புது தில்லி : என்.டி.சி (நேஷனல் டெக்ஸ்டைல்ஸ் கார்ப்பரேஷன்) கீழ் இயங்கும் ஜவுளி ஆலைகளை சீரமைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் ஈ வி கே எஸ் இளங்கோவன் மக்களவையில் தெரிவித்தார்.
இன்று மக்களவையில், கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், தொழில் மற்றும் நிதி மறுகட்டுமான வாரியமும், அமைச்சரவைக் குழுவும் அளித்த பரிந்துரையின் பேரில் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
தேசிய ஜவுளிக் கழகத்தின் நிர்வாகச் செலவுகளை கட்டுப்படுத்த, அதன் கீழ் செயல்படும் 9 கழகங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு தனி ஒரு நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை நிர்வகிக்க ஒரு நிர்வாகக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
நலிந்த நிலையில் இருக்கும், லாபம் அளிக்காத 67 ஜவுளி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. விருப்ப ஓய்வில் செல்லவிரும்பும், மூடப்பட்ட ஆலைகளின் உபரி பணியாளர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
விருப்ப ஓய்வு திட்டத்தினால், என்டிசி பணியாளர்களின் எண்ணிக்கை 12,234 ஆகக குறைக்கப்பட்டுள்ளது. விருப்ப ஓய்வு திட்டத்தால் 59,179 ஊழியர்கள் பலனடைந்துள்ளனர்.
தேசிய ஜவுளிக் கழகத்தின் கீழ் இயங்கும் 22 ஜவுளி ஆலைகளை நவீனப்படுத்த திட்டமிட்டுப்பட்டுள்ளது. இதில் 15 ஆலைகள் நவீனப்படுத்தப்பட்டு விட்டன. 16 ஆலைகளை நவீனமயமாக்கும் திட்டம் கூட்டு முயற்சி முறை மூலம் செயல்படுத்தப்படவுள்ளது என்று தெரிவித்தார்.