலையில் சிகரெட், பான்மசாலா போன்றவைகளுக்கு விதிக்கப்படுவது போல், பிஸ்கட்டிற்கு 12.5 விழுக்காடு வாட் வரி விதிக்கப்படுவது வேதனையாக உள்ளது.
எங்கள் சங்கத்தின் சார்பில் சமீபத்தில் வாட் வரி விதிப்பது தொடர்பான மாநில அமைச்சர்களின் உயர்நிலை குழு தலைவரான டாக்டர் அசீம் தாஸ் குப்தாவிடம், வாட் வரியை 4 விழுக்காடாக குறைக்க கோரி மனு கொடுத்துள்ளோம்.
தற்போது வருடத்திற்கு பிஸ்கட் தொழில் துறையின் வர்த்தகம் ரூ.8 ஆயிரம் கோடியாக உள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் வருடத்திற்கு 17 விழுக்காடாக உள்ளது. வாட் வரியை குறைப்பதால் வளர்ச்சி 20 விழுக்காடாக உயர வாய்ப்பு உள்ளது.
அதே நேரத்தில் வாட் வரியை குறைப்பதால் பிஸ்கட் விற்பனை அதிகரிக்கும். இதனால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை, விற்பனை அதிகரிப்பதன் மூலம் சரிக்கட்ட முடியும் என்று அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.